2019ல் ஆக்ஸ்போர்ட் பேருந்து நிறுவனம், “அரட்டைப் பேருந்து” என்றொரு திட்டத்தை துவங்கினர். உடனே அது பிரபலமானது. இப்பேருந்தில், குறிப்பிட்ட நபர்கள் விருப்பமுள்ள பிரயாணிகளோடு பேச ஏற்பாடு செய்யப்பட்டிருந்தனர். 30 சதவிகித பிரிட்டன் மக்கள், ஒரு வாரத்தில் ஒரு நாளிலாகிலும் அர்த்தமில்லா அரட்டை அடிக்காமலிருப்பதில்லை என்ற அரசாங்கத்தின் கணக்கெடுப்பிற்கேற்ப இவ்வழிமுறை அமுலாக்கப்பட்டது.

நம்மில் அநேகர், ஏற்ற சமயத்தில் பேசுவதற்கு துணை இல்லா தனிமையை அனுபவித்திருப்போம். என் வாழ்வின் மிக முக்கியமான உரையாடல்களின் மதிப்பை குறிப்பிடுகையில், கிருபை பொருந்திய உரையாடல்களே எனக்கு ஞாபகம் வருகின்றன. அத்தருணங்கள் எனக்கு மகிழ்ச்சியும், ஊக்கமும் அளித்து, ஆழமான உறவுகள் வளர உதவின.

கொலோசெய திருச்சபைக்கு பவுல் எழுதிய நிருபத்தின் முடிவில், தம் வாசகர்களை இயேசுவின் விசுவாசிகளுக்கென்று அங்கீகரிக்கப்பட்ட வாழ்க்கை முறைகளை சொல்லி ஊக்கப்படுத்துகிறார். அதில் நாம் சந்திக்கும் அனைவரிடமும் நம்முடைய பேச்சின் மூலம் அன்பை வெளிப்படுத்தும் முறைகளைக் குறிப்பிடுகிறார். “உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும்” (4:6) என எழுதுகிறார். தங்கள் உரையாடல்களில் வெறும் வார்த்தைகள் மட்டும் இடம்பெறாமல், அவ்வார்த்தைகள் கிருபை பொருந்தினவைகளாய் இருக்கவேண்டுமெனவும், அதுதான் பிறருக்கு உண்மையான ஊக்கத்தை அளிக்கும் எனவும் நினைப்பூட்டுகிறார்.

அடுத்தமுறை உங்கள் நண்பரிடமோ, சக பணியாளரிடமோ, அல்லது பேருந்திலோ, காத்திருக்கும் அறையிலோ நீங்கள் சந்திக்கும் அறிமுகமில்லாதவரிடம் ஆழமாக உரையாட வாய்ப்பு கிடைத்தால், உங்கள் இருவருக்கும் ஆசீர்வாதம் உண்டாகும்படி பேசுங்கள்.