இது அனைத்தையும் மாற்றும்
நெடுங்காலமாய், யேல் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றிய யரோஸ்லாவ் பெலிகன், தன் மிகையான கல்விபட்டங்களுக்கு பேர்பெற்றவரும், “தன் தலைமுறையில் மிகக் குறிப்பிடத்தக்க கிறிஸ்தவ வரலாற்று நிபுணர்களில்” ஒருவருமாய் திகழ்ந்தார். அவர் முப்பது புத்தகங்களுக்கு மேல் பிரசுரித்துள்ளார். மேலும், தன் மிகப்பெரிய எழுத்து சேவைக்காக வாழ்நாள் விருதான கௌரவமிக்க க்ளுக் பரிசையும் (முடரபந Pசணைந) பெற்றுள்ளார். எனினும், அவருடைய மாணவர்களில் ஒருவர், மரணப்படுக்கையில் தன் ஆசிரியர் கூறிய, “கிறிஸ்து எழுந்ததுண்டானால் வேறு எதுவுமே முக்கியமில்லை, கிறிஸ்து எழாதிருந்தால் எதற்குமே அர்த்தமில்லை” என்ற இவ்வார்த்தைகளே அவர் கூறிய மிகச்சிறந்த வார்த்தைகளாக நினைவுகூருகிறார்.
பவுலின் திட நம்பிக்கையையே பெலிக்கனும் எதிரொலித்தார், “கிறிஸ்து எழுந்திருக்கவில்லையென்றால், எங்கள் பிரசங்கமும் விருதா, உங்கள் விசுவாசமும் விருதா” (1 கொரிந்தியர் 15:14). அப்போஸ்தலன் இவ்வளவு துணிவோடு சொல்லக் காரணம், உயிர்த்தெழுதல் வெறுமனே ஒரு அற்புதம் மட்டுமல்ல; மாறாக, மனித சரித்திரத்தில் தேவ மீட்பின் செயலில் உச்சக்கட்டம் இதுவே என்று அறிந்திருந்தார். உயிர்தெழுதலின் வாக்குத்தத்தம், இயேசு மரித்தோரிடமிருந்து எழுவார் என்று அவர் அளித்த உறுதி மட்டுமல்ல, ஆனால் மரித்து, பாழான வாழ்க்கைகள், சுற்றுப்புறங்கள், உறவுகள் போன்றவைகளும் கிறிஸ்துவின் மூலமாக ஒருநாளில் திரும்ப உயிர்பெறும் என்று அவர் கொடுத்த வாக்குறுதியையும் உறுதிசெய்கிறது. உயிர்த்தெழுதல் மட்டுமில்லையென்றால், நாம் குழுப்பத்தில் சிக்கியிருப்போம் என பவுல் அறிந்திருந்தார். உயிர்த்தெழுதல் இல்லையெனில் மரணம் தான் வெற்றிபெறும்.
ஆனால், நிச்சயமாகவே “கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்தெழுந்(தார்)” (வச. 20). ஜெயம்கொண்டவராலே அழிக்கப்பட்டு, மரணமும் தோற்றது. பின்வரப்போகும் அனைத்து உயிர்தெழுதலின் “முதற்பலன்” இயேசுவே. அவர் தீமையையும், மரணத்தையும் மேற்கொண்டுவிட்டதால், நாம் இன்று விடுதலையாக தைரியமாய் வாழலாம். இதுவே அனைத்தையும் மாற்றுகிறது.
அப்படி நடந்திருக்கக்கூடாது
“எப்படியாகிலும் இது இப்படியிருக்க கூடாதென விரும்புகிறேன்,” அந்த மனிதர், வாலிப வயதிலேயே மரித்த தன் நண்பனின் இரங்கல் கூட்டத்தில் இப்படி புலம்பினார். மானுடத்தின் காலவரையற்ற மனவேதனையின் கடுமை அவர் வார்த்தைகளிலிருந்தது. மரணம் நம் எல்லாரையும் திகைப்பூட்டும், அச்சுறுத்தும். மாற்ற முடியாததை, மாற்ற முயற்சித்து நாம் வேதனையடைகிறோம்.
இயேசுவின் மரணத்திற்குப்பின் “அப்படி நடந்திருக்கக்கூடாது” என்று சீஷர்கள் கருதியிருக்கக்கூடும். அக்கொடுமையான மணித்துளிகளை பற்றி சுவிசேஷங்கள் கொஞ்சமே சொன்னாலும், சில உண்மையான நண்பர்களின் அப்போதைய செயல்களை பதிவுசெய்துள்ளது.
யோசேப்பு, இயேசுவின் ரகசிய விசுவாசியான மதத்தலைவர் (யோவான் 19:38), திடீரென தைரியங்கொண்டு, பிலாத்துவிடம் இயேசுவின் உடலைக் கேட்கிறார் (லூக்கா 23:52). கொடூரமாய் சிலுவையேறிய ஒரு உடலை எடுத்து பதமாக அதை அடக்கம் செய்ய எவ்வாறு ஆயத்தம் செய்திருப்பாரென்று (வச. 53) சற்றே சிந்தியுங்கள்! பாதையெங்கிலும் இயேசுவின் ஒவ்வொரு அடியையும் பின்தொடர்ந்து, அவர் கல்லறை வரையிலுங்கூட வந்த பெண்களின் பக்தியையும், வீரத்தையும் எண்ணிப்பாருங்கள் (வச. 55). மரணமேயானாலும் மாறா அன்பு!
இந்த பின்பற்றுபவர்களின் கூட்டம் உயிர்த்தெழுதலை எதிர்நோக்கவில்லை. அவர்கள் வேதனையில் பங்குபெற உடன்பட்டவர்கள். நம்பிக்கையின்றி, துயரத்தோடு அந்த அதிகாரம் நிறைவடைகிறது, “திரும்பிப்போய், கந்தவர்க்கங்களையும் பரிமளதைலங்களையும் ஆயத்தம்பண்ணி, கற்பனையின்படியே ஓய்வுநாளில் ஓய்ந்திருந்தார்கள்” (வச. 56).
சரித்திரத்தின் வியத்தகு சம்பவத்திற்கு, அந்த ஓய்வுநாளின் இடைவேளை காரியங்களை தயார் செய்துகொண்டிருந்ததை அவர்கள் அறியவில்லை. கற்பனைச்செய்ய முடியாததை இயேசு செய்யப்போகிறார். அவர் மரணத்தையே “அப்படியல்ல” என மாற்றப்போகிறார்.
அவருடைய சமாதான சிலுவை
டச்சு ஓவியரான எக்பெர்ட் மோடெர்மன் வரைந்த “சிரேனே ஊரானாகிய சீமோன்”என்ற ஓவியத்தில் அவர் கண்கள் துயரத்தால் பிதுங்கியிருந்தன. சீமோனின் கண்கள் உடலளவிலும், மனதளவிலும் அவர் சுமந்த பொறுப்பின் தீவிர பாரத்தை வெளிப்படுத்தின. மாற்கு 15ம் அதிகாரத்தில், வேடிக்கைப் பார்த்த கூட்டத்திலிருந்து சீமோன் இழுக்கப்பட்டு, இயேசுவின் சிலுவையை சுமக்க கட்டாயப்படுத்தப்பட்டதை அறியலாம்.
சீமோன், சிரேனே ஊரைச் சேர்ந்தவர் என மாற்கு நமக்கு அறிவிக்கிறார். அது இயேசுவின் காலத்தில் யூதர்கள் அதிகம் வசித்த வட ஆப்பிரிக்காவின் பெரிய நகரம். சீமோன் பஸ்கா பண்டிகையைக் கொண்டாட எருசலேமுக்கு வந்திருக்கலாம். அங்கே இந்த அநீதியான மரணதண்டனை நிகழ்வில் தானும் எதிர்பாராமல் பங்கேற்க, இயேசுவுக்கு சிறிய ஆனால் அர்த்தம் நிறைந்த உதவியை அவரால் செய்ய முடிந்தது (மாற்கு 15:21).
முன்னதாக மாற்குவின் சுவிசேஷத்தில், இயேசு தம் பின் செல்பவர்களிடம், “ஒருவன் என் பின்னே வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்” (8:34) என்றார். இயேசு தம் சீஷர்களிடம் அடையாளமாகச் சொன்னதை, கொல்கொதாவின் வீதிகளில் சீமோன் நிஜமாகவே செய்கிறார்: தனக்களிக்கப்பட்ட சிலுவையை எடுத்து, இயேசுவுக்காக அதை சுமந்தார்.
நாமும் சுமக்கவேண்டிய “சிலுவைகள்” உண்டு. அது நோயாக இருக்கலாம், கடினமான ஊழிய பணியாயிருக்கலாம்; நாம் நேசித்தவரின் மரணமாயிருக்கலாம்; அல்லது நம் விசுவாசத்தினிமித்தம் வரும் உபத்திரவமாய் இருக்கலாம். நாம் இத்துன்பங்களை விசுவாசத்தில் சுமக்கையில், நாம் ஜனங்களை இயேசுவின் துயரங்களுக்கு நேராகவும், அவர் சிலுவை தியாகத்திற்கு நேராகவும் வழிநடத்துகிறோம். அவருடைய சிலுவையே நம்மை தேவனோடு ஒப்புரவாக்கி, நம்முடைய பயணத்தில் நம்மை பெலப்படுத்துகிறது.
அது இரவாயிருந்தது
எலி விஸேல் என்பவரின் “இரவு" என்ற நாவல், இனப்படுகொலையின் பயங்கரங்களால் நம்மை அச்சுறுத்துகிறது. நாசிப்படைகளின் மரண முகாம்களில் ஏற்பட்ட சொந்த அனுபவங்களை தழுவின இந்நாவலில், வேதாகமத்தின் யாத்திராகம புத்தகத்தின் சம்பவங்களை விஸேல் நேர்மாறாக ஒப்பிட்டுள்ளார். மோசேயும், இஸ்ரவேலர்களும் முதல் பஸ்காவிற்கு பின் அடிமைத்தனத்திலிருந்து தப்பினர் (யாத்திராகமம் 12). ஆனால் இங்கே பஸ்காவிற்கு பின்னர் நாசிகள் யூத தலைவர்களை கைது செய்தனர் என்று விஸேல் கூறுகிறார்.
விஸேலின் முரண்பாட்டை நாம் விமர்சிக்கும் முன், வேதாகமத்தின் அதேபோன்ற திருப்பம் நிறைந்த சம்பவம் ஒன்றுள்ளது. பஸ்காவின் இரவில், தேவ ஜனங்கள் தம் துன்பங்களிலிருந்து விடுவிக்க எதிர்பார்க்கப்பட்ட இயேசு, அவர்களின் எதிர்பார்ப்பிற்கு மாறாக, தன்னை கொல்லக்கூடியவர்கள் தம்மை கைதுசெய்ய அனுமதிக்கிறார்.
இயேசு கைதாவதற்கு முன்னான புனித சம்பவத்திற்கு யோவான் நம்மை அழைத்துச் செல்கிறார். தனக்கு முன்பாக இருந்ததைக் குறித்து “ஆவியில் கலங்கினவராக,” அக்கடைசி இரவு போஜனத்தில் தாம் காட்டிக்கொடுக்கப்படப் போகிறதை இயேசு முன்னறிவித்தார் (யோவான் 13:21). பின்னர், நம்மால் புரிந்துகொள்ளவே முடியாத செயலாக, தன்னை காட்டிக்கொடுக்க போகிறவனுக்கே அப்பத்தை பரிமாறினார். “அவன் அந்தத் துணிக்கையை வாங்கினவுடனே புறப்பட்டுப்போனான்; அப்பொழுது இராக்காலமாயிருந்தது" (வச. 30) என்று அச்சம்பவம் சொல்கிறது. சரித்திரத்தின் மாபெரும் அநீதி ஆரம்பமானது, இருந்தபோதிலும் இயேசு, “இப்பொழுது மனுஷகுமாரன் மகிமைப்படுகிறார், தேவனும் அவரில் மகிமைப்படுகிறார்” (வச. 31) என அறிவித்தார். சில மணிநேரங்களில், சீஷர்கள் பீதியுற்று, தோல்வியையும், நிராகரிப்பையும் அனுபவிக்கப் போகிறார்கள். ஆனால் இயேசுவோ தேவத் திட்டம் அப்படியே செயல்படுவதைப் பார்க்கிறார்.
அந்தகாரம் சூழ்வதைப்போல தோன்றினாலும், தேவன் தம் இருண்ட இரவை எதிர்கொண்டு வெற்றிபெற்றதை நாம் நினைவுகூரலாம். அவர் நம்மோடு வருகிறார். இரவு நீளாது.
அன்பால் சுமக்கப்படுதல்
என் நான்கு வயது பேரன், என் மடியில் அமர்ந்து என் வழுக்கை தலையை மெல்ல தட்டியவாறே, ஏதோ ஆராய்ந்தான். “தாத்தா உங்கள் முடிக்கு என்னானது?” எனக் கேட்டான். நான் சிரித்தவாறே, “ஓ அதுவா, காலப்போக்கில் அது கொட்டிவிட்டது” என்றேன். எதையோ சிந்தித்தவனாய், “அது பரவாயில்லை, நான் என் முடியில் கொஞ்சத்தை உங்களுக்குத் தருகிறேன்” என்றான்.
அவன் மனதுருகத்தை எண்ணி புன்னகைத்தவாறே அவனை இறுக்கி அணைத்தேன். அந்த சந்தோஷ தருவாயில் அவன் என்மேல் கொண்ட அன்பை தேவனின் தன்னலமில்லா, உதாரத்துவமான அன்பின் பிரதிபலிப்பாக யோசிக்க ஆரம்பித்தேன்.
ஜி.கே. செஸ்டர்டன், “நாம் பாவம் செய்து வயதுசென்றவர்களானோம், ஆனால் நம் தகப்பன் நம்மை விட இளமையாகவே இருக்கிறார்” என்றெழுதினார். இதன் பொருள் “நீண்ட ஆயுசுள்ளவர்” (தானியேல் 7:9) பாவத்தினால் கறைபடாமல் இருக்கிறார் என்கிறார். தேவன் காலங்களுக்கு அப்பாற்பட்டவர். மேலும் தடுமாற்றமில்லாத நிலையான அன்பினால் நம்மை நேசிக்கிறவர். “உங்கள் முதிர்வயதுவரைக்கும் நான் அப்படிச் செய்வேன்; நரைவயதுமட்டும் நான் உங்களைத் தாங்குவேன்; நான் அப்படிச் செய்து வந்தேன்; இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன்" என்று ஏசாயா 46இல் தம் ஜனங்களுக்கு அவர் அருளிய வாக்கை நிறைவேற்ற அவர் போதுமானவரும், பூரண சித்தமுள்ளவராகவும் உள்ளார் (வச. 4).
ஐந்து வசனங்கள் தள்ளி அவர், “நானே தேவன், எனக்குச் சமானமில்லை” (வச. 9) என விளக்குகிறார். இருக்கிறவராகவே இருக்கிறேன் (யாத்திராகமம் 3:14) என்பவர் நம்மை மிக ஆழமாக நேசிக்கிறார். எனவே கடைசி எல்லையான சிலுவை மரணம் வரைச்சென்று, நம் பாவத்தின் முழுச்சுமையையும் சுமந்தார். இதனால் நாம் அவரிடமாய் திரும்பி, நம் பாரங்கள் நீங்கி அவரை சதாகாலமும் நன்றியோடு ஆராதிக்கலாம்.