சிறுநரிகள்
விமானி தன் தேநீர் கோப்பையை அதின் இருக்கையில் வைக்க முடியவில்லை. எனவே அதை கட்டுப்பாட்டின் பகுதியில், நடுவிலே வைத்தார். விமானம் சற்று தடுமாறியபோது, தேநீர் கோப்பை கவிழ்ந்து, அதிலிருந்த தேநீர் கட்டுப்பாட்டு பலகையில் சிந்தி, இயந்திரத்தை பழுதடையச் செய்தது. விமானம் சற்று தடுமாறி, கடைசியில் தரையிறக்கப்பட்டது. அதேபோன்ற ஒரு சம்பவம் வேறொரு விமானத்திற்கு ஏற்பட்ட பின்னர், அந்த விமானத்தின் கட்டமைப்பாளர்கள் பிரச்சனை என்ன என்பதை உணர்ந்தனர். 30கோடி விலைமதிப்புள்ள விமானத்தில் தேநீர் கோப்பை வைக்கும் இருக்கை சிறியதாக இருந்தது. இந்த சிறிய தவறானது பெரிய பிரச்சனைகளுக்கு மூலகாரணமாய் அமைந்தது.
சிறிய விஷயங்கள் சிலவேளைகளில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். எனவே, உன்னதப்பாட்டின் நேசர் தன்னுடைய ரூபவதியைப் பார்த்து, “திராட்சத் தோட்டங்களைக் கெடுக்கிற குழிநரிகளையும் சிறுநரிகளையும் நமக்குப் பிடியுங்கள்” (2:15) என்று கூறுகிறார். திராட்சைப் பழங்களுக்கு ஆசைப்படும் நரிகள் திராட்சைத் தோட்டத்தின் மதில்கள் மேல் ஏறியும், குழிதோண்டுவதையும் அவர் பார்க்கிறார். அவைகளை தேடிப்பிடிப்பது மிகவும் கடினம். அவைகள் இரவு வேளைகளில் ஊடுருவுகின்றது. அவைகளை இலகுவாய் எடுத்துக்கொள்ளக் கூடாது.
உங்களுடைய நெருங்கிய உறவுகளை எது அச்சுறுத்துகிறது? அது, பெரும்பாலும் பெரிய காரியமாய் இருக்காது. ஒரு சிறுவார்த்தையோ, விமர்சனமோ நம்முடைய அன்பின் வேருக்குள் ஊடுருவலாம். அவ்வப்போது ஏற்படும் சிற்சில தவறுகள் ஒன்றாகச் சேர்ந்து, ஒரு நல்ல, ஆழமான சிநேகத்தையோ அல்லது திருமண உறவையோ முற்றிலும் பாதிக்கும்.
அந்த சிறுநரிகளை பிடிப்பதற்கு தேவன் நமக்கு உதவி செய்வாராக! நம்முடைய திராட்சைத் தோட்டங்களை பலப்படுத்த தேவையான மன்னிப்பை கேட்பதற்கோ அல்லது கொடுப்பதற்கோ தயங்காமல் செயல்படுவோம். நமக்கு தேவையானதை தேவன் நமக்கு அருளுவாராக!
நமக்காக ஸ்தலத்தை ஆயத்தப்படுத்துதல்
எங்கள் வீட்டிற்கு ஒரு நாய்க்குட்டியை வாங்க நாங்கள் தீர்மானித்தோம். என் பதினோரு வயது மகள், நாய்கள் என்ன சாப்பிடும் என்று அதின் வாழ்க்கை முறையைக் குறித்து மாதக்கணக்கில் ஆராய்ந்தாள்.
நாய்க்குட்டியை அதற்கென ஒரு தனியறையில் வளர்த்தால், அது சிறப்பாக செயல்படும் என்று அவள் சொன்னாள். ஆகையால், நாங்கள் அதற்கென ஒரு படுக்கையறையை ஆயத்தப்படுத்தினோம். அந்த நாய்க்குட்டியை வளர்க்கும்போது, ஆச்சரியங்கள் நிறைய காத்திருக்கும் என்றறிவோம். ஆனால், அதை வளர்க்க என் மகள் ஏறெடுத்த ஆச்சரியமான முன்னேற்பாட்டுக்கு ஈடில்லை.
வரப்போகிற நாய்க்குட்டிக்காக ஆர்வமுடன் என்ன மகள் ஏறெடுத்த இந்த முன்னேற்பாடுகள், தன் ஜீவியத்தையும், வாக்குறுதிகளையும் தன் ஜனத்தோடு பகிர ஸ்தலத்தை ஆயத்தப்படுத்தி, ஏங்கிக்கொண்டிருக்கும் கிறிஸ்துவின் எண்ணத்தை எனக்கு நினைவுபடுத்தியது. பூமியில் தன்னுடைய வாழ்நாளின் கடைசிநாட்களில் இயேசு, தன்னுடைய சீஷர்களைப் பார்த்து, “தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்” (யோவான் 14:1) என்று வலியுறுத்துகிறார். மேலும், அவர்களுக்காக “ஸ்தலத்தை ஆயத்தம் பண்ணின பின்பு, (அவர்) இருக்கிற இடத்திலே (அவர்களும்) இருக்கும்படி” (வச. 3) அவர்களை சேர்த்துக்கொள்வேன் என்று வாக்குப்பண்ணுகிறார்.
சீஷர்கள் சீக்கிரமே பிரச்சனைகளை சந்திக்கப் போகிறார்கள். ஆனால், அவர்களை சுயதேசம் திரும்பச் செய்யும் முயற்சியில் கிறிஸ்து ஈடுபட்டிருக்கிறார் எனும் உண்மையை அவர்கள் நம்பும்படி செய்தார்.
புதிய நாய்க்குட்டியை எங்கள் வீட்டிற்கு வரவேற்கும் முன்னேற்பாடு முயற்சியில் என் மகளுக்கு என்னால் உதவ முடியவில்லை. ஆனால் அதை நான் ரசித்தேன். அதேபோன்று, நமக்காய் ஒரு ஸ்தலத்தை ஆயத்தப்படுத்தி, நம்மோடு நித்திய வாழ்வை பகிர்ந்துகொள்ள நினைக்கும் நம்முடைய இரட்சகரின் ஏக்கத்தை என்னால் கற்பனை செய்ய முடிகிறது (வச.2).
நன்றி, ஆனால் வேண்டாம்!
இந்தியாவில் மனநலம் குன்றிய பிள்ளைகளுக்காய் நடத்தப்படும் கிறிஸ்தவ பள்ளியொன்றிற்கு மாநகராட்சி வாரியத்திலிருந்து பெரும் நன்கொடை அளிக்கப்பட்டது. அதில் எந்த வில்லங்கமும் இல்லை என்று அறிந்த பின்னரே, அந்த தொகையை அவர்கள் பெற்றுக்கொண்டனர். ஆனால் பின்நாளில் மாநகராட்சி வாரியம், அந்த தொகைக்கான பிரதிநிதித்துவம் கோரியது. உடனே, அந்த பள்ளியின் இயக்குனர் அந்தத் தொகையை திருப்பிக் கொடுத்துவிட்டார். பள்ளியின் கொள்கையை விட்டுக்கொடுக்க அவருக்கு மனதில்லை. “தேவனுடைய சேவையை, தேவனுடைய வழியில் செய்வது மிகவும் அவசியம்” என்று அவர் கூறுகிறார்.
நமக்கு வரும் உதவியை நிராகரிப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதில் இதுவும் ஒன்று. வேதாகமத்தில் வேறொன்றைப் பார்க்க முடியும். சிறையிருப்பிலிருந்து, யூதர்கள் மீண்டு திரும்பியதும், அவர்களுடைய ஆலயத்தைக் கட்டிக்கொள்ளும்படிக்கு கோரேசு ராஜாஅனுமதியளித்தான் (எஸ்றா 3). “உங்களோடேகூட நாங்களும் கட்டுவோம்; உங்களைப் போல நாங்களும் உங்கள் தேவனை நாடுவோம்” (4:2) என்று மற்றவர்கள் சொல்லும்போது இஸ்ரவேலின் தலைவர்கள் அதை நிராகரித்தனர். அவர்கள் ஒருவேளை அந்த உதவியை ஏற்றுக்கொண்டிருந்தால், ஆலயத்தை மீண்டும் கட்டும் முயற்சியில் தோல்வியடைந்திருப்பர். ஏனென்றால், அவர்கள் விக்கிரக ஆராதனைக்காரர்கள் என்பதினால், அவர்களின் விக்கிரக ஆராதனை உள்ளே புகுந்திருக்கக்கூடும். இஸ்ரவேலர்கள் சரியான தீர்மானத்தை எடுத்தனர். ஆகையால் எதிர்ப்பாளர்கள் ஆலயக்கட்டுமானப் பணியை தங்களால் முடிந்த அளவிற்கு தடை செய்தனர்.
பரிசுத்த ஆவியின் துணையோடும், விசுவாசிகளின் ஞானமான ஆலோசனையோடும் நாம் பகுத்தறிந்து செயல்பட பழகலாம். ஆவிக்குரிய வாழ்க்கையை பாதிக்கக்கூடிய சிநேகிதமான வாய்ப்புகளைத் தவிர்க்கவேண்டும். ஏனென்றால் தேவனுடைய பணியை தேவனுடைய வழியில் செய்யும்போது எந்த நன்மையும் குறைவுபடாது.
எந்த சூத்திரமும் தேவையில்லை
தன்னுடைய இளம்பிராயத்தில் மேக்னாவுக்கு பிரியமான ஞாயிறு சிறுவர்பள்ளி ஆசிரியை ஒருமுறை சுவிசேஷம் அறிவித்தலைக் குறித்த பாடம் ஒன்றைக் கற்றுக் கொடுத்தார். அதில் சில வசனங்களை மனப்பாடம் செய்யும்படியாகவும், சிலயுக்திகளைக் கையாளும்படியும் சொல்லியிருந்தார். மேக்னாவும், அவளுடைய சிநேகிதியும் அந்த யுக்திகளைக் கையாண்டு மற்றொரு சிநேகிதிக்கு பயத்துடன் சுவிசேஷத்தை பகிர்ந்துகொண்டனர். ஆனால் அந்த சுவிசேஷ பகிர்வு மனமாற்றத்தில் முடிவடைந்ததாய் தெரியவில்லை. இந்த யுக்திகளை நினைவுபடுத்தி சுவிசேஷம் சொல்வது ஆக்கபூர்வமானதாய் தெரியவில்லை.
ஆனால் காலங்கள் சென்று தற்போது மேக்னாவும், அவளது கணவனும் தேவனை நேசிப்பதற்கும் சுவிசேஷத்தைப் பகிர்வதற்கும் தங்கள் பிள்ளைகளுக்கு முன்மாதிரியாய் செயல்படுகின்றனர். தங்கள் பிள்ளைகளுக்கு தேவனைக் குறித்தும், வேதத்தைக் குறித்தும், இயேசுவுடனான தனிப்பட்ட வாழ்க்கையைக் குறித்தும் போதிப்பது அவசியம் என்று அறிந்திருந்தார்கள். ஆனால் அதை அன்றாட வாழ்க்கையின் மூலமும், தேவனுடைய அன்பையும், வேதத்தையும் நடைமுறைப்படுத்துவதின் மூலமும் போதித்தனர். “நீங்கள் உலகத்திற்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்” (மத்தேயு 5:14) என்றால் என்ன என்பதையும் மற்றவர்களை தயவான வார்த்தையின் மூலம் அணுகுவது எப்படி என்பதையும் வாழ்ந்து காண்பித்து நிரூபித்தனர். “நாம் கடைபிடிக்காவிடில் ஜீவனுக்கேதுவான வார்த்தைகளை போதிக்க முடியாது” என்று மேக்னா கூறுகிறார். தங்களுடைய வாழ்க்கையில் தயவையும், இரக்கத்தையும் காண்பித்து மற்றவர்களை தங்களுடைய நம்பிக்கைக்குள்ளாக ஈர்ப்பதற்கு தங்கள் பிள்ளைகளை ஆயத்தப்படுத்துகின்றனர்.
மற்றவர்களை இயேசுவிடம் நடத்துவதற்கு நமக்கு பிரத்யேகமான யுக்திகள் தேவையில்லை. நம்மை நெருக்கி ஏவி, நம் மூலமாய் பிரகாசிக்கும் தேவ அன்பே முக்கியம். நாம் வாழ்ந்து, அவருடைய அன்பை பிரதிபலிக்கும்போது, அவரை அறிகிற அறிவிற்குள்ளாய் தேவன் மற்றவர்களை நம் மூலம் கொண்டுவரச் செய்வார்.
நீதியும் கிறிஸ்துவும்
ரோம் தேசத்தின் முதல் பேரரசர் அகுஸ்து ராயன் (கி.மு.63- கி.பி. 14). இவர் சட்ட ஒழுங்கின் ஆட்சியாளராய் தன்னை ஸ்தாபித்துக்கொள்ள எண்ணியவர். அடிமைத்தனம், இராணுவ அடக்குமறை, இலஞ்சம் போன்றவற்றின் மீது தன் ஆட்சியை ஸ்தாபித்தாலும், ஓரளவுக்கு நீதி வழங்கும் முறையை சீரமைத்து, தன் குடிமக்களுக்கு லஸ்டீசியா என்னும் நீதிதெய்வத்தை அறிமுகப்படுத்தினான். தற்போது நீதிமன்றங்களில் நீதிதேவதை என்று குறிப்பிடப்படுவது இதுதான். மேலும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட, பூமியின் எல்லைகள் பரியந்தம் மகிமைப்படப் போகிற உலக இரட்சகரின் பிறப்பு சம்பவம் (மீகா 5:2-4) நிகழுவதற்கு மரியாளும், யோசேப்பும் பெத்லகேமுக்கு வர காரணமாயிருந்த ஜனத்தொகை கணக்கெடுப்பை கட்டளையிட்டவர் இவரே.
ஆனால் இந்த ராஜா, மெய்யான நீதியை நிலை நாட்டுவதற்காய் வாழ்ந்து தன்னுடைய ஜீவனையும் கொடுப்பார் என்பதை அகுஸ்துராயனும், உலகமும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. நூற்றாண்டுகளுக்கு முன்பதாய் மீகா தீர்க்கதரிசியின் நாட்களில், தேவனுடைய ஜனம் பொய், கலகம், மற்றும் “துன்மார்க்கத்தினால் சம்பாதித்த பொக்கிஷங்கள்” (6:10-12) ஆகியவைகளினால் வழி விலகியிருந்தனர். தேவனுக்கு பிரியமான தேசம் அவரைப் பொருட்படுத்தவில்லை. அவர்களின் கிரியைகளின் தன்மையை அவர்களுக்கு உணர்த்தி, அவருடன் தாழ்மையாய் நடக்கவேண்டும் என்று தேவன் ஏங்கினார் (வச.8).
காயப்பட்ட, மறக்கப்பட்ட, மற்றும் ஆதரவற்ற மக்கள் எதிர்பார்த்திருந்த நியாயத்தை அவர்களுக்கு இந்த பணிவிடையாளனான ராஜா காண்பித்தார். தேவனுக்கும் மனிதனுக்குமிடையிலும், மனிதனுக்கும் சக மனிதனுக்குமிடையிலும், உள்ள சரியான உறவை பார்ப்பதற்கு மீகாவின் தீர்க்கதரிசனம், இயேசு கிறிஸ்துவில் நிறைவேற வேண்டியிருந்தது. அது அகுஸ்து ராயனுடைய சட்ட ஓழுங்கு ஆதிக்கத்தினால் சாத்தியமல்ல, மாறாக, இரக்கம், தயவு, மற்றும் பணிவிடையாளனான ராஜாவாம் இயேசுவின் ஆவியினால் உண்டாகும் விடுதலையில் மட்டுமே அது சாத்தியமாகிறது.