கொரோனா வைரஸ் உலகமெங்கிலும் பரவிக்கொண்டிருக்கும்போது, அதின் பரவலை கட்டுப்படுத்துவதற்காக மக்களிடையே இடைவெளியை கடைபிடிக்கும்படிக்கு சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். அநேக நாடுகள் மக்கள் தங்களை சுயதனிமைப்படுத்திக்கொள்ளுதலை கடைபிடிக்கும்படி அறிவுறுத்துகிறது. ஒருபுறம் அலுவலகங்கள் முடிந்தவரை தங்கள் அலுவலர்களை வீடுகளிலிருந்து வேலைசெய்யும்படிக்கு உற்சாகப்படுத்த, மறுபுறம் பலர் வேலைகளை இழந்து பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். நானும் என்னுடைய சபை ஆராதனைகளிலும் பராமரிப்புக் குழுக்களிலும் ஆன்லைன் மூலமாகவே கலந்துகொள்ள நேர்ந்தது. சரீரப்பிரகாரமாக ஒன்று கூடுவதைத் தவிர்த்து, தற்போது உலகம் ஒன்றுகூடுவதற்கு புதிய முறையை தத்தெடுத்துக்கொண்டுள்ளது. 

இணையதளம் நம்மிடையே ஐக்கிய சிந்தையை ஏற்படுத்துவதில்லை. நாமெல்லாரும் தேவனுடைய சரீரத்தின் அங்கத்தினர்களாய் ஆவியில் இணைக்கப்பட்டுள்ளோம். கொலோசெயருக்கு எழுதிய நிருபத்தில் நூற்றாண்டுகளுக்கு முன்னதாகவே பவுல் இக்கருத்தை பதிவுசெய்துள்ளார். அந்த சபை அவரால் ஸ்தாபிக்கப்படவில்லை என்றாலும், அவர்களைக் குறித்தும் அவர்களின் விசுவாசத்தைக் குறித்தும் பவுல் தன் ஆழமான அக்கறையை வெளிப்படுத்தினார். பவுல் அவர்கள் மத்தியில் இருக்கமுடியவில்லை என்றாலும், “ஆவியின்படி உங்களுடனேகூட” இருக்கிறேன் என்று அவர்களுக்கு நினைவுபடுத்துகிறார் (கொலோசெயர் 2:5). 

நம்முடைய பொருளாதார, சுகாதார மற்றும் பல நடைமுறைத் தேவைகளுக்காக நாம் நேசிக்கிறவர்களோடு எல்லாவேளைகளிலும் சரீரப்பிரகாரமாய் இருக்கமுடியாது. தொழில்நுட்பம் அந்த இடைவெளியை பூர்த்திசெய்யும். கிறிஸ்துவின் சரீரத்தின் அவயங்களாய் நாம் நம்மை பார்க்கும்போது, கண்ணிற்கு புலப்படாத ஒரு ஐக்கியத்திற்கு நாம் உட்படுத்தப்படுகிறோம் (1 கொரி. 12:27). அத்தகைய தருணங்களில், நாமும் பவுலைப்போல, ஒவ்வொருவருடைய விசுவாச உறுதியினாலும், ஜெபத்தினாலும் “கிறிஸ்துவுக்கும் உரிய இரகசியத்தை அறிந்துகொள்(ள)” உற்சாகப்படுத்தப்படுகிறோம் (கொலோ. 2:2).