ஆப்பிரிக்காவின் அந்த பெரிய திருச்சபையின் போதகர் முழங்கால் படியிட்டு தேவனிடத்தில் ஜெபித்தார். “எங்களை நினைத்தருளும்” என்று அவர் கதற, “கர்த்தாவே எங்களை நினைத்தருளும்” என்று கூடியிருந்த அனைவரும் கதறினார்கள். அந்த காட்சியை யூடியூபில் பார்த்த நான் ஆச்சரியப்பட்டு கண்ணீர் சிந்தினேன். அந்த ஜெபம் சில மாதங்களுக்கு முன்பாக பதிவுசெய்யப்பட்ட ஒன்று. ஆனாலும் என்னுடைய சிறுவயதில் என்னுடைய போதகர் “கர்த்தாவே எங்களை நினைத்தருளும்” என்று அதே ஜெபத்தை ஏறெடுத்ததை அது எனக்கு நினைவுபடுத்தியது.

ஒரு சிறுபிள்ளையாய் அந்த ஜெபத்தைக் கேட்ட நான், தேவன் சிலவேளைகளில் நம்மை மறந்துவிடுவார் என்று தவறாய் எண்ணிக்கொண்டேன். ஆனால் தேவன் எல்லாம் அறிந்தவர் (சங்கீதம் 147:5; 1 யோவான் 3:20), அவர் எப்போதும் நம்மை பார்த்துக்கொண்டிருக்கிறார் (சங்கீதம் 33:13-15), எல்லாவற்றிற்கும் மேலாக அவர் நம்மை நேசிக்கிறார் (எபேசியர் 3:17-19). 

நினைவுகூருதல் என்பதற்கு பயன்படுத்தப்படும் எபிரெய வார்த்தையான “ஸாகர்” என்ற வார்த்தையானது, தேவன் நம்மை நினைவுகூரும்போது அவர் நமக்காக செயல்படுகிறார் என்று பொருள்படுகிறது. ஒருவரின் சார்பில் நின்று செயல்படுதல் என்றும் அர்த்தம் கொடுக்கிறது. “தேவன் நோவாவையும், அவனுடனே பேழையிலிருந்த சகல காட்டு மிருகங்களையும், சகல நாட்டு மிருகங்களையும் நினைத்தருளினார்; பூமியின்மேல் காற்றை வீசப்பண்ணினார், அப்பொழுது ஜலம் அமர்ந்தது” (ஆதியாகமம் 8:1). மலடியாயிருந்த ராகேலை தேவன் நினைத்தருளியபோது, “அவளுக்குத் தேவன் செவிகொடுத்து, அவள் கர்ப்பந்தரிக்கும்படி செய்தார். அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனை” பெற்றாள் (30:22-23).

நம்மை நினைத்தருளும்படிக்கு தேவனிடத்தில் கேட்பது மேன்மையான ஒரு விண்ணப்பம். அவர் எப்படி பதிலளிக்கவேண்டும் என்று அவரே தீர்மானிப்பார். நம்முடைய தாழ்மையான விண்ணப்பம் நிச்சயமாய் தேவனை அசைக்கும் என்று அறிந்து நாம் ஜெபிக்கலாம்.