2000ஆம் ஆண்டு ஜியா ஹைக்சியா தன்னுடைய பார்வையை இழந்தான். அவனுடைய நண்பன் ஜியா வெங்கி தான் குழந்தையாயிருக்கும்போது அவனுடைய கைகளை இழந்தான். ஆனால் அவர்களின் ஊனத்தை மேற்கொள்ளும் வழியை அவர்கள் கண்டுபிடித்தனர். “நான் அவனுடைய கைகள், அவன் என்னுடைய கண்கள்” என்று ஹைக்சியா சொல்லுகிறான். இருவரும் இணைந்து சீனாவிலுள்ள அவர்களுடைய சிறிய கிராமத்தையே மாற்றத்திற்குள்ளாக்கினர்.
2002ஆம் ஆண்டிலிருந்து இந்த நண்பர்கள் இருவரும் தங்கள் வீட்டின் அருகாமையிலிருக்கும் தரிசு நிலத்தை புதுப்பிக்க பிரயாசப்பட்டனர். ஒவ்வொரு நாளும் ஹைக்சியா, வெங்கியின் முதுகில் ஏறிக்கொண்டு இருவரும் ஆற்றைக் கடந்து செல்வர். பிறகு வெங்கி, ஹைக்சியாவின் கரத்தில் ஒரு பள்ளம்தோண்டும் கருவியைக் கொடுத்து, அவன் தோண்ட தோண்ட அந்த குழியில் இவன் மரத்தை நடுவது வழக்கம். ஒருவர் குழிதோண்ட, மற்றவர் அதில் மரக்கன்றை நட, இருவரும் இணைந்து 10,000க்கும் மேற்பட்ட மரங்களை நட்டிருக்கின்றனர். “நாங்கள் இணைந்து வேலை செய்யும்போது, நாங்கள் ஊனமுற்றவர்களாய் ஒருபோதும் எண்ணியதில்லை” என்று ஹைக்சியா கூறுகிறான். “நாங்கள் குழுவாய் செயல்படுகிறோம்.”
பவுல் அப்போஸ்தலர் திருச்சபையை சரீரமாய் ஒப்பிடுகிறார். அதின் ஒவ்வொரு அவயத்திற்கும் மற்ற அவயத்தின் உதவி தேவை. திருச்சபை முழுவதும் கண்களாயிருந்தால், அங்கு எதுவும் கேட்காது. எல்லா அவயங்களும் காதுகளாய் இருந்தால், அங்கு வாசனை இருக்காது (1 கொரி. 12:14-17). “கண்ணானது கையைப்பார்த்து: நீ எனக்கு வேண்டுவதில்லையென்று… சொல்லக்கூடாது” என்று பவுல் சொல்லுகிறார் (வச. 21). அவரவருடைய ஆவிக்குரிய வரங்களுக்கேற்ப ஒவ்வொருவரும் திருச்சபையில் பங்கேற்கிறோம் (வச. 7-11,18). ஜியா ஹைக்சியா மற்றும் வெங்கியைப் போல நாமும் நம்முடைய பலத்தை இணைத்தால், உலகத்திற்கு ஒரு மாற்றத்தைக் கொண்டுவரலாம்.
ஒரு புறம்போக்கு நிலத்தை சீர்செய்ய இருவர் தங்களுடைய திறமைகளை ஒன்றுசேர்த்தனர். இது செயல்படும் திருச்சபையை விளக்கும் என்ன அருமையான ஒரு உருவகம்.
உங்களுடைய ஆவிக்குரிய வரத்தைக் கொண்டு கிறிஸ்துவின் சரீரமாகிய திருச்சபையில் என்ன பங்கு வகிக்கலாம்? மற்றவர்களோடு இணைந்து இந்த ஊழியத்தை எப்படி நிறைவேற்றப்போகிறீர்கள்?
பரிசுத்த ஆவியானவரே, எனக்கு ஆவிக்குரிய வரங்களைக்கொடுத்து, சபையாகிய சரீரத்தில் என்னை சரியான இடத்தில் பொருத்தியதற்காக நன்றி.