பழைய புத்தகக்கடையொன்றில் நான் புத்தகங்களை பார்வையிடுவதை நிறுத்தியபின்பு, அந்த கடையின் முதலாளி வந்தார். அவரிடத்தில் இருக்கும் புத்தகங்களின் தலைப்புகளைக் குறித்து நாங்கள் விவாதித்துக்கொண்டிருக்கும்போது, அவர் சத்தியத்தைக் கேட்க விரும்புவாரா என்று என் உள்மனதில் எண்ணிக்கொண்டேன். நான் ஆண்டவருடைய வழிநடத்துதலுக்காக மௌனமாக ஜெபித்தேன். கிறிஸ்தவ ஆசிரியர்களின் சரிதை புத்தகங்களைக் குறித்து விவாதிக்கும் எண்ணம் எனக்கு உதித்தது. அதைக் குறித்து விவாதிக்கும்போது, அப்படியே தேவனைக் குறித்தும் பேசினோம். ஒரு சிறிய ஜெபம் எங்களுடைய விவாதத்தை ஆவிக்குரிய ரீதியில் திசைதிருப்பியதற்காக தேவனுக்கு நன்றி செலுத்தினேன். 

அர்தசஷ்டா ராஜாவின் முன் நின்று பேசுவதற்கு முன்பு நெகேமியாவும் தேவனிடம் ஜெபித்துவிட்டு போகிறான். எருசலேமின் அழிவைக் குறித்து கலக்கமடைந்திருந்த நெகேமியாவுக்கு எப்படி உதவமுடியும் என்று ராஜா கேட்கிறார். நெகேமியா ராஜாவின் வேலைக்காரனாயிருக்கிறான், ஆகையால் ராஜாவின் தயவை அவன் எதிர்பார்க்கமுடியாது. ஆனால் அவனுக்கு பெரிய தேவை ஒன்று உள்ளது. அவன் எருசலேமை மீட்க விரும்புகிறான். ஆகையால் அவன் தன்னுடைய வேலையை விட்டுவிட்டு தன் பட்டணத்தை ஸ்தாபிக்க அனுமதி கேட்பதற்கு முன்பு “பரலோகத்தின் தேவனை நோக்கி” ஜெபிக்கிறான் (நெகேமியா 2:4-5). ராஜா அதற்கு சம்மதித்து, நெகேமியாவுக்கு உதவி செய்யவும் தீர்மானித்து, அவனுடைய பயண ஏற்பாடுகளை செய்து, அவனுக்கு தேவையான மரமுட்டுகளையும் கொடுத்தனுப்புகிறார்.

“எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும்” ஜெபிக்கும்படிக்கு வேதம் நம்மை ஊக்குவிக்கிறது (எபேசியர் 6:18). நமக்கு தைரியம், சுய கட்டுப்பாடு தேவைப்படும் மற்றும் நாம் உணர்ச்சிவசப்படும் தருணங்களும் இதில் உள்ளடங்கும். நாம் பேசுவதற்கு முன்பாக ஜெபிப்பது, நம்முடைய சிந்தனையையும் வார்த்தைகளையும் தேவனுடைய கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க நமக்கு உதவுகிறது. 

உங்களுடைய வார்த்தைகளை அவர் இன்று எவ்வாறு வழிநடத்த விரும்புகிறார்? அவரைக் கேட்டு அதை கண்டறியுங்கள்!