Archives: நவம்பர் 2021

மழைக்காலம்

கோவிட் தொற்றைக் கட்டுப்படுத்தும் பொருட்டு ஏற்படுத்தப்பட்ட முயற்சிகளினால் பல சிறு வியாபாரங்கள் வெகுவாய் முடங்கியது. முதலாளிகள் தங்கள் ஊழியர்களுக்கு எப்படி சம்பளம் கொடுப்பது, வாடகையை எப்படி செலுத்துவது, இந்த இக்கட்டிலிருந்து எப்படி மீள்வது என்று கவலைப்பட்டனர். இதுபோன்ற நலிவுற்ற வியாபரிகளுக்கு ஆதரவாக, ஒரு திருச்சபையின் போதகர் அவர்களுக்கு பண உதவி செய்ய முன்வந்தார். 

மற்ற போதகர்களையும் ஊக்குவிக்க எண்ணிய அவர், “ஒருவர் மழையில் நனைந்துகொண்டிருக்கும்போது, நாம் நம்மிடத்திலுள்ள மழைக்கால நிதியை வைத்துக்கொண்டு இளைப்பாறக்கூடாது” என்று வலியுறுத்தினார்.   

மழைக்கால நிதி என்பது நம்முடைய இயல்பான வருமானம் தடைபடும் நேரத்தில் அதை சமாளிப்பதற்காக சேகரித்து வைக்கக்கூடிய நிதி. நம்முடைய தேவைகளை மனதில் வைத்து செயல்படுவது இயல்பு என்றாலும், நம்முடைய தேவையைத் தாண்டி மற்றவர்களுக்கு சேவை செய்யும் தயாள குணம் உள்ளவர்களாய் இருக்கும்படிக்கு வேதம் நம்மை ஊக்குவிக்கிறது. நீதிமொழிகள் 11, “வாரியிறைத்தும் விருத்தியடைவாரும் உண்டு... உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்; எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும்” (வச. 24-25) என்று நினைவுபடுத்துகிறது. 

இன்று உங்களுடைய வாழ்க்கையில் சூரியன் சற்று அதிகமாய் ஒளியூட்டுகிறதா? மற்றவர்களுடைய வாழ்க்கையில் மழை பெய்கிறதா என்று சுற்றிப் பாருங்கள். மற்றவர்களோடு தேவன் கொடுத்த ஆசீர்வாதங்களை பகிர்ந்துகொள்ளும்போது அவைகள் நம்முடைய வாழக்;கையில் பெருகத்துவங்கும். உதாரத்துவமாய் விரிந்த கரங்களை காண்பிப்பது, மற்றவர்களுக்கு நம்பிக்கையையும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவன் அவர்களை நேசிக்கிறார் என்னும் சத்தியத்தையும் பறைசாற்றும் மிக அழகான ஒரு வழி. 

ஆறுதல் பகிர்தல்

என்னுடைய மகள் ஹேலி என்னைப் பார்க்க வந்தாள். கல்லும் என்னும் அவளுடைய மகன் அணிந்திருந்த ஆடை சற்று வித்தியாசமாய் இருந்தது. “ஸ்க்ராட்ச் மி நாட்” என்றழைக்கப்படும் நீண்ட கையுறைகளை மட்டும் கொண்ட ஒரு வித்தியாசமான ஆடை. என்னுடைய பேரன் எக்ஸிமா என்னும் தோல் வியாதியினால் கஷ்டப்பட்டான். அதினால் அவனுடைய தோல் அடிக்கடி அரிப்பு எடுக்கக்கூடிய வகையில் கரடுமுரடாய் மாறும். இந்த ஸ்க்ராட்ச் மி நாட் ஆடை அவனை சொரிந்து காயம் ஏற்படுத்துவதிலிருந்து தடுக்கிறது என்று ஹேலி விளக்கமளித்தாள். 

ஏழு மாதங்கள் கழித்து ஹேலியின் தோல் அரிப்பெடுத்தது. அவளால் சொறியாமல் இருக்கமுடியவில்லை. இப்போதுதான் தெரிகிறது தன் மகன் எவ்வளவு கடினப்பட்டிருப்பான் என்று ஹேலி சொன்னாள். நானும் இந்த ஸ்க்ராட்ச் மி நாட் ஆடையை அணிய வேண்டும் என்று அவள் சொன்னாள். 

ஹேலியின் இந்த அனுபவம், 2 கொரிந்தியர் 1:3-5ல் “எந்த உபத்திரவத்திலாகிலும் அகப்படுகிறவர்களுக்கு நாங்கள் ஆறுதல்செய்யத் திராணியுள்ளவர்களாகும்படி, எங்களுக்கு வரும் சகல உபத்திரவங்களிலேயும் அவரே எங்களுக்கு ஆறுதல்செய்கிறவர். எப்படியெனில், கிறிஸ்துவினுடைய பாடுகள் எங்களிடத்தில் பெருகுகிறதுபோல, கிறிஸ்துவினாலே எங்களுக்கு ஆறுதலும் பெருகுகிறது” என்ற பவுலின் வார்த்தைகளை நினைவுபடுத்தியது. 

சிலவேளைகளில் தேவன் நம்மை வியாதி, இழப்பு, மற்றும் போராட்டம் போன்ற பாதைகளினூடாய் அனுமதிப்பார். நம்முடைய உபத்திரவங்களின் மூலமாய், நமக்காக மகா உபத்திரவத்தின் பாதையில் கடந்துபோன இயேசுவின் பாடுகளை தேவன் நமக்கு கற்பிக்கிறார். ஆறுதலுக்காகவும் பெலத்திற்காகவும் நாம் அவரைச் சாரும்போது, உபத்திரவத்திலுள்ளவர்களை நாமும் ஆறுதல்படுத்தவும் பலப்படுத்தவும் முடியும். நம்மை தேவன் நடத்திவந்த பாதையை மனதில் வைத்து மற்றவர்களை ஆறுதல்படுத்துவோம். 

இயேசுவுக்காக மற்றவர்களை சந்தித்தல்

பத்தாண்டுகளுக்கு முன்பு அவர்கள் இயேசுவின் நாமத்தை அறியவில்லை. பிலிப்பைன்ஸின் மைண்டானோவ் மலைப்பகுதியில் வசித்த பேண்வோன் என்ற மக்கள் கூட்டம் வெளியுலகத்தோடு அதிக தொடர்பில் இருந்ததில்லை. கரடுமுரடான அந்த மலைப்பாதையின் வழியாய் பயணித்து, அவர்களுக்கு தேவையான வாழ்வாதாரத்தை கொண்டுசேர்ப்பதற்கே இரண்டு நாட்கள் ஆகும். உலகம் அவர்களை கண்டுகொள்ளவில்லை. 

ஆனால் மிஷனரி குழுவினர் அவர்களை கண்டுபிடித்தனர். ஹெலிகாப்டரின் உதவியோடு அந்த இடத்திற்கு போக வர துவங்கினர். இது பேண்வோன் மக்களுக்கு தேவையான வாழ்வாதாரங்களையும், மருத்துவ உதவியை பெற்றுக்கொள்ளவும், உலகம் மிகவும் பெரியது என்று பார்க்கவும் அவர்களுக்கு உதவியது. அது அவர்களுக்கு இயேசுவையும் அறிமுகப்படுத்தியது. ஆவி வழிபாட்டில் ஈடுபட்டிருந்த அந்த மக்கள், இப்போது தங்களுடைய பாடல்களுக்கு புதிய வார்த்தைகளை ஏற்படுத்தி ஒன்றான மெய்தேவனை ஆராதிக்கிறார்கள். மிஷன் ஊழியம் ஒரு அழகான தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்தது.

இயேசு பரமேறிச் செல்லும்போது தன்னுடைய சீஷர்களுக்கு இந்த கட்டளையைக் கொடுக்கிறார்: “நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து..” (மத்தேயு 28:19). அந்த கட்டளை இன்றும் செயல்பாட்டில் இருக்கிறது. 

சந்திக்கப்படாத மக்கள் கூட்டங்கள் எங்கோ மலைப்பகுதிகளில் வாழ்கிறவர்கள் மட்டுமல்ல. அவர்கள் நம் மத்தியிலும் வாழுகிறார்கள். பேண்வோன் மக்கள் கூட்டத்தை சந்திப்பதற்கு அனுகூலமான வழியும், பொருளாதாரமும் தேவைப்பட்டது. அதுபோல நம்முடைய சந்திக்கப்படாத மக்களை சந்திப்பதற்கு சாதகமான வழியை கண்டுபிடிப்போம். அது நீங்கள் கண்டுகொள்ளாத உங்களுடைய அருகாமையில் வசிக்கும் உங்களுக்கு தொடர்பில்லாத நபர்களாகக் கூட இருக்கலாம். மற்றவர்களை இயேசுவுக்காக ஆதாயப்படுத்த தேவன் உங்களை எப்படி பயன்படுத்தலாம்? 

மணியை அடி

முப்பது முறை கதிர்வீச்சு சிகிச்சைக்குப் பின், ரீமா புற்றுநோயிலிருந்து விடுபட்டார். அந்த மருத்துவமனை வழக்கப்படி, புற்றுநோயிலிருந்து விடுபட்டவர்கள் அங்கிருக்கும் “புற்றுநோயில்லா மணி” என்ற ஒன்றை ஒலிக்கச் செய்து, தன்னுடைய சிகிச்சையின் முடிவையும், தன்னுடை பூரண சுகத்தையும் தெரிவிக்கவேண்டும். சுகம்பெற்ற ரீமா, தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தும்பொருட்டு மிகுந்த ஆர்வத்துடனும் அந்த மணியை தாங்கியிருந்த கயிறு அறுந்துவிழும் வரைக்கும் அந்த மணியை அடித்து தன் மிகுந்த மகிழ்ச்சியைப் பிரதிபலித்தார்.

ரீமாவின் இந்த சம்பவம் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. மேலும், தேவனின் மகத்துவமான கிரியைகளை பார்க்கும்படிக்கு இஸ்ரவேலர்களுக்கு அழைப்பு விடுக்கும் சங்கீதக்காரனின் எண்ணத்தையும் பார்க்க உதவியது. தேவன் அவர்களின் சத்துருக்களை விரட்டியடித்து தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியை தன்னுடைய ஜனமாய் ஏற்றுக்கொண்டதற்காக அவர்களை, “கைகொட்டி,” “கெம்பீரசத்தமாய் ஆர்ப்பரியுங்கள்” என்று உற்சாகப்படுத்துகிறார் (சங்கீதம் 47:1,6).

நம்முடைய வாழ்க்கையில் சரீரப்பிரகாரமான, பொருளாதார அல்லது உறவு ரீதியான குழப்பங்களுக்கு தேவன் எல்லா நேரத்திலும் உடனடியாய் தீர்வு கொடுப்பதில்லை. அதுபோன்ற சூழ்நிலைகளிலும், அவர் “தமது பரிசுத்த சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறார்” என்பதினால் அவர் துதிகளுக்கு பாத்திரரே (வச. 8). நாம் விளங்கிக்கொள்ளக் கூடிய வகையில் தேவன் நமக்கு சுகத்தைக் கொடுத்தால், அது அளவில்லாத ஒரு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். அப்போது நாம் மணியை அடித்து கொண்டாடவேண்டும் என்று அவசியமில்லை; ஆனால் ரீமா கொண்டாடியதுபோல தேவன் செய்த நன்மையைக் குறித்து நம்முடைய அளவில்லாத மகிழ்ச்சியைப் பிரதிபலிக்கலாம்.