பத்தாண்டுகளுக்கு முன்பு அவர்கள் இயேசுவின் நாமத்தை அறியவில்லை. பிலிப்பைன்ஸின் மைண்டானோவ் மலைப்பகுதியில் வசித்த பேண்வோன் என்ற மக்கள் கூட்டம் வெளியுலகத்தோடு அதிக தொடர்பில் இருந்ததில்லை. கரடுமுரடான அந்த மலைப்பாதையின் வழியாய் பயணித்து, அவர்களுக்கு தேவையான வாழ்வாதாரத்தை கொண்டுசேர்ப்பதற்கே இரண்டு நாட்கள் ஆகும். உலகம் அவர்களை கண்டுகொள்ளவில்லை. 

ஆனால் மிஷனரி குழுவினர் அவர்களை கண்டுபிடித்தனர். ஹெலிகாப்டரின் உதவியோடு அந்த இடத்திற்கு போக வர துவங்கினர். இது பேண்வோன் மக்களுக்கு தேவையான வாழ்வாதாரங்களையும், மருத்துவ உதவியை பெற்றுக்கொள்ளவும், உலகம் மிகவும் பெரியது என்று பார்க்கவும் அவர்களுக்கு உதவியது. அது அவர்களுக்கு இயேசுவையும் அறிமுகப்படுத்தியது. ஆவி வழிபாட்டில் ஈடுபட்டிருந்த அந்த மக்கள், இப்போது தங்களுடைய பாடல்களுக்கு புதிய வார்த்தைகளை ஏற்படுத்தி ஒன்றான மெய்தேவனை ஆராதிக்கிறார்கள். மிஷன் ஊழியம் ஒரு அழகான தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்தது.

இயேசு பரமேறிச் செல்லும்போது தன்னுடைய சீஷர்களுக்கு இந்த கட்டளையைக் கொடுக்கிறார்: “நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து..” (மத்தேயு 28:19). அந்த கட்டளை இன்றும் செயல்பாட்டில் இருக்கிறது. 

சந்திக்கப்படாத மக்கள் கூட்டங்கள் எங்கோ மலைப்பகுதிகளில் வாழ்கிறவர்கள் மட்டுமல்ல. அவர்கள் நம் மத்தியிலும் வாழுகிறார்கள். பேண்வோன் மக்கள் கூட்டத்தை சந்திப்பதற்கு அனுகூலமான வழியும், பொருளாதாரமும் தேவைப்பட்டது. அதுபோல நம்முடைய சந்திக்கப்படாத மக்களை சந்திப்பதற்கு சாதகமான வழியை கண்டுபிடிப்போம். அது நீங்கள் கண்டுகொள்ளாத உங்களுடைய அருகாமையில் வசிக்கும் உங்களுக்கு தொடர்பில்லாத நபர்களாகக் கூட இருக்கலாம். மற்றவர்களை இயேசுவுக்காக ஆதாயப்படுத்த தேவன் உங்களை எப்படி பயன்படுத்தலாம்?