Archives: நவம்பர் 2021

தேவனை துதித்து பாடு

சீஷத்துவ கருத்தரங்கின் வார முழுமையும் கோடையின் உஷ்ணம் எங்களை தகனித்தது. ஆனால் கடைசி நாளில் மென்மையான குளிர் காற்று வீசியது. சீதோஷண நிலையில் ஒரு மாற்றத்தை தேவன் கொண்டுவந்து ஆச்சரியத்தை நடப்பித்ததற்காக நூற்றுக்கணக்கானோர் அன்றைய ஆராதனையில் இணைந்து தேவனை மகிழ்ச்சியோடு ஆராதித்தனர். தங்கள் இருதயத்தையும், ஆத்துமாவையும், சரீரத்தையும், சிந்தையையும் முழுவதுமாய் அர்ப்பணித்து, அநேகர் விடுதலையோடு தேவனை ஆராதித்தனர். பல ஆண்டுகளுக்கு முன்பதாய் நடந்த அந்த சம்பவத்தை நினைவுகூரும்போது, தேவனை ஆராதிப்பதில் ஏற்படும் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் உணர்ந்தேன். 

தேவனை முழுமனதுடன் ஆராதிப்பதைக் குறித்து தாவீது ராஜா அறிந்திருந்தார். கர்த்தருடைய பெட்டி எருசலேமுக்குக் கொண்டுவரப்பட்டபோது இவர் ஆடிப்பாடி, ஆர்ப்பரித்து கொண்டாடினார் (1 நாளாகமம் 15:29). அவருடைய மனைவி மீகாள் அதைப் பார்த்து “அவரைத் தன் இருதயத்திலே அவமதித்தாள்” (வச. 29). ஆனால் அவளுடைய அந்த அவமதிப்பை பொருட்படுத்தாமல் தாவீது ஒன்றான மெய்தேவனை ஆராதித்தார். ஆடுவது மற்றவர்களின் பார்வைக்கு கனவீனமாய் தெரிந்தாலும், அவரைத் தேர்ந்தெடுத்து ராஜாவாக்கிய தேவனுக்கு முழுமனதோடு நன்றி சொன்னார் (2 சாமுவேல் 6:21-22ஐ காண்க). 

“அப்படி ஆரம்பித்த அந்நாளிலேதானே கர்த்தருக்குத் துதியாகப் பாடும்படி தாவீது ஆசாப்பிடத்திலும் அவன் சகோதரரிடத்திலும் கொடுத்த சங்கீதமாவது: கர்த்தரைத் துதித்து, அவருடைய நாமத்தைப் பிரஸ்தாபமாக்குங்கள்; அவருடைய செய்கைகளை ஜனங்களுக்குள்ளே பிரசித்தப்படுத்துங்கள். அவரைப் பாடி, அவரைக் கீர்த்தனம்பண்ணி, அவருடைய அதிசயங்களையெல்லாம் தியானித்துப் பேசுங்கள்” (1 நாளாகமம் 16:7-9). நம்முடைய துதியையும் பாடலையும் அவருக்கு செலுத்தி, முழுமையாய் அவரை ஆராதிப்போம். 

இயேசுவின் நாமம் தரிக்கப்பட்டவர்கள்

“மகனே, உனக்கு கொடுப்பதற்கு என்னிடத்தில் அதிகம் இல்லை. ஆனால் எனக்கு நல்ல பெயர் இருக்கிறது. அதைக் கெடுத்துவிடாதே.” கல்லூரிக்கு போகும்போது ஜெரோமின் தகப்பனார் இந்த வார்த்தைகளைச் சொன்னார். ஒரு விளையாட்டு வீரனாக மேடையில் நிற்கும்போது தனது தந்தையின் இந்த வார்த்தைகளை ஜெரோம் நினைவுகூர்ந்தான். இந்த வார்த்தைகள் ஜெரோமின் வாழ்க்கையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது என்பதற்கு ஆதாரமாய், மேடையில் தன் பேச்சை முடிக்கும்போது, தன்னுடைய மகனைப் பார்த்து, “மகனே, நம்முடைய நல்லபெயரைக் காட்டிலும் உனக்கு கொடுப்பதற்கு முக்கியமானது வேறொன்றுமில்லை” என்று சொன்னான். 

கிறிஸ்தவ விசுவாசிகளுக்கு நற்பெயர் என்பது மிகவும் முக்கியமானது. கொலோசெயர் 3:12-17ல் நாம் யாருடைய ஸ்தானாதிபதிகள் என்று பவுல் நினைவுபடுத்துகிறார் (வச. 17). குணாதிசயம் என்பது நாம் அணியும் ஆடை போன்றது. ஆனால் இந்த வேதவாக்கியம் அந்த ஆடையின் மேல் இயேசுவின் நாமத்தை எழுதுகிறது: “ஆகையால், நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு; ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். இவை எல்லாவற்றின்மேலும், பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்” (வச. 12-14). இவைகள் நம்முடைய ஞாயிற்றுக்கிழமை வஸ்திரமல்ல. இந்த வஸ்திரத்தை எல்லா வேளைகளிலும் எல்லா இடங்களிலும் அணிந்து தேவனை பிரதிபலிக்கவேண்டும். இந்த சுபாவங்கள் எல்லாவற்றையும் நம்முடைய வாழ்க்கையில் நாம் பிரதிபலித்தால், அவருடைய நாமம் நமக்கு தரிப்பிக்கப்பட்டுள்ளதை நிரூபிக்கமுடியும். 

ஜெபத்தோடும் கவனத்தோடும் அவரை நாம் பிரதிபலித்தால் நம்முடைய தேவைகளை அவர் சந்திப்பார்.

துக்கத்தின் சொற்களஞ்சியம்

மோகனும் ரேகாவும் தங்களுடைய ஒரே குழந்தையை இழந்த பின்பு, தங்களை என்னவென்று அழைத்துக்கொள்வதென்று தெரியாமல் கஷ்டப்பட்டனர். குழந்தையை இழந்த பெற்றோர்களை அழைப்பதற்கென்று ஆங்கில வார்த்தை கிடையாது. கணவனை இழந்த மனைவியை விதவை என்று கூறலாம். மனைவியை இழந்த கணவரை அழைப்பதற்கும் ஆங்கிலத்தில் வார்த்தை உண்டு. பெற்றோரை இழந்த குழந்தையையும் அநாதை என்று அழைப்பர். பிள்ளையை இழந்த இந்த பெற்றோர்கள் ஆழ்ந்த மன வேதனையில் இருந்தனர். 

கருச்சிதைவு,. குழந்தையின் திடீர் மரணம், தற்கொலை. வியாதி. விபத்து. மரணம் இந்த உலகத்திலிருந்து குழந்தைகளை இப்படி பல்வேறு விதத்தில் எடுத்துக்கொண்டு, பெற்றோர்களின் அங்கீகாரத்தைப் பறிக்கிறது. 

தேவன் தன்னுடைய ஒரேபேறான குமாரன் சிலுவையில் “பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்” (லூக்கா 23:46) என்று சொல்லும்போது இந்த ஆழ்ந்த வேதனையை புரிந்துகொண்டார். இயேசுவின் மாம்ச பிறப்பிற்கு முன்பாகவே தேவன் பிதாவாயிருந்தார்; இயேசு தன் கடைசி மூச்சை விடும் வரைக்கும் பிதாவாகவே இருந்தார். இயேசுவின் சரீரம் கல்லறையில் அடக்கம்பண்ணப்படும்போதும் தேவன் பிதாவாகவே இருந்தார். உயிர்த்தெழுந்த குமாரனுக்கு பிதாவாக தேவன் இன்னும் நிலைத்திருக்கிறார். இது பிள்ளைகளை இழந்த பெற்றோருக்கு மீண்டும் தங்களுடைய பிள்ளைகள் உயிர் வாழும் என்ற நம்பிக்கையைக் கொடுக்கிறது. 

இந்த உலகத்திற்காகத் தன்னுடைய குமாரனைக் கொடுத்த பரலோகப் பிதாவை நீங்கள் எப்படி அழைப்பீர்கள்? அவர் உனக்கும் எனக்கும் தகப்பனே. இன்னும் தகப்பனாகவே இருக்கிறார். நம்முடைய வியாகுலத்தை வெளிப்படுத்தும் துயர சொற்களஞ்சியத்தில் வார்த்தைகள் இல்லாத போதும், தேவன் நம் தகப்பனாயிருக்கிறார் ; நாம் அவருடைய பிள்ளைகளாய் இருக்கிறோம் (1 யோவான் 3:1). 

மாயையில் மகிழ்ச்சியைத் தேடுதல்

“சலிப்பு எனக்கு பிடிக்கும்” என்ற வலைப்பதிவின் உரிமையாளர் ஜேம்ஸ் வார்டு, 2010ல் “சலிப்புக் கருத்தரங்கு” என்று ஒன்றை ஒழுங்குசெய்திருந்தார். அது யாராலும் கவனிக்கப்படாத மிகவும் சாதாரணமான, ஒரு நாள் கொண்டாட்டம். இதற்கு முன்பாக, அந்த கருத்தரங்குகளில், தும்மல், வெண்டிங் இயந்திரத்தில் ஏற்படும் சத்தம் மற்றும் 1999ன் இங்க் பிரிண்டர்கள் போன்றவற்றில் ஏன் சத்தம் வருகிறது போன்ற சலிப்பான தலைப்புகள் விவாதிக்கப்பட்டது. வார்டுக்கு அவைகள் மிகவும் சலிப்பானவைகள் என்பது நன்றாய் தெரியும். ஆகையினால் அந்தக் கருத்தரங்கில், ஆர்வமூட்டக்கூடிய, அர்த்தமுள்ள, ரசிக்கக்கூடிய தலைப்புகளை தெரிந்தெடுக்கும்படி செய்தார். 

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர், அர்த்தமற்ற காரியங்களில் மகிழ்ச்சியைத் தேடும் முயற்சியில், ராஜாக்களில் ஞானியான சாலமோன் முயற்சித்தான். அவன் பெரிய வேலைகளை செய்தான், மந்தைகளை வாங்கினான், வீடுகளைக் கட்டினான், பாடகர்களை சேகரித்தான், கட்டடங்களைக் கட்டினான் (பிரசங்கி 2:4-9). இவற்றில் சில மதிப்பு மிக்கவைகள், சில மதிப்புக் குறைந்தவைகள். அவற்றில் அர்த்தத்தைத் தேட முயன்ற ராஜா, சலிப்பைத் தவிர வேறொன்றையும் பெறவில்லை (வச. 11). தேவனை சேர்த்துக்கொள்ளாமல், மனித அனுபவத்திற்கு அப்பாற்பட்ட ஓரு உலகப் பார்வையை சாலமோன் தனக்காக தேட முயன்றார். ஆனால் தேவனை நினைப்பதின் மூலமாகவும் அவரை ஆராதிப்பதின் மூலமாகவுமே மகிழ்ச்சியை கண்டுபிடிக்கமுடியும் என்ற முடிவுக்கு வருகிறார் (பிரசங்கி 12:1-7).

இந்த சலிப்பின் சூறாவளியில் சிக்கியிருக்கும் நாம், நம்முடைய சிருஷ்டிகரை நினைத்து (வச. 1), நம்முடைய சிறிய கருத்தரங்கைத் துவக்குவோம். தேவன் அதை அர்த்தமுள்ளதாய் மாற்றுவார். அவரை நினைத்து அவரையே ஆராதிக்கும்போது, சாதாரணமானவற்றில் ஆச்சரியத்தையும், வழக்கமாய் செய்வதில் நன்றியுணர்ச்சியையும், அர்த்தமற்றவைகளில் மகிழ்ச்சியையும் கர்த்தர் நமக்குக் கட்டளையிடுவார்.