சீஷத்துவ கருத்தரங்கின் வார முழுமையும் கோடையின் உஷ்ணம் எங்களை தகனித்தது. ஆனால் கடைசி நாளில் மென்மையான குளிர் காற்று வீசியது. சீதோஷண நிலையில் ஒரு மாற்றத்தை தேவன் கொண்டுவந்து ஆச்சரியத்தை நடப்பித்ததற்காக நூற்றுக்கணக்கானோர் அன்றைய ஆராதனையில் இணைந்து தேவனை மகிழ்ச்சியோடு ஆராதித்தனர். தங்கள் இருதயத்தையும், ஆத்துமாவையும், சரீரத்தையும், சிந்தையையும் முழுவதுமாய் அர்ப்பணித்து, அநேகர் விடுதலையோடு தேவனை ஆராதித்தனர். பல ஆண்டுகளுக்கு முன்பதாய் நடந்த அந்த சம்பவத்தை நினைவுகூரும்போது, தேவனை ஆராதிப்பதில் ஏற்படும் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் உணர்ந்தேன். 

தேவனை முழுமனதுடன் ஆராதிப்பதைக் குறித்து தாவீது ராஜா அறிந்திருந்தார். கர்த்தருடைய பெட்டி எருசலேமுக்குக் கொண்டுவரப்பட்டபோது இவர் ஆடிப்பாடி, ஆர்ப்பரித்து கொண்டாடினார் (1 நாளாகமம் 15:29). அவருடைய மனைவி மீகாள் அதைப் பார்த்து “அவரைத் தன் இருதயத்திலே அவமதித்தாள்” (வச. 29). ஆனால் அவளுடைய அந்த அவமதிப்பை பொருட்படுத்தாமல் தாவீது ஒன்றான மெய்தேவனை ஆராதித்தார். ஆடுவது மற்றவர்களின் பார்வைக்கு கனவீனமாய் தெரிந்தாலும், அவரைத் தேர்ந்தெடுத்து ராஜாவாக்கிய தேவனுக்கு முழுமனதோடு நன்றி சொன்னார் (2 சாமுவேல் 6:21-22ஐ காண்க). 

“அப்படி ஆரம்பித்த அந்நாளிலேதானே கர்த்தருக்குத் துதியாகப் பாடும்படி தாவீது ஆசாப்பிடத்திலும் அவன் சகோதரரிடத்திலும் கொடுத்த சங்கீதமாவது: கர்த்தரைத் துதித்து, அவருடைய நாமத்தைப் பிரஸ்தாபமாக்குங்கள்; அவருடைய செய்கைகளை ஜனங்களுக்குள்ளே பிரசித்தப்படுத்துங்கள். அவரைப் பாடி, அவரைக் கீர்த்தனம்பண்ணி, அவருடைய அதிசயங்களையெல்லாம் தியானித்துப் பேசுங்கள்” (1 நாளாகமம் 16:7-9). நம்முடைய துதியையும் பாடலையும் அவருக்கு செலுத்தி, முழுமையாய் அவரை ஆராதிப்போம்.