அதீத்தும் அவருடைய மனைவி ரேஷ்மாவும் கலைப்பொருள் அங்காடிக்கு சென்று தன் வீட்டில் மாட்டுவதற்கு ஒரு ஓவியத்தைத் தேடினர். அதீத் ஒரு சரியான ஓவியத்தை தேர்ந்தெடுத்து, ரேஷ்மாவை பார்க்கும்படிக்கு அழைத்தார். அந்த செராமிக் ஓவியத்தின் வலதுபுறத்தில் கிருபை என்ற வார்த்தை பொறிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதின் இடதுபுறத்தில் இரண்டு விரிசல்கள் ஏற்பட்டிருந்ததால், அது உடைந்திருக்கிறது என்று ரேஷ்மா அதேபோன்ற வேறொரு உடையாத ஓவியத்தைத் தேடினாள். ஆனால் அதீத் “இல்லை,” “அதில் தான் செய்தியே இருக்கிறது” என்றார். “நாம் உடைக்கப்பட்டவர்களாய் இருக்கும் தருணத்தில் தான் கிருபை நம்மை தேடிவருகிறது” என்றார். எனவே அந்த விரிசல் உள்ள ஓவியத்தையே அவர்கள் வாங்க தீர்மானித்தனர். அதற்கான தொகையை செலுத்த முயலும்போது, அந்த கடைக்காரர், “ஓ, இது உடைந்திருக்கிறது” என்று சொல்ல, ரேஷ்மா, “நாங்களும் தான்” என்று மெல்லமாய் சொன்னாள்.
“உடைக்கப்பட்டவர்கள்” என்றால் என்ன? ஒருவர் இவ்விதமாய் பதிலளிக்கிறார்: “நாம் எவ்வளவுதான் முயற்சித்தாலும், வாழ்க்கை வளமாவதற்கு பதிலாக, சரிவடைந்துகொண்டே தான் இருக்கிறது.” அது தேவன் நம்முடைய வாழ்க்கையின் தேவை என்பதையும் அவருடைய இடைபாடு நம்முடைய வாழ்க்கையில் அவசியம் என்பதையும் உணர்த்துகிறது.
“அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை” என்று பவுல் அப்போஸ்தலர் நம்முடைய உடைக்கப்படுதலை விவரிக்கிறார் (எபேசியர் 2:1). மன்னிக்கப்படுதலுக்கும் மாற்றத்திற்குமான நம்முடைய தேவைக்கு 4 மற்றும் 5ஆம் வசனம் பதிலளிக்கிறது: தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே… நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்.”
“நான் உடைக்கப்பட்டவன்” என்று அவரிடம் ஒத்துக்கொள்ளும்போது அவருடைய கிருபையினாலே நம்மை சுகமாக்க அவர் ஆயத்தமாயிருக்கிறார்.
உங்களுடைய உடைக்கப்படுதலை சரிசெய்வதற்கு எது உங்களை தேவனிடமாய் வழிநடத்தியது? உங்களுக்கு அவர் எந்த விதத்தில் தேவைப்படுகிறார்?
தேவனே, என் மீது இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் இருந்ததற்காக நன்றி! கிருபையினால் விசுவாசத்தைக் கொண்டு, உம்மிலும் உம்முடைய இரட்சிப்பிலும் நான் மேன்மைப்பாராட்ட எனக்கு உதவிசெய்யும்.