பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் தாமஸ் கார்லே தன்னுடைய எழுத்துக்களை சரிபார்க்கும் பொருட்டு அதை தத்துவமேதை ஜான் ஸ்டூவர்ட் மில் என்பவரிடம் ஒப்படைத்தார். தெரிந்தோ தெரியாமலோ அந்த பிரதி நெருப்பில் பொசுங்கியது. அது கார்லைனிடம் இருந்த ஒரே பிரதி. சற்றும் பதறாமல், எரிந்துபோன பகுதிகளை மீண்டும் எழுத ஆரம்பித்தார். அவர் சிந்தையில் பதிந்திருந்த நிகழ்வுகளை தீயின் தழல்களால் எரிக்கமுடியவில்லை. இந்த பெரிய இழப்பின் மத்தியிலும், “பிரெஞ்சு புரட்சி” என்னும் தன்னுடைய பிரம்மாண்டமான படைப்பை கார்லைன் வெளியிட்டார். 

பண்டைய யூதேயா ராஜ்யத்தின் கடைசிநாட்களில், தேவன் எரேமியா தீர்க்கதரிசியைப் பார்த்து, “நீ புத்தகச்சுருளை எடுத்துஉன்னோடே சொன்ன எல்லா வார்த்தைகளையும் அதிலே எழுது” என்றார் (எரேமியா 36:2). இது தன் ஜனங்களை முழுவதுமாய் அழிக்காமல் அவர்களை மனந்திரும்புதலுக்கு அழைக்கும் தேவனுடைய மென்மையான இருதயத்தைப் பிரதிபலிக்கிறது (வச.3). 

எரேமியாவும் சொன்னபடியே செய்தான். அதைக் கைப்பற்றிய யூதேயாவின் ராஜாவாகிய யோயாக்கீன், அதை துண்டுதுண்டாக்கி, தீயிலிட்டு பொசுக்கினான் (வச.23-25). ராஜாவின் இந்த செய்கை சூழ்நிலையை இன்னும் கடினமாக்கியது. தேவன் அதே செய்தியை மீண்டும் எழுதும்படிக்கு எரேமியாவிடம் சொல்லுகிறார். மேலும் யோயாக்கீனைக் குறித்து, “தாவீதின் சிங்காசனத்தின்மேல் உட்காரும்படி அவன் வம்சத்தில் ஒருவனும் இரான்; அவனுடைய பிரேதமோவென்றால், பகலின் உஷ்ணத்துக்கும் இரவின் குளிருக்கும் எறிந்து விடப்பட்டுக்கிடக்கும்” (வச.30) என்றும் சொல்லுகிறார். 

கர்த்தருடைய வார்த்தையைத் தீயிலிட்டு எரிப்பது சாத்தியமே. ஆனால் அது பிரயோஜனமற்ற முயற்சி. வார்த்தைகளுக்கு பின்பாக இருக்கும் வார்த்தையானவர், என்றென்றைக்கும் நிலைத்திருக்கும் நித்தியமானவர்.