“அதின் கால்கள் துண்டிக்கப்படவேண்டும், ஆனால் அது உயிர் வாழும்” என்று விலங்கியல் மருத்துவர் சொன்னார். தன் காரில் அடிபட்ட ஒரு தெரு நாயினை என் நண்பர் மருத்துவரிடத்தில் கொண்டுவந்து சேர்த்தார்.இதின் மருத்துவக் கட்டணத்தை செலுத்தவேண்டும், அத்துடன் அதை தொடர்ந்து பராமரிக்கவேண்டும், நீங்கள் தான் அதின் உரிமையாளரா? என்று மருத்துவர் கேட்டார். “இப்போதிலிருந்து நான் தான்” என்று என் நண்பர் பதிலளித்தார். அவருடைய கரிசணை, ஓர் அழகான வீட்டில் அந்த நாய்க்கு அடைக்கலம் கொடுத்தது.

மற்றவர்களின் கரிசனைக்கு தான் பாத்திரவான் அல்ல என்று தன்னை ஒரு செத்த நாயாக மேவிபோசேத் எண்ணியிருந்தான் (2 சாமுவேல் 9:8). விபத்தில் முடவனான இவன், பாதுகாப்பிற்காகவும் தேவைக்காகவும் மற்றவர்களை சார்ந்து வாழவேண்டியிருந்தது (4:4). இவனுடைய தாத்தாவாகிய சவுலின் மரணத்திற்கு பின்பு தோன்றிய புதிய ராஜாவாகிய தாவீதுக்கு இவன் பயந்திருந்தான். ராஜ்யத்திற்கு எதிரானவர்களை கொன்றுபோடும் வழக்கம் அந்நாட்களில் இருந்தபடியால் தாவீது தன்னைக் கொன்றுவிடுவானோ என பயந்தான். 

எனினும் தன் சிநேகிதனான யோனத்தானின் மீதிருந்த அன்பினிமித்தம் அவனுடைய மகனான இந்த மேவிபோசேத்தை தன்னுடைய மகனாகக் கருதி அவனுடைய பாதுகாப்பை உறுதியளித்தான் (9:7). அதேபோன்று ஒரு காலத்தில் தேவனுடைய பகைஞர்களாய் மரணத்திற்கு பாத்திரவான்களாயிருந்த நம்மை இயேசு இரட்சித்து, அவரோடு பரலோகத்தில் நித்தியமாய் இருக்கும்படி செய்தார். இதையேதான் தேவனுடைய ராஜ்யத்தின் பந்தியில் பங்கேற்பது என்று லூக்கா தன்னுடைய சுவிசேஷத்தில் குறிப்பிடுகிறார் (லூக்கா 14:15). இங்கே நாம் ராஜா வீட்டுப் பிள்ளைகள்! என்னே விலையேறப்பெற்ற சிலாக்கியம் நமக்கு கொடுக்கப்பட்டுள்ளது! நன்றியோடும் மகிழ்ச்சியோடும் அவரை கிட்டிச் சேருவோம்.