வாழ்க்கையில் நமக்கு மூன்று பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளது என்று ஒருவர் சொல்லுகிறார்;: நம்முடைய பெற்றோர்கள் நமக்கு வைத்த பெயர், மற்றவர்கள் நமக்கு கொடுத்த பெயர் (நம் நன்மதிப்பு) நாம் நமக்கு கொடுத்துக்கொண்ட பெயர் (நம் குணாதிசயங்கள்). இதில் மற்றவர்கள் நமக்குக் கொடுக்கும் பெயரானது முக்கியத்துவம் வாய்ந்தது. “திரளான ஐசுவரியத்தைப்பார்க்கிலும் நற்கீர்த்தியே தெரிந்துகொள்ளப்படத்தக்கது; பொன் வெள்ளியைப்பார்க்கிலும் தயையே நலம்” (நீதி 22:1). நன்மதிப்பு மட்டுமல்லாது, குணாதிசயங்கள் அதைக்காட்டிலும் முக்கியத்துவம் வாய்ந்தது.
இன்னொரு மிக முக்கியமான பெயர் இருக்கிறது. பெர்கமு திருச்சபையிலுள்ள விசுவாசிகளுக்கு இயேசு சொல்லும்போது, அவர்களுடைய நன்மதிப்பு பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலை நேரிடும் தருவாயிலும், சோதனையை மேற்கொள்ளுகிறவர்களுக்கு பரலோகத்தில் ஒரு புதிய நாமம் வைக்கப்பட்டுள்ளது என்கிறார். “அவனுக்கு வெண்மையான குறிக்கல்லையும், அந்தக் கல்லின்மேல் எழுதப்பட்டதும் அதைப் பெறுகிறவனேயன்றி வேறொருவனும் அறியக்கூடாததுமாகிய புதிய நாமத்தையும் கொடுப்பேன்” (வெளி. 2:17).
இயேசு வெண்மையான கற்களை ஏன் வாக்குப்பண்ணுகிறார் என்று நமக்கு தெரியாது. அது ஜெயித்தவர்களுக்கான வெகுமதியா? மேசியாவின் விருந்திற்கான அனுமதிச்சீட்டா? குற்றஞ்சுமத்தப்பட்டவர்களை விடுவிக்க ஒரு காலத்தில் நீதிபதிகள் வாக்களிக்கும் முறையை போன்று கூட இருக்கலாம்.
அது எதுவென நமக்குத் தெரியாது; எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். நம்முடைய அவமானங்களை அகற்றும் புதிய நாமத்தை தேவன் நமக்கு வாக்குப்பண்ணுகிறார் (ஏசாயா 62:1-5).
நம்முடைய நன்மதிப்பு தகர்க்கப்பட்டிருக்கலாம்; நம் குணாதிசயங்கள் சரிசெய்ய முடியாத நிலையில் இருக்கலாம். ஆனால் இந்த இரண்டு பெயர்களும் நம்மை யார் என்று தீர்மானிக்கப் போவதில்லை. மற்றவர்கள் உங்களை எப்படி அழைக்கிறார்கள் என்பதோ, நீங்கள் உங்களை எப்படி பார்க்கிறீர்கள் என்பதோ நிஜமல்ல. இயேசு உங்களை யார் என்று சொல்லுகிறாரோ அதுவே நீங்கள். உங்கள் புதிய நாமத்திற்குரிய வாழ்க்கையை வாழுங்கள்.
உங்களுடைய நன்மதிப்பு உங்கள் குணாதிசயத்திற்கு பொருந்தாத வகையில் உள்ளதா? கிறிஸ்துவில் நீங்கள் யாரென்பதை உங்கள் குணாதிசயங்கள் எந்த அளவிற்கு பிரதிபலிக்கிறது?
தகப்பனே, என்னை யார் என்று நீங்கள் சொல்லுகிறீரோ அதுவே நானென்று நம்புகிறேன். உம்முடைய பிள்ளையாய் வாழ எனக்கு உதவி செய்யும்.