Archives: ஆகஸ்ட் 2021

ஒழுங்குபடுத்தும் அன்பு

அவள் கதவை வேகமாக அடைத்தாள். மீண்டும் அதையே செய்தாள். நான் சுத்தியலையும் ஸ்கூருட்ரைவரையும் எடுத்துக்கொண்டு என் மகளுடைய அறைக்கு சென்று, “செல்லமே, நீ உன் கோபத்தை கட்டுப்படுத்தப் பழகவேண்டும்” என்று மென்மையாக சொன்னேன். சொல்லிவிட்டு அவளுடைய அறைக் கதவை கழட்டி கொண்டுபோய்விட்டேன். கதவை தற்காலிகமாக கழட்டிக் கொண்டுபோவதின் மூலம் சுயக்கட்டுப்பாட்டின் அவசியத்தை அவள் அறிந்துகொள்வாள் என நம்பினேன். 

நீதிமொழிகள் 3:11-12இல் ஞானி, கர்த்தருடைய சிட்சையை ஏற்றுக்கொள்ளும்படிக்கு அறைக்கூவல் விடுக்கிறார். “சிட்சை” என்கிற வார்த்தையை “திருத்தம்” என்று மொழிபெயர்க்கக்கூடும். அன்பான நல்ல தேவன், அவருடைய ஆவியின் மூலமும் வசனத்தின் மூலமும் நம்மை பாதிக்கும் சுபாவங்களை திருத்தும்படிக்கு பேசுகிறார். தேவனுடைய திருத்துதல் என்பது உறவுரீதியாய் அவருடைய அன்பில் ஊன்றப்பட்டதும் நமக்கு நன்மை செய்யவேண்டும் என்னும் அவருடைய எண்ணத்தையும் பிரதிபலிக்கிறது. சில நேரம் அது நம் செய்கையின் விளைவுபோல் தோன்றும். சிலவேளைகளில் வேறொரு நபரைக் கொண்டு நம்முடைய பிழைகளை தேவன் திருத்துவார். அது நமக்கு எப்போதும் சாதகமாய் இல்லாததுபோல் தோன்றும். ஆனால் தேவனுடைய திருத்துதல் ஒரு வரப்பிரசாதம். 

ஆனால் அதை நாம் எல்லா வேளைகளிலும் அப்படி பார்ப்பதில்லை. “கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே” என்று ஞானி சொல்லுகிறான் (வச. 11). தேவனுடைய சிட்சையைக் கண்டு சிலவேளைகளில் நாம் பயப்படுகிறோம். சிலவேளைகளில் தவறாய் சம்பவிக்கிற காரியங்களை கர்த்தருடைய சிட்சை என்று தவறாய் கருதிவிடுகிறோம். ஆனால் நம்மை நேசிக்கும் தகப்பனுடைய இருதயத்திற்கு அது தூரமாயுள்ளது. அவர் நம்மை நேசிப்பதினால் நம்மை திருத்துகிறார். 

தேவனுடைய சிட்சைக்கு பயப்படாமல் அதை ஏற்றுக்கொள்ளப் பழகுவோம். நம்மைத் திருத்தும் தேவனுடைய சத்தத்தைக் கேட்டாலோ அல்லது வேதத்தை படித்து குற்றவுணர்வடைந்தாலோ நம்மில் வாழுகிற தேவன் நமக்கு நன்மையையே செய்வார் என்று நன்றி சொல்லுவோம். 

பயமில்லா அன்பு

நம்முடைய நினைவை விட்டு எப்போதுமே நீங்காத சில பிம்பங்கள் உண்டு. வேல்ஸ் நாட்டின் மறைந்த இளவரசியான டயானாவின் பிரபல புகைப்படத்தை பார்வையிட்டபோது நானும் அப்படியே உணர்ந்தேன். முதல் பார்வையில் அந்த புகைப்படம் பார்ப்பதற்கு மிகச் சாதாரணமாய், இயல்பான புன்சிரிப்போடு இளவரசி டயானா, யாரோ ஒருவரின் கைகளை குலுக்கியபடி நின்றிருந்தார். ஆனால் அந்த புகைப்படத்தின் பின் கதை ஆச்சரியமானது. 

ஏப்ரல் 19, 1987 அன்று இளவரசி டயானா லண்டனின் மிடில்செக்ஸ் மருத்துவமனையை பார்வையிட்டார். எயிட்ஸ் வியாதி தீவிரமாய் பரவி இங்கிலாந்தையே அச்சுறுத்திக்கொண்டிருந்த தருணம் அது. அந்த கொடிய நோய் மக்களை கொன்று குவித்துக்கொண்டிருந்தது. எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களை தீண்டத்தகாதவர்களாய் கருதினர். 

இந்த தருணத்தில் எந்த கையுறையும் அணியாமல் ஒரு எயிட்ஸ் நோயாளியை புன்சிரிப்புடன் கைகுலுக்கிய இந்த தருணம் ஆச்சரியப்பட வைத்தது. அந்த புகைப்படம், எயிட்ஸ் நோயாளிகளை அதே கனிவுடனும் பரிவுடனும் ஆதரிக்க வேண்டும் என்ற உண்மையை உலகிற்கு உணர்த்தியது. 

நான் அடிக்கடி மறக்கிற ஒன்றை அந்த புகைப்படம் எனக்கு நினைவூட்டியது. இயேசுவின் அன்பை மற்றவர்களுக்கு இலவசமாய் தாராளமாய் கொடுக்கவேண்டும். பயந்துகொண்டே நாம் காட்டுகிற அன்பு, மரணத்தில் வாழ்வதற்கு சமானம் (1 யோவான் 3:14) என்று யோவான் ஆதி கிறிஸ்தவர்களுக்கு நினைப்பூட்டுகிறார். உண்மையான அன்போடு, பயமின்றி, தன்னையே கொடுக்கும் தியாகமான அன்பினால் ஊக்கப்படுத்தப்பட்டவர்களாய் உயிர்த்தெழுந்த ஜீவியத்தை வாழ்வதற்கும் உற்சாகப்படுத்துகிறார் (வச. 14,16). 

நல்ல போராட்டம்

அமெரிக்காவின் அரசியல்வாதி ஜான் லூவிஸ் 2020ஆம் ஆண்டு மரித்தபோது நிறைய அரசியல் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்தனர். 1965இல், மார்டின் லூத்தர் கிங் ஜூனியரோடு சேர்ந்து கருப்பின மக்களுக்கு ஓட்டுரிமை வழங்கக்கோரி, போராட்டம் நடத்தியுள்ளார். அந்த அணிவகுப்பின்போது லூவிஸின் கபாலத்தில் அடிபட்டு, அந்த தழும்பை அவர் வாழ்நாள் முழுவதும் சுமக்கவேண்டியிருந்தது. “நீ நியாயமில்லாத ஒன்றைப் பார்க்கும்போது, அங்கு நீ பேசுவதற்கு அல்லது ஏதாவது செய்வதற்கான பொறுப்பு உனக்கு உள்ளது” என்று லூவிஸ் கூறுகிறார். “நல்லப்  போராட்டத்திற்கு குரல் கொடுப்பதற்கு என்றுமே பயப்படாதேயுங்கள்” என்றும் கூறுகிறார்.

உண்மையாய் நின்று, சரியென்று தோன்றுகிற “நல்ல போராட்டத்தை” போராடுவதைக் குறித்து லூவிஸ் துவக்கத்திலிருந்தே அறிந்திருக்கிறார். பிரபலமாகாத சில விஷயங்களை அவர் பேசவேண்டியிருந்தது. ஆமோஸ் தீர்க்கதரிசியும் இதை நன்கு அறிந்திருந்தார். இஸ்ரவேலின் பாவத்தையும் அநியாயத்தையும் பார்த்த அவரால் சும்மாயிருக்க முடியவில்லை. ஆமோஸ் இஸ்ரவேலின் ஆளும்வர்க்கம் எவ்வாறு “தரித்திரரை மிதித்து, அவன் கையிலே லஞ்சம் வாங்கி, “பொளிந்த கற்களால் வீடுகளை” கட்டி, “இன்பமான திராட்சைத் தோட்டங்களை” நாட்டினார்கள் என்று அறிவிக்கிறார் (ஆமோஸ் 5:11-12). தன்னுடைய பாதுகாப்பையும் சுகத்தையும் கருதி ஒதுங்கி நிற்காமல், ஆமோஸ் அவர்களின் தீமையை சுட்டிக்காட்டுகிறார். தேவையான ஒரு நல்ல போராட்டத்தை தீர்க்கதரிசி மேற்கொள்ளுகிறார். 

ஆனால் இந்த போராட்டம் எல்லோருக்குமான நீதியை முன்வைத்து செய்யப்படுகிற நல்லப் போராட்டம். “நீதி வற்றாத நதியைப்போலவும் புரண்டு வரக்கடவது” (வச. 24) என்று ஆமோஸ் சூளுரைக்கிறார். நல்ல போராட்டத்தில் நாம் ஈடுபடும்போது (நீதியுள்ள, முரட்டுத்தனமில்லாத, நீதியை வலியுறுத்தும் போராட்டம்), நன்மையும் சௌக்கியமுமே நம்முடைய இலக்காயிருக்கும். 

முதலில் மன்னிப்பு

நாங்கள் எங்களை “கிறிஸ்துவில் சகோதரிகள்” என்று சொல்லிக்கொண்டாலும் என்னுடைய வெள்ளை நிற சிநேகிதியும் நானும் எதிரிகளாகவே இருந்தோம். ஒரு காலை சிற்றுண்டியின்போது, எங்கள் நிறவேற்றுமையைக் குறித்து இரக்கமின்றி விவாதித்தோம். அதற்கு பின்பு, இனி ஒருவரையொருவர் சந்திக்கவே மாட்டோம் என்று சொல்லி பிரிந்தோம். ஒரு ஆண்டு கழித்து, ஒரு ஊழியத்தில் ஒரே துறையில் சேர்ந்து பணியாற்ற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதால், நாங்கள் சந்திக்காமல் இருக்கமுடியவில்லை. முதலில் எங்கள் சண்டையைக் குறித்து பேசத் துவங்கினோம். பின்பு, நாங்கள் ஒருவரிடம் ஒருவர் மன்னிப்புக்கோரினோம். நாங்கள் இணைந்து ஊழியத்தை நன்றாய் செய்வதற்கு தேவன் உதவினார். 

தேவன் ஏசாவுக்கும் அவனுடைய உடன்பிறந்த சகோதரன் யாக்கோபுக்கும் இடையிலான கசப்பையும் குணமாக்கி, அவர்கள் இருவரின் வாழ்க்கையையும் ஆசீர்வதித்துள்ளார். ஒரு கட்டத்தில், யாக்கோபு ஏசாவை வஞ்சித்து, தகப்பனுடைய ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டான். ஆனால் இருபது ஆண்டுகள் கழித்து, யாக்கோபை தன் சுயதேசம் திரும்பும்படி தேவன் அழைத்தார். ஆகையினால், யாக்கோபு ஏசாவை சமாதானப்படுத்தும் பொருட்டு அநேக வெகுமதிகளை முன்னமே அனுப்புகிறான். ஆனால் ஏசா யாக்கோபிடத்தில் ஓடிவந்து அவனை கட்டித் தழுவுகிறான். “அப்பொழுது ஏசா எதிர்கொண்டு ஓடிவந்து, அவனைத் தழுவி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான் ; இருவரும் அழுதார்கள்” (ஆதி. 33:4). 

இவர்களின் அந்த ஒப்புரவாகுதல் நம்முடைய சகோதர சகோதரிகளுக்கு வெகுமதிகளையும் பொக்கிஷங்களையும் கொடுப்பதைப் பார்க்கிலும், முக்கியமானது என்பதை வலியுறுத்தும் அழகான மாதிரியாய் செயல்படுகிறது (மத். 5:23-24). “முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து” (வச. 24). ஏசாவோடு ஒப்புரவாகியதின் மூலம் யாக்கோபு தேவனுக்கு கீழ்ப்படிந்து, பின்பு அவருக்காக ஒரு பலிபீடத்தை நாட்டினான் (ஆதியாகமம் 33:20). என்ன அழகான ஒரு திட்டம்: முதலில் மன்னிப்பிற்காகவும் ஒப்புரவாக்குதலுக்காகவும் பிரயாசப்படு. பின்பு, அவர் நம்மை அவருடைய பலிபீடத்தில் ஏற்றுக்கொள்ளுகிறார்.