டுவைட் மூடி (1837-99) என்னும் சுவிசேஷகர் இரட்சிக்கபட்ட பின்னர், ஒரு நாளைக்கு ஒருவரிடத்திலாவது சுவிசேஷத்தை பகிர்ந்துகொள்ளாமல் இருப்பதில்லை என்று தீர்மானித்தார். வேலைப்பளுவின் நிமித்தம் சில வேளைகளில் அவருடைய தீர்மானத்தை வெகு தாமதமாய் நினைவுகூருவதுண்டு. அப்படித்தான் ஒரு நாள் அவர் படுக்கையிலிருக்கும்போது அவருடைய தீர்மானம் அவருக்கு நினைவுக்கு வந்தது. உடனே எழுந்து வெளியே போனார். மழை பெய்யும் இந்த நள்ளிரவில் யாரும் இருக்கமாட்டார்களே என்று எண்ணினார். அங்கே சாலையில் குடையோடு நடந்துபோய்க் கொண்டிருந்த ஒரு மனிதனைப் பார்த்தார். வேகமாய் ஓடி, அவருடைய குடையில் தனக்கு அடைக்கலம் கேட்டார். அனுமதி கிடைத்ததும், “புயலின் நடுவில் தங்குவதற்கு உங்களுக்கு இடமிருக்கிறதா? நான் இயேசுவைக் குறித்து உங்களுக்கு சொல்லவா? என்று சுவிசேஷத்தை பகிரத் துவங்கினாராம். 

பாவத்தின் விளைவுகளிலிருந்து தேவன் நம்மை எப்படி இரட்சிக்கிறார் என்றும் சத்தியத்தை பகிர்ந்துகொள்ள மூடி எப்போதும் ஆயத்தமாயிருந்தார். அவருடைய நாமத்தையும், “அவருடைய செய்கைகளை ஜனங்களுக்குள்ளே அறிவியுங்கள்” (ஏசாயா 12:4) என்று இஸ்ரவேலர்களுக்கு கொடுக்கப்பட்ட கட்டளைக்கு மூடி கீழ்ப்படிந்தார். இஸ்ரவேலர்கள் அழைக்கப்பட்டது “அவருடைய நாமம் உயர்ந்ததென்று” பிரஸ்தாபம்பண்ணுவதற்கு மாத்திரம் இல்லை, அத்துடன் சேர்த்து தேவன் எப்படி அவர்களின் இரட்சிப்பாய் மாறினார் (வச. 2) என்பதை அறிவிக்கவும் அழைக்கப்பட்டனர். நூற்றாண்டுகள் கழித்து, இன்று நாம் இயேசு மனிதனான ஆச்சரியத்தையும், சிலுவையில் மரித்து, உயிர்தெழுந்த சத்தியத்தையும் அறிவிக்க அழைக்கப்பட்டிருக்கிறோம். 

மூடி செய்தது போல, யாரோ ஒருவர் துணிந்து நம்மிடத்தில் வந்து இயேசுவைக் குறித்து அறிவித்ததினாலேயே நாம் அவரின் அன்பைக் குறித்து கேள்விப்பட்டோம். நாமும் நம்மை இரட்சித்தவரைக் குறித்து நமக்குகந்த வழியில் மற்றவர்களுக்கு அறிவிக்கலாமே.