அமெரிக்காவின் புகழ்பெற்ற சுவிசேஷகர் பில்லிகிரகாம் ஒருமுறை வேதாகமத்தை உண்மையானது என்று முழுமையாய் நம்பமுடியாமல் தவித்ததைக் குறித்து பகிர்ந்தார். ஒருமுறை சான் பெர்னான்டினோ கொண்டாட்ட மையத்திற்கு ஓர் இரவுநேரத்தில் அவர் நடந்து சென்றபோது, தன்னுடைய வேதாகமத்தை ஒரு மரக்கட்டையின் மீது வைத்து அங்கேயே முழங்கால்படியிட்டு, திக்கி திக்கி ஜெபம் செய்தார்: “தேவனே! இந்த புத்தகத்திலுள்ள பெரும்பாலான விஷயங்களை என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை.”
தன்னுடைய குழப்பத்தை அறிக்கையிட்டவுடன், பரிசுத்த ஆவியானவர், “பிதாவே, நான் விசுவாசத்தில் இதை உம்முடைய வார்த்தையாய் ஏற்றுக் கொள்ளப்போகிறேன்!” என்று சொல்லும்படிக்கு என்னை பெலப்படுத்தினார். அவர் எழுந்து நின்றபோது, அவருக்கு இன்னும் கேள்விகள் இருந்தது. ஆனால் அவர், “என் ஆத்துமாவில் ஓர் ஆவிக்குரிய யுத்தம் நடைபெற்று, அதில் வெற்றியும் அடைந்துவிட்டேன்” என்று சொன்னார்.
இளம் தீர்க்கதரிசியான எரேமியாவும் இந்த ஆவிக்குரிய யுத்தத்தை செய்துள்ளான். ஆனால் வேதத்தில் அதற்கான பதிலை கண்டுபிடித்தான். “உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை உட்கொண்டேன் ; உம்முடைய வார்த்தைகள் எனக்குச் சந்தோஷமும், என் இருதயத்துக்கு மகிழ்ச்சியுமாயிருந்தது” (எரேமியா 15:16). மேலும் “அவருடைய வார்த்தை என் எலும்புகளில் அடைபட்டு எரிகிற அக்கினியைப்போல் என் இருதயத்தில் இருந்தது” (20:9) என்றும் கூறுகிறான். 19ஆம் நூற்றாண்டின் சுவிசேஷகர் சார்லஸ் ஸ்பர்ஜன், “எரேமியா நமக்கு ஓர் இரகசியத்தை கற்றுக்கொடுத்திருக்கிறார். அவருடைய வெளியரங்கமான வாழ்க்கை, குறிப்பாய் அவருடைய விசுவாசமான ஊழியம் நடைபெற்றதற்கான காரணம், அவர் கர்த்தருடைய வார்த்தையை அந்தரங்கத்தில் நேசிப்பவராய் இருந்தார்” என்று குறிப்பிடுகிறார்.
நம்முடைய போராட்டங்களின் மத்தியிலும், நம்முடைய வாழ்க்கையை வேதாகமத்தின் ஞானத்தைக் கொண்டு நேர்த்தியாய் வடிவமைக்க முடியும். விசுவாசத்தோடு எப்போதும்போல நாம் தொடர்ந்து வேதத்தை தியானிப்போம்.
வார்த்தையினால் உங்கள் வாழ்க்கை எப்படி செதுக்கப்பட்டுள்ளது? அதை விசுவாசத்தோடு நீங்கள் நம்பும்போது, உங்கள் வாழ்க்கை எப்படி மாறவேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?
பரலோகப் பிதாவே, வேதாகமத்தை நான் வாசிக்கும்போது உம்மைக் குறித்த புதிய காரியங்களை எனக்குக் காண்பியும் உம்முடைய வழிகளை எனக்கு போதியும். உம்முடைய அன்பை எனக்கு காண்பியும்.