இராணுவ சதியினால் சாமின் அப்பா அவருடைய உயிரைக் காக்கவேண்டி வீட்டைவிட்டு ஓட நேர்ந்தது. மாத வருமானம் ஒரேயடியாய் நின்று போனதினால், தன் அண்ணனை உயிரோடு வைத்திருக்கும் மருந்தை வாங்க பணமில்லை. இந்த நிலைக்கு ஆளாக நாங்கள் என்ன பாவம் செய்தோம்! என்று சாம் தேவனை நோக்கிக் கேட்டான்.
இயேசுவை நேசிக்கும் ஒருவர் இந்த குடும்பத்தின் சூழலை அறிந்து, மருந்து வாங்குவதற்கான பணத்தையும் அவர்களுக்கு தேவையான மளிகைப் பொருட்களையும் வாங்கிச் சென்றார். முன் பின் தெரியாத ஒரு நபரிடமிருந்து உதவியை பெறுவது ஆச்சரியமான ஒன்று. “இந்த ஞாயிற்றுக் கிழமை இவர் போகும் அந்த திருச்சபைக்கு நாமும் செல்வோம்” என்று அவனுடைய தாயார் கூறினார். சாமின் ஆதங்கம் தணிய ஆரம்பித்தது. அவனுடைய குடும்பத்தில் ஒருவர்பின் ஒருவராக இயேசுவை ஏற்றுக்கொண்டனர்.
கிறிஸ்துவின் மீது விசுவாசம் வைக்கும் நேர்மையான வாழ்க்கை முறையில் மற்றவர்களின் தேவையை சந்திப்பதை யாக்கோபு முக்கியத்துவப்படுத்துகிறார். மேலும் “ஒரு சகோதரனாவது சகோதரியாவது வஸ்திரமில்லாமலும் அனுதின ஆகாரமில்லாமலும் இருக்கும்போது, உங்களில் ஒருவன் அவர்களை நோக்கி: நீங்கள் சமாதானத்தோடே போங்கள், குளிர்காய்ந்து பசியாறுங்கள் என்று சொல்லியும், சரீரத்திற்கு வேண்டியவைகளை அவர்களுக்குக் கொடாவிட்டால் பிரயோஜனமென்ன?” (யாக். 2:15-16) என்று யாக்கோபு கேட்கிறார்.
நம்முடைய கிரியைகள் நம்முடைய விசுவாசத்தைப் பிரதிபலிக்கிறது. குறிப்பாக, அந்த கிரியைகள், அவர்களின் இறை நம்பிக்கையை தேர்ந்தெடுக்க உதவும். சாம், பிற்காலத்தில் போதகராகவும் சபை ஸ்தாபகராகவும் மாறினான். அவர்களுக்கு உதவிசெய்த அந்த மனிதரை “வழிகாட்டும் அப்பா” என்று அழைப்பான். இயேசுவின் அன்பை அவருக்கு காண்பித்த அந்த மனிதரை தன்னுடைய ஆவிக்குரிய தகப்பனாய் அங்கீகரித்துக்கொண்டான்.
இயேசுவின் அன்பு உங்களை எப்படி சந்தித்தது? தேவையிலுள்ளவர்களுக்கு உங்களால் என்ன செய்யமுடியும்?
உண்மையுள்ள தேவனே, உம்மை நம்புகிற வாழ்க்கை வாழ எனக்கு உதவிசெய்யும். உம்மை கனப்படுத்தும் விதத்தில் மற்றவர்களுக்கு உதவ நான் விரும்புகிறேன்.