ரயன் ஹால் என்னும் அமெரிக்காவின் ஒலிம்பிக் ஓட்டக்காரர், மாரத்தானின் பாதி ஓட்டத்தில் சாதனை படைத்துள்ளார். 13.1 மைல் தூரத்தை (21 கி.மி.) 59 நிமிடங்கள் 43 விநாடிகளில் கடந்து, அமெரிக்க தடகள வரலாற்றில் ஒரு மணி நேரத்திற்குள் இவ்வளவு தூரத்தைக் கடந்தவர் என்று சாதனைப் படைத்தார். ஆனாலும் அந்த ஓட்டத்தை அவரால் சரியாய் முடிக்கமுடியவில்லை. 

வெற்றியையும் தோல்வியையும் ருசிபார்த்தபோதிலும், அவரைப் பாதுகாத்தது இயேசுவின் மீதான விசுவாசம் என்று சொல்லுகிறார். நீதிமொழிகள் புத்தகத்தில் அவருக்கு பிடித்த வார்த்தை, “நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும், திரும்பவும் எழுந்திருப்பான்” (24:16) என்பதே. தேவன் மீது நம்பிக்கை வைத்து, தேவனோடு சரியான உறவில் இருக்கும் நீதிமானுக்கும் பாடுகளும் துன்பங்களும் உண்டு என்பதை இந்த நீதிமொழி வலியுறுத்துகிறது. ஆனாலும் அந்த துன்பத்தின் மத்தியிலும் தொடர்ந்து தேவனை பற்றிக்கொள்ளும்போது மீண்டும் எழுந்து நிற்க தேவன் பெலன் தருவார். 

நீங்கள் சமீபத்தில் பாதிக்கக்கூடிய மனச் சோர்வுக்கும் தோல்விக்கும் ஆளாகி, மீளுவது சாத்தியமேயில்லை என்று எண்ணியதுண்டா? வேதாகமம் நம்முடைய பலத்தின் மீது நம்பிக்கை வைக்காமல், தேவன் மீதும் அவரின் வாக்குத்தத்தத்தின் மீதும் நம்பிக்கை வைக்க நம்மை உற்சாகப்படுத்துகிறது. அவரை நம்பும்போது வாழ்க்கையில் நேரிடுகிற சராசரி பிரச்சனையிலிருந்து கடினமான பிரச்சனைகள் வரை அனைத்தையும் மேற்கொள்ள தேவனுடைய ஆவியினாலே நாம் பெலப்படுத்தப்படுகிறோம் (1 கொரி. 12:9).