தேவனை மட்டும் நம்புதல்
சிலர் நம்மைப் பார்த்து, “இந்த அதிர்ஷ்டம் தான்” எனக்கு நன்மையைக் கொண்டுவந்தது என்று சொல்லலாம். சில குறிப்பிட்ட மீன் வகைகள், நாணயங்கள், குடும்ப வாரிசுகள், அல்லது மங்களகரமான நாள் என்று பல காரியங்களை தங்கள் அதிர்ஷ்டமாய் கருதலாம். அதிர்ஷ்டத்தைக் கொடுக்கிறது என்று நம்பப்படும் பொருட்கள் மக்களுடைய கவனத்தை அதிகமாய் ஈர்க்கிறது.
அதிர்ஷ்டத்தை நம்புகிற இந்த நம்பிக்கை உலகத்தின் எல்லா கலாச்சாரத்திற்கும் பொதுவானது. அது நம்மை தேவனை நம்புவதிலிருந்து வழிவிலகச்செய்து, பணத்தையோ, மனித பெலத்தையோ, மார்க்க சடங்காச்சாரங்களையோ நம்புவதற்குத் தூண்டுகிறது. இஸ்ரவேலர்கள் அசீரியர்களால் அச்சுறுத்தப்படும்போது, தேவனிடத்திற்கு திரும்புவதற்கு பதிலாக, எகிப்தின் உதவியை நாடின தன்னுடைய ஜனத்திற்கு தேவன் இதை எச்சரிக்கிறார்: “நீங்கள் மனந்திரும்பி அமர்ந்திருந்தால் இரட்சிக்கப்படுவீர்கள்; அமரிக்கையும் நம்பிக்கையுமே உங்கள் பெலனாயிருக்கும் என்று இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற கர்த்தராகிய தேவன் சொல்லுகிறார்; நீங்களோ அப்படிச் செய்ய மனதாயிராமல்; அப்படியல்ல, குதிரைகளின்மேல் ஏறி ஓடிப்போவோம் என்கிறீர்கள்; அப்படியே ஓடிப்போவீர்கள்!” (ஏசாயா 30:15-16).
தேவன் சொன்னதுபோல அவர்களின் ஓட்டம் முடிந்துவிட்டது; யூதேயா அசீரியாவினால் மேற்கொள்ளப்பட்டது. “ஆனாலும் உங்களுக்கு இரங்கும்படி கர்த்தர் காத்திருப்பார்” என்றும் தேவன் தன் ஜனத்திற்கு வாக்களித்துள்ளார். நம்முடைய கொஞ்சத்தில் தேவனை நம்பும்போது, தேவன் தன்னுடைய கரங்களை விரித்து நம்மிடத்திற்கு திரும்புகிறார். “அவருக்குக் காத்திருக்கிற அனைவரும் பாக்கியவான்கள்” (வச. 18).
சுத்திகரிக்கும் முறை
கை கழுவும் தொட்டியில் தங்கள் கைகளை கழுவும்போது, இரண்டு சிறுவர்களும் பிறந்தநாள் வாழ்த்து பாடலை இரண்டுமுறை பாடினார்கள். “கைகளில் உள்ள கிருமிகளை கழுவி சுத்தம்செய்வதற்கு அவ்வளவு நேரம் தேவைப்படும்” என்று அவர்களுடைய அம்மா சொல்லியிருக்கிறார்கள். கோவிட்-19 தொற்று பரவத்துவங்கும் முன்னரே, தங்கள் கைகளை நன்றாய் கழுவி சுத்தம்செய்ய இவர்கள் பழகிக்கொண்டனர்.
இந்த தொற்று பரவிய நாட்களில், நம்மைச் சார்ந்த அனைத்தையும் சுத்தமாக வைக்கும் கடினமான பழக்கத்தைக் கற்றுக்கொண்டோம். ஆனால் நம்முடைய பாவத்தைக் கழுவி சுத்திகரிப்பது, நம்மை தேவனிடமாய் திருப்பும்.
யாக்கோபு, ரோம சாம்ராஜ்யம் எங்கிலும் சிதறிக்கிடந்த கிறிஸ்தவர்களை தேவனிடமாய் திருப்பும்படிக்கு அறிவுறுத்துகிறார். சண்டை சச்சரவுகள், சுயமேம்பாட்டு யுத்தங்கள், ஆஸ்திகள், உலக இன்பங்கள், பணம், புகழ், ஆகியவைகள் அவர்களை தேவனுக்கு விரோதிகளாய் மாற்றிவிட்டது. ஆகையினால் யாக்கோபு, “தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்... பாவிகளே, உங்கள் கைகளைச் சுத்திகரியுங்கள்; இருமனமுள்ளவர்களே, உங்கள் இருதயங்களைப் பரிசுத்தமாக்குங்கள்” என்று அவர்களை எச்சரிக்கிறார் (யாக்கோபு 4:7-8). ஆனால் அதை செய்வது எப்படி?
“தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார்” (வச. 8). இந்த வார்த்தைகள் தேவனிடமாய் திரும்புவதின் அவசியத்தை உணர்த்துவதின் மூலமாய், பாவத்தை வேறோடு அகற்றும் கிருமிநாசினியாய் செயல்படுகிறது. யாக்கோபு தொடர்ந்து, சுத்திகரிக்கும் முறையை அறிவிக்கிறார்: “நீங்கள் துயரப்பட்டுத் துக்கித்து அழுங்கள்; உங்கள் நகைப்பு துக்கிப்பாகவும், உங்கள் சந்தோஷம் சஞ்சலமாகவும் மாறக்கடவது. கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்” (வச. 9-10).
பாவத்தைக் கழுவுதல் என்பது நம்மை முற்றிலும் தாழ்த்துவதாகும். ஆனால். அல்லேலூயா! நம்முடைய “சுத்திகரித்தலை” ஆராதனையாய் மாற்றுவதற்கு தேவன் உண்மையுள்ளவர்.
தேவனை கனப்படுத்தத் தீர்மானித்தல்
லியோ டால்ஸ்டாயின் “குடும்ப சந்தோஷம்” என்னும் நாவலின் முக்கிய கதாபாத்திரமான செர்ஜே, அழகும் இளமையும் நிறைந்த மாஷாவை சந்திக்கிறார். வயதில் மூத்தவரான செர்ஜே, உலகம் சுற்றும் ஒரு வியாபாரி. ஆனால் மாஷா உலகமறியாத ஒரு கிராமத்துப் பெண். இருவரும் ஒருவரையொருவர் நேசித்து, பின் திருமணம் செய்துகொள்கின்றனர்.
திருமணத்திற்குப் பின் ஒரு கிராமத்தில் குடியேறுகின்றனர். அந்த கிராம சுற்றுப்புறத்தைப் பார்த்து மாஷா மிகவும் சலிப்படைந்திருக்கிறாள். அதை அறிந்த செர்ஜே, செயின்ட் பீட்டர்ஸ்பர்கை சுற்றிப்பார்ப்பதற்கு ஒரு பயணத்தை ஏற்பாடு செய்கிறான். அங்கே மாஷாவின் அழகும் வசீகரமான தோற்றமும் அவளுக்கு திடீர் புகழை தேடித்தருகிறது. அங்கிருந்து வீடு திரும்பும் நேரம் வந்தபோது, அந்த ஊரின் இளவரசர் மாஷாவை சந்திக்க விரும்பி அங்கு வருகிறார். செர்ஜே, அவளைக் கட்டாயப்படுத்தி தன் ஊருக்குத் திரும்ப அழைத்து வந்திருக்க முடியும். ஆனால், அவளையே தீர்மானம் எடுக்கும்படி விட்டுவிடுகிறான். அவள் அங்கேயே தங்க தீர்மானிக்கிறாள். அவளின் துரோகம் செர்ஜேயின் இருதயத்தை உடைத்தது.
செர்ஜேயைப் போன்று அவருக்கு உண்மையாய் இருக்கும்படிக்கு, தேவனும் நம்மை கட்டாயப்படுத்துவதில்லை. அவர் நம்மை நேசிப்பதால் அவருக்கு சாதகமாகவோ அல்லது எதிராகவோ தீர்மானம் எடுக்கும் அதிகாரத்தை நம்மிடத்திலேயே கொடுக்கிறார். அவருடைய குமாரன் இயேசுகிறிஸ்துவை நம்முடைய பாவங்களுக்கான பலியாக ஏற்றுக்கொண்டதே நாம் அவருக்கு சாதகமாய் எடுத்த முதல் தீர்மானம் (1 யோவான் 4:9-10). அதற்கு பின்பு, வாழ்நாள் முழுவதும் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் நம்மிடத்தில்தான் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆவியன் நடத்துதலின்படி, தேவனுக்கு உண்மையாய் இருக்க தீர்மானிக்கிறோமா? அல்லது உலகம் நம்மை ஆளுகை செய்ய அனுமதிக்கிறோமா? தாவீது, அந்த அளவிற்கு நேர்த்தியான ஒரு மனிதன் இல்லை. ஆனால், “கர்த்தருடைய வழிகளைக்” கைக்கொண்டதாகவும் அதின் மூலம் நல்ல பலனை அடைந்ததாகவும் அடிக்கடி குறிப்பிடுகிறார் (சங்கீதம் 18:21-24). நம்முடைய தீர்மானங்கள் தேவனை கனப்படுத்தும்போது, “தயவுள்ளவனுக்கு.. (அவர்) தயவுள்ளவராக” வெளிப்படுகிறார் என்று தாவீது சொன்ன ஆசீர்வாதத்தை நாமும் அனுபவிக்க முடியும்.
அவசர ஜெபமல்ல
ஹவாய் தீவின் மக்களைக் குறித்து ஆலிஸ் கஹோலுசுனா சொல்லும்போது, அவர்கள் தங்கள் கோயில்களுக்குள் நுழையுமுன் கோயில் வாசலில் வெகுநேரம் அமர்ந்திருந்து தங்களை சுத்திகரித்துக்கொண்ட பின்புதான் உள்ளே செல்லுவார்களாம். உள்ளே நுழைந்த பின்பும் தங்கள் விண்ணப்பத்துடன் பலிபீடத்திற்கு பயபக்தியுடன் ஊர்ந்து செல்லுவார்களாம். பின்பு கோயிலின் வெளியே வந்து மீண்டும் வெகுநேரம் அமர்ந்திருந்து, தாங்கள் ஏறெடுத்த விண்ணப்பங்களை நினைத்து, அதற்கு உயிர் கொடுப்பார்களாம்.
கிறிஸ்தவ மிஷனரிகள் ஹவாய் தீவிற்கு வந்தபோது, அவர்களின் ஜெபிக்கும்முறை இந்த தீவின் மக்களை திருப்திபடுத்தவில்லை. மிஷனரிகள் எழுந்திருந்து, ஒரு சில வாக்கியங்களைச் சொல்லி, கடைசியில் ஆமென் சொல்லி முடித்துவிட்டார்கள். இந்த ஜெபத்தை ஹவாய் தீவின் மக்கள், “ஜீவனில்லாத ஜெபம்” என்று அழைக்கிறார்கள்.
இந்த சம்பவம், தேவ ஜனங்கள் “அமர்ந்திருந்து… அறியுங்கள்” (சங்கீதம் 46:10) என்னும் சத்தியத்தை முழுமையாய் அனுபவிக்கவில்லை என்பதை நமக்கு நினைவுபடுத்துகிறது. நம்முடைய ஜெபங்கள் பெரியதோ அல்லது சிறியதோ, தேவன் நம் ஜெபத்தை கேட்கிறார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் நம்முடைய வாழ்க்கை நம் இருதயத்தை பிரதிபலிக்கிறது. நம்முடைய ஜெபங்கள் மூலமாக தேவன் நம்மிடத்தில் மட்டுமல்லாது, நம்மை சுற்றிலுமிருக்கிற மக்களின் வாழ்க்கையிலும் கிரியை செய்ய அனுமதிக்கவேண்டும். இதுபோன்று எத்தனை முக்கியமான தருணங்களை இழந்து நம்முடைய ஜெபங்களை அவசரஅவசரமாய் “ஆமென்” சொல்லி முடித்திருக்கிறோம்?
நமக்கு முன்பாக மெல்லமாய் நடந்து செல்லுபவர்களைக் கண்டாலோ அல்லது சாலை நெருக்கடிகளிலோ நாம் அடிக்கடி பொறுமையிழப்பது இயல்பு. ஆனால் தேவன் நம்மை அமர்ந்திருக்கச் சொல்லுகிறார். “நீங்கள் அமர்ந்திருங்கள், நன்றாய் மூச்சை இழுத்துவிடுங்கள், பொறுமையாக செல்லுங்கள், நானே உங்கள் அடைக்கலமும், பெலனும், ஆபத்துக் காலத்தில் அநுகூலமான துணையுமான தேவன் என்பதை மறந்துவிடாதீர்கள்” என்று கர்த்தர் சொல்லுகிறார். அதை நேர்த்தியாய் செய்வதற்கு, நாம் தேவனை தேவனென்று அறிய வேண்டும்; அவரையே நம்பவேண்டும்; அவருக்காக வாழவேண்டும்.