தொலைந்த என் நிச்சயதார்த்த மோதிரத்தை, கண்களில் நீர்வழிய கண்மூடித்தனமாய் தேடினேன். மெத்தைகளை புரட்டிப்பார்த்து, இங்கும் அங்கும் எல்லா மூலைகளிலும் தேடிய என்னுடைய கணவர் ஆலன், “பரவாயில்லை, நாம் வேறொன்றை வாங்கிக்கொள்ளலாம்” என்றார்.
“நன்றி,” என்று சொன்னேன். “ஆனால் அதின் விலைமதிப்பைத் தாண்டி, அதில் ஒரு உணர்ச்சிப்பூர்வமான ஈர்ப்பு இருக்கிறது.” அதை மற்றொன்றைக்கொண்டு ஈடுசெய்யமுடியாது. அதை கண்டுபிடிக்கவேண்டும் என்று தொடர்ந்து ஜெபித்தேன். “தேவனே, தயவுசெய்து அதை கண்டுபிடிக்க எனக்கு உதவிசெய்யும்.”
ஒருசில நாட்களுக்குபின், அந்த விலைமதிப்பற்ற மோதிரத்தை என்னுடைய ஸ்வெட்டர் ஒன்றின் பாக்கெட்டில் கண்டெடுத்தேன். “நன்றி இயேசுவே” என்று மகிழ்ச்சியடைந்தேன். நானும் எனது கணவரும் மகிழ்ச்சியடைந்த தருணத்தில், வேதாகமத்தில் வெள்ளி நாணயத்தை தொலைத்த ஸ்திரீயைக் குறித்த உவமை எனக்கு நினைவுக்கு வந்தது (லூக்கா 15:8-10). தொலைந்த வெள்ளி நாணயத்தைத் தேடிய ஸ்திரீயைப் போல, தொலைந்த மோதிரத்தின் முக்கியத்துவம் எனக்குப் புரிந்தது. எங்களுடைய விலைமதிப்புள்ள ஒன்றைத் தேடும் எங்களின் முயற்சி தவறல்ல. இயேசு இந்த உவமையைப் பயன்படுத்தி, தான் சிருஷ்டித்த ஒவ்வொரு நபரையும் இரட்சிக்கும் அவரது ஆவலை வெளிப்படுத்துகிறார். ஒரு பாவியின் மனந்திரும்புதலினால் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷமுண்டாகிறது.
தொலைந்துபோன பொருளைத் தேடுவதுபோன்று, மற்றவர்களுக்காக வாஞ்சையோடு ஜெபிக்கிற நபராய் மாறுவது எப்பேர்ப்பட்ட பாக்கியம்! ஒருவர் மனந்திரும்பி, தன்னுடைய வாழ்க்கையை இயேசுவுக்கு ஒப்புவிப்பது எப்பேர்ப்பட்ட மகிழ்ச்சி! நாம் நம்முடைய நம்பிக்கையை அவர் மீது வைக்கும்போது, தொலைந்துபோன நம்மை விடாமல் தேடிக் கண்டுபிடித்ததின் சந்தோஷத்தை நாம் அனுபவிக்கமுடியும். நம்மை தேடிக் கண்டுபிடிக்குமளவிற்கு நாம் அவருடைய பார்வையில் விலையேறப் பெற்றவர்கள்.
யாருடைய இரட்சிப்பிற்காய் இன்று ஜெபிக்கப்போகிறீர்கள்? யாரோடு உங்களுடைய சாட்சியை பகிர்ந்துகொள்ளப் போகிறீர்கள்?
தகப்பனே, நீர் சிருஷ்டித்த ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையும் இரட்சிக்கப்படுவதற்கு விலையேறப் பெற்றவைகள் என்பதை உணர்த்தியதற்கு நன்றி.