டெலிமேகஸ் என்று அமைதியான வாழ்க்கை வாழ்ந்த ஒரு துறவி இருந்தார். நான்காம் நூற்றாண்டில் நிகழ்ந்த அவருடைய மரணம் உலகத்தையே மாற்றியது. கிழக்கிலிருந்து ரோம் நகரத்தை பார்வையிட சென்ற துறவி, ரோம் நகர மைதானத்தில் அடிமைகளுக்கிடையில் நடைபெறும் கொடிய இரத்தம் தெரிக்கும் கிளாடியேட்டர் யுத்தத்தைத் தடுக்க எண்ணினார். அங்கே ஒருவரையொருவர் கொல்ல முயற்சித்துக்கொண்டிருந்த அடிமை வீரர்களை தடுக்க எண்ணி, மைதானத்திற்குள் குதித்து அவர்களை தடுத்தார். கோபம்கொண்ட மக்கள் அவரை கல்லெறிந்து கொன்றார்கள். டெலிமேகஸின் இந்த செய்கையினால் தொடப்பட்ட ரோம பேரரசர் ஹோனோரியஸ், 500 ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வந்த அடிமைகளின் இந்த மரண விளையாட்டிற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
பவுல் அப்போஸ்தலர் இயேசுவை “நம் சமாதானம்” என்று அழைக்கும்போது, அங்கே யூதர்களுக்கும் புறஜாதிகளுக்குமான விரோதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கிறார் (எபேசியர் 2:14). தேவனுடைய தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததி, வேறுபிரிக்கப்பட்டு, பலவிதமான ஆசிர்வாதங்களை அனுபவித்தனர். உதாரணமாக, புறஜாதிகள் எருசலேம் ஆலயத்திற்குள் ஆராதிக்க அனுமதிக்கப்பட்ட பின்னரும், இதைத் தாண்டி வந்தால் மரணம் என்று வெளிப்புற அலங்கத்திலே யூதர்களால் தடுப்புச் சுவர் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. யூதர்கள் புறஜாதியினரை தீட்டாய் கருதினதால், இருதரப்பினருக்கும் எப்போதும் பகை நீடித்தது. ஆனால் இப்போது, எல்லோருக்குமான இயேசுவின் மரணத்தினாலும் உயிர்த்தெழுதலினாலும் யூதர்கள் புறஜாதிகள் அனைவரும் விசுவாசத்துடன் தேவனை ஆராதிக்கலாம் (வச. 18-22). தடுப்புச் சுவர் ஏதுமில்லை. எந்த இனத்தவருக்கும் சிறப்புச் சலுகைகள் இல்லை. தேவனுக்கு முன்பாக அனைவரும் சமம்.
டெலிமேகஸ் தன்னுடைய மரணத்தின் மூலமாய் அடிமை வீரர்களுக்கு சமாதானம் வரச்செய்தது போல, இயேசுவும் அவர் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலின் மூலமாக அவரை நம்புகிற அனைவருக்கும் சமாதானத்தையும் ஒப்புரவாகுதலையும் வரச்செய்கிறார். இயேசு நம்முடைய சமாதானமாயிருந்தால் நம்முடைய வேறுபாடுகள் நமக்குள் பிரிவினை ஏற்படுத்துவதைத் தடுக்கமுடியும். அவருடைய இரத்தத்தினாலே நாம் ஒரே சரீரமாக்கப்பட்டுள்ளோம்.
யாவரோடும் நீங்கள் சமாதானமாயிருக்கிறீர்கள் என்பதை எப்படி தெரியப்படுத்துவீர்கள்? இனம், அந்தஸ்து அல்லது சலுகைகள் - இவற்றுள் எது சிலவேளைகளில் உங்களுக்கு தடையாயிருக்கிறது? ஏன்?
சமாதானத்தின் தேவனே, நீர் எங்களை கிறிஸ்துவுக்குள் ஒன்றாக்கியிருக்கிறீர். அதை அறியவும் அதின்படி வாழவும் எனக்குத் துணைபுரியும்.