அலிசா மென்டோசாவுக்கு 2020இல் அவளுடைய அப்பாவிடமிருந்து ஒரு ஆச்சரியமூட்டும் மின்னஞ்சல் வந்திருந்தது. அவர்களுடைய 25ஆம் திருமண நாளில் அவளுடைய அம்மாவுக்கு என்ன செய்ய வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஏன் அதைக் கண்டு அவள் ஆச்சரியப்பட்டாள்? ஏனெனில் பத்து மாதங்களுக்கு முன்னரே அவளுடைய அப்பா இறந்துவிட்டார். அவர் வியாதியாயிருக்கும்போதே தன் மரணத்தை முன்கூட்டியே அறிந்து, அந்த மின்னஞ்சலை குறிப்பிட்ட தேதிக்கு போய்சேரும்படி ஏற்பாடு செய்திருந்தார் என்பதை அறிந்துகொண்டாள். அத்துடன், இனி வரப்போகிற தன்னுடைய மனைவியின் பிறந்த நாள், திருமண நாள், காதலர் தினம் ஆகிய அனைத்திற்கும் பூங்கொத்து பரிசளிக்கும்படிக்கும் முன்னமே ஏற்பாடு செய்துவிட்டே இறந்திருக்கிறார். 

இந்த அன்பு, உன்னதப்பாட்டு புத்தகத்தில் பிரதிபலிக்கப்பட்டுள்ள அன்பிற்கு ஒப்பாயிருக்கிறது. “நேசம் மரணத்தைப்போல் வலிது; நேசவைராக்கியம் பாதாளத்தைப்போல் கொடிதாயிருக்கிறது” (உன்னதப்பாட்டு 8:6). மரணத்தையும் பாதாளத்தையும் அன்போடு ஒப்பிடுவது சரியில்லை என்று தோன்றுகிறது. ஏனெனில் அவைகளில் சிறைப்பட்டவர்கள் மீண்டு வருவதில்லை. அதேபோன்று உண்மையான நேசமும் தான் நேசித்தவர்களை என்றுமே விடுவதில்லை. 6-7 வசனங்களில் புத்தகம் உச்சநிலை அடைந்து, “திரளான தண்ணீர்கள் நேசத்தை அவிக்கமாட்டாது” என்று திருமண அன்பின் மேன்மையை உருவகப்படுத்துகிறது (வச. 7). 

வேதாகமம் முழுவதிலும் கணவன்-மனைவி அன்பு தெய்வீக அன்பிற்கு ஒப்பிடப்பட்டுள்ளது (ஏசாயா 54:5; எபேசியர் 5:25; வெளி. 21:2). இயேசுவே மணவாளன், சபையானது அவருடைய மணவாட்டி. கிறிஸ்துவை இந்த உலகத்திற்காக மரிக்க ஒப்பக்கொடுத்ததின் மூலமாய் தேவன் தன் அன்பை நமக்கு காண்பித்துள்ளார். அதினால் இனி நாம் மரிக்க தேவையில்லை (யோவான் 3:16). நாம் திருமணமானவரோ அல்லது தனிநபரோ, ஆனால் தேவனுடைய அன்பு நாம் கற்பனை செய்துபார்க்க முடியாத அளவு உறுதியான அன்பு.