அதீதியும் ஆகாஷும் குழந்தைக்காய் ஏங்கினர். ஆனால் அவர்களுடைய மருத்துவர் அது சாத்தியமில்லை என்று கூறிவிட்டார். அதீதி தன் சிநேகிதியிடம் “நான் தேவனோடு நேர்மையாக பேசவிரும்புகிறேன்” என்றாள். அவ்வாறு பேசியதின் விளைவாய், அவளும் ஆகாஷும் அவர்களின் போதகரை சந்தித்து, சபையில் குழந்தை தத்தெடுக்கும் ஊழியத்தைத் துவங்க ஆலோசித்தார்கள். சரியாய் ஒருவருடம் கழித்து, அவர்கள் ஒரு ஆண் குழந்தையைத் தத்தெடுத்தனர்.
ஆதியாகமம் 15இல், ஆபிராமுக்கும் தேவனுக்கும் இடையில் நேர்மையான உரையாடல் ஒன்று நிகழ்கிறது. தேவன் அவனிடம், “ஆபிராமே, நீ பயப்படாதே; நான் உனக்கு… மகா பெரிய பலனுமாயிருக்கிறேன் என்றார்” (வச. 1). ஆனால் தன் எதிர்காலத்தைக் குறித்து நிச்சயமில்லாதிருந்த ஆபிராம், “கர்த்தராகிய ஆண்டவரே, அடியேனுக்கு என்ன தருவீர்? நான் பிள்ளையில்லாமல் இருக்கிறேனே” என்று வெளிப்படையாய் பேசுகிறான் (வச. 2).
ஆபிராமுக்கு ஏற்கனவே தேவன், “உன் சந்ததியைப் பூமியின் தூளைப்போலப் பெருகப்பண்ணுவேன்” என்று வாக்குப்பண்ணியிருக்கிறார் (13:16). தற்போது தேவன் அதை மீண்டும் அவனுக்கு நினைவுபடுத்துகிறார். இங்ஙனம் தேவனுடைய பதிலைப் பாருங்கள்: தேவன் அவனை வானத்தை அண்ணாந்து பார்க்கும்படி செய்து, “நட்சத்திரங்களை எண்ண உன்னாலே கூடுமானால், அவைகளை எண்ணு” என்று சொல்லி, அதைப்போலவே எண்ணக்கூடாத அளவு அவனுடைய சந்ததி இருக்கும் என்று குறிப்பிடுகிறார் (15:5).
பின்பாக, தேவன் அவனுடைய பெயரை ஆபிரகாம் (ஜாதிகளுக்கு தகப்பன்) என்று மாற்றுகிறார். ஆபிரகாமைப் போல் நீங்களும் நானும் நேர்மையாய் நம்மை வெளிப்படுத்தி, நமக்கும் மற்றவர்களுக்கும் அவர் நன்மை செய்வார் என்று பூரணமாய் நம்புவோம்.
இந்த கடினமான சூழ்நிலையில் ஆபிரகாம் எந்த வகையில் தேவனால் பெலப்படுத்தப்பட்டான் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? நேர்மையான எந்த உரையாடலை தேவனோடு ஜெபத்தில் இன்று நிகழ்த்தப்போகிறீர்கள்?
அன்பின் பரலோகப் பிதாவே, என் வாழ்க்கையில் அந்தரங்க காரியங்களையும் பொருட்படுத்துவதற்காய் நன்றி. ஜெபத்தில் உம்மோடு நெருங்கிய உறவில் இருக்க எனக்கு உதவிசெய்யும்.