அநீதியை எதிர்க்கும்படியான பிரசங்கத்தைக் கேட்டவுடன் ஒரு சபை விசுவாசி போதகரிடம் வந்து, கண்ணீருடன் மன்னிப்புக் கேட்டார். ஏனென்றால், தங்கள் திருச்சபைக்கு கீழ் ஜாதியைச் சேர்ந்தவர் போதகராக வருவதை விரும்பாததினால், தான் பாரபட்சத்துடன் செயல்பட்டதாகவும், அதினால் அந்த போதகருக்கு தான் ஓட்டுப்போடாததையும் எண்ணி மனம் வருந்தினார். “அதற்காக என்னை நீங்கள் மன்னிக்கவேண்டும். இந்த பாரபட்சம் மற்றும் ஜாதி வெறி போன்ற குப்பைகள் என் பிள்ளைகளின் வாழ்க்கையை பாதிக்கக்கூடாது. நான் உங்களுக்கு ஓட்டுப் போடாமல் தவறு செய்துவிட்டேன்” என்று வருந்தினார். கண்ணீருடனான அவருடைய பாவ அறிக்கை, போதகரின் கண்ணீரோடு கூடிய மன்னிப்பை வாங்கித் தந்தது. தொடர்ந்த வாரத்தில், மனந்திரும்பிய இந்த விசுவாசியின் சாட்சியைக் கேட்டு திருச்சபை மகிழ்ச்சியடைந்தது. 

இயேசுவின் சீஷரும் ஆதித்திருச்சபையின் மூத்த தலைவருமான பேதுருவும் புறஜாதி மக்களைக் குறித்த தன்னுடைய பாரபட்ச சிந்தையை மாற்றவேண்டியிருந்தது. தீட்டாய் கருதப்பட்ட புறஜாதி மக்களுடன் உட்கார்ந்து புசிப்பதும் குடிப்பதும், சமுதாய மற்றும் மார்க்க ரீதியாய் அனுமதிக்கப்படவில்லை. பேதுருவும், “அந்நிய ஜாதியானோடே கலந்து அவனிடத்தில் போக்குவரவாயிருப்பது யூதனானவனுக்கு விலக்கப்பட்டிருக்கிறதென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்” (அப்போஸ்தலர் 10:28) என்று சொல்லுகிறார். அந்த நம்பிக்கையை மாற்றி, “எந்த மனுஷனையும் தீட்டுள்ளவனென்றும் அசுத்தனென்றும்” (வச. 28) சொல்லாதபடிக்கு மனமாற்றப்பட்ட பேதுருவுக்கு தேவன் இயற்கைக்கு அப்பாற்பட்ட விதத்தில் அதை வெளிப்படுத்தியிருக்கவேண்டும் (வச. 9-23). 

வேதாகமத்தின் போதனைகள், ஆவியானவரின் உணர்த்துதல் மற்றும் வாழ்க்கை அனுபவங்கள் ஆகியவற்றைக் கொண்டு தேவன் தொடர்ச்சியாக நம் உள்ளத்தில் கிரியை செய்து, மற்றவர்களைக் குறித்த நம் பாரபட்ச சிந்தையை மாற்றுகிறார். “தேவன் பாரபட்சமில்லாதவர்” என்பதை நமக்கு உணர்த்துகிறார் (வச. 34).