மக்களின் முன்னிலையில் பேசும்போது ஏற்படும் பயத்தை எப்படி மேற்கொள்வது என்று மகேஷ் என்னிடத்தில் ஆலோசனைக் கேட்டான். மக்களுக்கு முன்பு பேசுவதென்றாலே எல்லோரைப் போலவும் இருதயம் படபடக்கிறது; நாவு வறண்டு, வாய் ஒட்டிக்கொள்கிறது; முகம் சிவக்கிறது. “கிளாசோஃபோபியா” என்றழைக்கப்படும் இந்த வகையான பயம் சமுதாயத்தில் பொதுவானது. மரண பயத்தைக் காட்டிலும் மக்களுக்கு முன்பாகப் பேசுவது கொடுமையானது என்று வேடிக்கையாகவும் சொல்லுவார்கள். மகேஷின் இந்த குறைபாட்டை நிவிர்த்தி செய்வதற்கு, எப்படி பேசுகிறோம் என்பதை விட என்ன பேசுகிறோம் என்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பேசும்படி ஆலோசனைக் கொடுத்தேன்.
சொல்லுபவரின் திறமைக்கு முக்கியத்துவம் கொடுப்பதிலிருந்து சொல்லப்படும் செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்த முறையை பின்பற்றியே பவுல் அப்போஸ்தலரும் மக்களை தேவனண்டை வழிநடத்தியுள்ளார். கொரிந்திய சபைக்கு எழுதும்போது, “மனுஷ ஞானத்திற்குரிய நயவசனமாயிராமல்” (1 கொரி. 2:5), கிறிஸ்துவையும் அவருடைய சிலுவை மரணத்தையும் மையப்படுத்துவதாக அறிவிக்கிறார். தன்னுடைய பேச்சுத் திறமையை வளர்க்கும்படியல்லாமல், தன்னுடைய செய்தியை அதிகாரமுள்ளதாய் மாற்றும்படிக்கே ஆவியானவரை பவுல் நம்புகிறார்.
தேவனை தனிப்பட்ட வகையில் அறிந்துகொள்ளும்போது, அவரைக் குறித்து நம்மை சுற்றியுள்ளவர்களிடம் அறிவிக்க தவறமாட்டோம். ஆயினும் சிலநேரங்களில் பேச்சுக் குறைபாட்டின் காரணமாய், துணிந்து பேசமுடியாமல் கூச்சப்பட்டுத் தயங்குகிறோம். “என்ன” என்னும் கேள்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதைக் காட்டிலும், தேவன் யார் என்பதையும் அவருடைய ஆச்சரியமான கிரியைகளையும், பவுலைப் போல கூச்சமில்லாமல் துணிச்சலாய் நம்மால் பிரசங்கிக்க முடியும்.
மற்றவர்களிடம் தேவனைக் குறித்து பகிருவதற்கு, எது உங்களுக்குத் தடையாயிருக்கிறது? சுவிசேஷம் அறிவிப்பதில் பவுலின் பார்வை உங்களை எந்தவிதத்தில் தகுதிப்படுத்துகிறது?
பரலோகப் பிதாவே, வேதாகமத்தின் மூலமாகவும், என்னிடத்தில் உம்மைக் குறித்து பகிர்ந்துகொண்டவர்களுக்காகவும் நன்றி! என்னுடைய வார்த்தைகளை அதிகாரமுள்ளதாய் மாற்றுவீர் என்னும் நம்பிக்கையோடு உம்மை மற்றவர்களுக்கு அறிவிக்க எனக்கு உதவிசெய்யும்.