லியோ டால்ஸ்டாயின் “குடும்ப சந்தோஷம்” என்னும் நாவலின் முக்கிய கதாபாத்திரமான செர்ஜே, அழகும் இளமையும் நிறைந்த மாஷாவை சந்திக்கிறார். வயதில் மூத்தவரான செர்ஜே, உலகம் சுற்றும் ஒரு வியாபாரி. ஆனால் மாஷா உலகமறியாத ஒரு கிராமத்துப் பெண். இருவரும் ஒருவரையொருவர் நேசித்து, பின் திருமணம் செய்துகொள்கின்றனர். 

திருமணத்திற்குப் பின் ஒரு கிராமத்தில் குடியேறுகின்றனர். அந்த கிராம சுற்றுப்புறத்தைப் பார்த்து மாஷா மிகவும் சலிப்படைந்திருக்கிறாள். அதை அறிந்த செர்ஜே, செயின்ட் பீட்டர்ஸ்பர்கை சுற்றிப்பார்ப்பதற்கு ஒரு பயணத்தை ஏற்பாடு செய்கிறான். அங்கே மாஷாவின் அழகும் வசீகரமான தோற்றமும் அவளுக்கு திடீர் புகழை தேடித்தருகிறது. அங்கிருந்து வீடு திரும்பும் நேரம் வந்தபோது, அந்த ஊரின் இளவரசர் மாஷாவை சந்திக்க விரும்பி அங்கு வருகிறார். செர்ஜே, அவளைக் கட்டாயப்படுத்தி தன் ஊருக்குத் திரும்ப அழைத்து வந்திருக்க முடியும். ஆனால், அவளையே தீர்மானம் எடுக்கும்படி விட்டுவிடுகிறான். அவள் அங்கேயே தங்க தீர்மானிக்கிறாள். அவளின் துரோகம் செர்ஜேயின் இருதயத்தை உடைத்தது. 

செர்ஜேயைப் போன்று அவருக்கு உண்மையாய் இருக்கும்படிக்கு, தேவனும் நம்மை கட்டாயப்படுத்துவதில்லை. அவர் நம்மை நேசிப்பதால் அவருக்கு சாதகமாகவோ அல்லது எதிராகவோ தீர்மானம் எடுக்கும் அதிகாரத்தை நம்மிடத்திலேயே கொடுக்கிறார். அவருடைய குமாரன் இயேசுகிறிஸ்துவை நம்முடைய பாவங்களுக்கான பலியாக ஏற்றுக்கொண்டதே நாம் அவருக்கு சாதகமாய் எடுத்த முதல் தீர்மானம் (1 யோவான் 4:9-10). அதற்கு பின்பு, வாழ்நாள் முழுவதும் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் நம்மிடத்தில்தான் கொடுக்கப்பட்டுள்ளது. 

ஆவியன் நடத்துதலின்படி, தேவனுக்கு உண்மையாய் இருக்க தீர்மானிக்கிறோமா? அல்லது உலகம் நம்மை ஆளுகை செய்ய அனுமதிக்கிறோமா? தாவீது, அந்த அளவிற்கு நேர்த்தியான ஒரு மனிதன் இல்லை. ஆனால், “கர்த்தருடைய வழிகளைக்” கைக்கொண்டதாகவும் அதின் மூலம் நல்ல பலனை அடைந்ததாகவும் அடிக்கடி குறிப்பிடுகிறார் (சங்கீதம் 18:21-24). நம்முடைய தீர்மானங்கள் தேவனை கனப்படுத்தும்போது, “தயவுள்ளவனுக்கு.. (அவர்) தயவுள்ளவராக” வெளிப்படுகிறார் என்று தாவீது சொன்ன ஆசீர்வாதத்தை நாமும் அனுபவிக்க முடியும்.