நமது நிஜமான அங்கீகாரம்
எனது பெற்றோரின் புகைப்பட ஆல்பத்தில் ஒரு சிறுவனின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது. பருக்கள் நிறைந்த வட்ட முகமும் நீட்டிக்கொண்டிருந்த தலைமுடியும் அவனுக்கு இருந்தது. அவனுக்கு கேலிச் சித்திரங்கள் பிடிக்கும்; சில பழவகைகள் பிடிக்காது; ஒரு வகையான இசையை விரும்புவான். அதே புகைப்பட ஆல்பத்தில் ஒரு இளைஞனுடைய புகைப்படம் ஒன்றும் இருந்தது. அவனுடைய முகம் வட்டமாய் இல்லாமல் சற்று நீண்டிருந்தது; தலைமுடி நீட்டிக்கொண்டில்லாமல் படிந்திருந்தது; முகத்தில் பருக்கள் இல்லை; அவனுக்கும் சில பழவகைகள் பிடிக்கும்; கேலிச் சித்திரங்களை விட திரைப்படங்களை அதிகம் விரும்புகிறான்; குறிப்பிட்ட சில இசைகளில் ஆர்வமுள்ளவன். அந்த சிறுவனின் முகமும் இந்த இளைஞனின் முகமும் ஒன்றுபோலவே இருந்தது. அறிவியல்பூர்வமாய் தோல், பற்கள், இரத்தம், எலும்பு ஆகியவற்றின் உருவ அமைப்பில் இருவரும் மற்றவரிலிருந்து வேறுபடுகின்றனர். எனினும், அந்த இரண்டு படங்களும் என்னுடையதுதான். மனிதனின் இந்த தோற்ற முரண்பாடு தத்துவமேதைகளையும் குழப்பத்தில் ஆழ்த்துகிறது. ஒவ்வொரு பருவத்திலும் நம்முடைய உருவ அமைப்பு மாற்றமடைந்துகொண்டே இருப்பதால் எது நம்முடைய நிஜமான உருவம்?
வேதம் இக்கேள்விக்கு பதிலளிக்கிறது. தாயின் கருவிலே தேவன் நம்மை உருவாக்கத் துவங்கினதுமுதல் (சங். 139:13-14), படிப்படியாய் வளர்ந்து ஒரு நேர்த்தியான உருவத்தை நாம் அடைகிறோம். நம்முடைய வாழ்க்கையின் இறுதியில் நாம் எந்த உருவத்தில் இருக்கப்போகிறோம் என்பது நமக்கு தெரியாது. ஆனால் நாம் தேவனுடைய பிள்ளைகளாய் இருந்தால் இயேசுவைப் போல மாறுவோம் என்பதை மட்டும் நன்கு அறிந்திருக்கிறோம் (1 யோ. 3:2): நம்முடைய சரீரம் அவருடைய தன்மையையும், நம்முடைய ஆள் தத்துவம் அவருடைய சுபாவத்தையும், பாவங்கள் தொலைந்து, வரங்கள் பிரதிபலிக்கிற வாழ்க்கையையும் பெற்றுக்கொள்வோம்.
இயேசுவின் வருகை வரும்வரை இந்த எதிர்கால உருவ மாற்றத்திற்கு நேராய் நாம் இழுக்கப்படுகிறோம். தேவன் நம்மில் கிரியை செய்யும்போது படிப்படியாய் அவருடைய சாயலை நாம் தெளிவாய் பிரதிபலிக்கமுடியும் (2 கொரி. 3:18). நாம் தெரிந்துகொள்ளப்பட்ட நோக்கத்தை இன்னும் அடையவில்லை. ஆனால் கிறிஸ்துவைப் போல் மாறும்போது நம்முடைய நிஜமான அங்கீகாரத்தைப் பெறுகிறோம்.
நம்பிக்கையோடு காத்திருத்தல்
விடுமுறை நாட்களை கழிக்கச் சென்ற இடத்தில் எங்களுக்கு உதவிபுரிய ரொஜிலியோ என்பவர் நியமிக்கப்பட்டிருந்தார். அவரோடு பேசிக்கொண்டிருந்தபோது, தேவன் அவருக்கு கலி என்னும் பேர்கொண்ட இரக்ககுணமுள்ள, விசுவாசத்தில் உறுதியான மனைவியை கொடுத்ததற்காய் தேவனுக்கு நன்றி சொன்னார். அவர்களுக்கு முதல் குழந்தை பிறந்தபின்பு, மனநலிவு நோயினால் பாதிக்கப்பட்ட அவர்களுடைய சகோதரியின் குழந்தையையும் சேர்த்து பராமரிக்கவேண்டிய வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது. அதற்கு பின்பு, வயது முதிர்ந்த ரொஜிலியோவின் மாமியாரையும் வீட்டில் வைத்து பராமரிக்க வேண்டிய அவசியமும் நேரிட்டது.
தேவன் பராமரிக்கும்படி அவர்களுடைய பொறுப்பில் கொடுத்த உறவுகளை அவருடைய மனைவியின் பொறுப்பில் நம்பிக்கையுடன் ஒப்படைத்துவிட்டு, ரொஜிலியோ அதிகமான நேரம் வேலை பார்க்க முடிந்தது. கணவன் மனைவியாய் அவர்களுக்குள் இருக்கும் பாசப் பிணைப்பும், உறவுகளை பராமரிக்கும் அவர்களின் கரிசணை குணமும் என்னை ஈர்த்ததைக் குறித்து அவரிடம் தெரிவித்தபோது, “அவர்களுக்கு மட்டுமல்ல, உங்களுக்கு சேவை செய்வதும் என்னுடைய மகிழ்ச்சி” என்று ரொஜிலியோ புன்சிரிப்புடன் தெரிவித்தார்.
ரொஜிலியோவின் வாழ்க்கை, பரந்த மனப்பான்மையோடு வாழ்தலின் மேன்மையையும் சுயநலமில்லாமல் உதவுவதின் மூலம் தேவனை சார்ந்திருத்தலையும் உறுதியளிக்கிறது. பவுல் அப்போஸ்தலர், “சகோதரசிநேகத்திலே ஒருவர்மேலொருவர் பட்சமாயிருங்கள்… நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்; ஜெபத்திலே உறுதியாய்த்தரித்திருங்கள்; பரிசுத்தவான்களுடைய குறைவில் அவர்களுக்கு உதவிசெய்யுங்கள்; அந்நியரை உபசரிக்க நாடுங்கள்” (ரோமர் 12:10-13) என்று தேவஜனத்தை ஊக்கப்படுத்துகிறார்.
நம்மால் அல்லது நாம் நேசிக்கிறவர்களால் மேற்கொள்ள முடியாத பிரச்சனைகளுக்குள் இந்த வாழ்க்கை நம்மை நடத்தலாம். ஆனால் தேவனுக்காய் காத்திருக்கும் இந்த நாட்களில் தேவன் நமக்கு கொடுத்துள்ள அனைத்தையும் மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளும்போது, நாம் தேவனுடைய தெய்வீக அன்போடு இணைந்துகொள்கிறோம்.
சரியான தீர்ப்பு
பதினான்கு வயது சிறுவனைக் கொலைசெய்த குற்றத்திற்காக 1983ஆம் ஆண்டு மூன்று வாலிபர்கள் கைதுசெய்யப்பட்டனர். “சிறுவனின் தடகள சட்டைக்காய் அவன் சுடப்பட்டான்” என்று ஊடகங்களில் செய்தி வெளியானது. கைதுசெய்யப்பட்ட இந்த மூன்று வாலிபர்களும் குற்றமற்றவர்கள் என்று நிருபிக்கப்படுவதற்குள் அவர்கள் 36 ஆண்டுகள் சிறைக் கம்பிகளுக்கு பின்பாக செலவிடவேண்டியிருந்தது. ஆம், அந்த கொலையை செய்தது வேறொரு நபர். அந்த மூவரையும் குற்றமற்றவர்கள் என்று தீர்ப்பளித்து அவர்களை விடுவிக்குமுன், அந்த நீதிபதி அவர்களிடம் மன்னிப்புகேட்டார்.
எவ்வளவுதான் நாம் முயற்சிசெய்தாலும் (நம்முடைய அதிகாரிகள் எவ்வளவு நன்மைகளை செய்திருந்தாலும்) மனிதனுடைய நீதி பெரும்பாலும் குறைவுள்ளதாகவே இருக்கிறது. நாம் எப்போதும் எல்லா விவரங்களையும் தெரிந்தவர்கள் அல்ல. சிலநேரங்களில் நேர்மையற்றவர்கள், நிஜத்தை தங்களுக்கு சாதகமாக்கிக்கொள்கின்றனர். சிலநேரங்களில் நாமே தவறு செய்கிறோம். தவறுகளை சரிசெய்வதற்கு பல ஆண்டுகள் தேவைப்படுகிறது. ஆனால், இந்த சிக்கலான மனிதர்களை போலல்லாமல், தேவன் சரியான நீதியை வழங்குகிறார். “அவர் கிரியை உத்தமமானது” என்றும் “அவர் வழிகளெல்லாம் நியாயம்” என்றும் மோசே கூறுகிறார் (உப. 32:4). தேவன் உள்ளதை உள்ளதென்று பார்க்கிறார். சிலவேளைகளில் நாம் தவறிழைத்தாலும் கடைசியில் தேவன் அவைகளை நியாயத்தில் கொண்டுவந்து நிறுத்துவார். அது எப்போது என்பது துல்லியமாய் தெரியவில்லை என்றாலும், நாம் நம்பிக்கையோடு சேவிக்கிற தேவன், “நியாயக்கேடில்லாத சத்தியமுள்ள தேவன்; அவர் நீதியும் செம்மையுமானவர்” (வச. 4).
எது சரி, எது தவறு என்று தீர்மானிக்கமுடியாத ஒரு குழப்பமான பாதையில் நாம் நடக்கலாம். நமக்கு அல்லது நம்மை சார்ந்தவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை காலத்திற்கும் சரிசெய்யமுடியாதோ என்று ஒருவேளை நாம் பயப்படலாம். ஆனால் இம்மையிலோ அல்லது மறுமையிலோ, நமக்கான நீதியை நிச்சயமாய் நிலைநாட்டும் நம்முடைய நீதியின் தேவனை முழுமையாய் நம்ப முற்படுவோம்.
புலம்புவது தவறில்லை
நான் முழங்கால்படியிட்டு கண்ணீர் சிந்தினேன். “தேவனே, ஏன் என்னை நீர் கவனித்துக்கொள்வதில்லை?” என்று அழுதேன். அது கோவிட்-19 தொற்று வெகுவாய் பரவிய 2020ஆம் ஆண்டு. கிட்டத்தட்ட ஒருமாத காலமாய் நான் பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தேன். என்னுடைய வேலையில்லா விண்ணப்பத்தில் ஏதோ தவறு ஏற்பட்டது. அமெரிக்க அரசு அறிவித்திருந்த ஊக்கத் தொகையும் வந்து சேர்ந்தபாடில்லை. தேவன் எல்லாவற்றையும் சரிசெய்வார் என்று என் இருதயத்தின் ஆழத்தில் நம்பியிருந்தேன். அவர் என்னை உண்மையாய் நேசிக்கிறார்; என்னை பாதுகாப்பார் என்று நம்பினேன். ஆனாலும் அந்த தருணத்தில் நான் கைவிடப்பட்டதுபோல் உணர்ந்தேன்.
புலம்புவது ஒருவிதத்தில் சரியென்று புலம்பல் புத்தகம் நமக்கு காட்டுகிறது. இப்புத்தகம் கி.மு. 587இல் பாபிலோனியர்கள் எருசலேமை அழிக்கும்போதோ அல்லது அதற்கு பின்னரோ எழுதப்பட்டது. இது மக்கள் சந்தித்த பாடுகள் (3:1,19) அடக்குமுறை (1:18) மற்றும் பட்டினி (2:20; 4:10) போன்றவற்றை விவரிக்கிறது. ஆயினும், புத்தகத்தின் இடையில் நம்பிக்கையை ஏன் இழக்கக்கூடாது என்பதற்கான காரணத்தை ஆசிரியர் நினைவுகூறுகிறார்: “நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரியதாயிருக்கிறது” (வச. 22-23). இந்த கடினமான பேரழிவின் மத்தியிலும், தேவன் உண்மையுள்ளவராக இருக்கிறார் என்று ஆசிரியர் நினைவுகூறுகிறார்.
தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கும் தம்மைத் தேடுகிறவர்களுக்கும் கர்த்தர் நல்லவர் (வச. 25) என்பதை நம்புவது சிலநேரங்களில் கடினமாய் தெரிகிறது. குறிப்பாய், நம்முடைய பாடுகளுக்கு முடிவேயில்லை என்று கருதும் நேரங்களில் தேவனை நம்புவது கடினம். அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார் என்னும் நம்பிக்கையுடன் அவரிடத்தில் புலம்பலாம். அவர் நம்மை நிச்சயமாய் கண்ணோக்கிப் பார்ப்பார்.