நீச்சலடிக்கும் போது விபத்தில் சிக்கி, கைகால்களை செயலிழக்கப்பண்ணும் ஒருவிதமான வாத நோயினால் பாதிக்கப்பட்ட ஜோனி எரிக்சன் டாடா, சிகிச்சைக்குபின் வீடு திரும்பினாள். அந்த விபத்திற்குப் பின் அவளுடைய வாழ்க்கை முற்றிலும் மாறியது. இப்போது குறுகலான கதவின் வழியே அவளுடைய சக்கர நாற்காலி போவதற்கு கடினப்படுகிறது கைகழுவும் தொட்டி உயரமாக இருக்கிறது. அவள் தானாய் உணவு உட்கொள்ள பழகும்வரை, அவளுக்கு உணவு ஊட்ட இன்னொரு நபர் தேவைப்பட்டது. முதல்முறையாக தானாக உணவு உண்ண முயற்சித்தபோது, அது அவள் மீது சிந்தியதால் தன் இயலாமையைக் குறித்து உடைந்துபோனாள். ஆனால் விட்டுவிடவில்லை; தொடர்ந்து முயற்சித்தாள். அவள் சொல்லும்போது, “இயேசுவின் மார்பில் சாய்ந்துகொண்டு, ஓ தேவனே, இதில் எனக்கு உதவிசெய்யும்” என்று கேட்க பழகிக்கொண்டதுதான் நான் கற்றுக்கொண்ட இரகசியம் என்றாள். இன்று அவள் தன்னுடைய உணவை தானே சாப்பிட பழகிக்கொண்டாள்.
ஜோனியின் இந்த சிறை வாழ்க்கை இன்னொரு சிறைக்கைதியை அவளுக்கு நினைவுபடுத்தியதாம். ஆம்! பிலிப்பிய திருச்சபைக்கு நிருபம் எழுதும்போது, ரோம சிறையிருப்பில் இருந்த பவுல் அப்போஸ்தலர். பவுல் தன் வாழ்க்கையில் கண்டுபிடித்த இரகசியத்தை கற்றுக்கொள்ள ஜோனியும் முயற்சித்தாள்: “நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன்” (பிலி. 4:11). இவ்வாறு பவுல் மனநிறைவோடு இருக்கப் பழகிக்கொண்டார்; ஆனால் அவர் இயல்பில் மனநிறைவோடு இல்லை. மனநிறைவை எப்படி கண்டுபிடித்தார்? கிறிஸ்துவை நம்புவதின் மூலமாகவே அதை கண்டுபிடித்தார்: “என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு” (வச. 13).
நாம் அனைவரும் வாழ்க்கையில் வெவ்வேறு சவால்களை சந்திக்கிறோம். ஒவ்வொரு தேவையின்போதும் உதவிக்காகவும், பெலத்திற்காகவும், மன அமைதிக்காகவும் நாம் இயேசுவை சார்ந்துகொள்கிறோம். அவர் நம்முடைய பிரச்சனைகளிலிருந்து நம்மை மீளச்செய்து, அடுத்த கடினமான சவாலை எதிர்கொள்ளவும் நம்மை பெலப்படுத்துகிறார். அவரை நோக்கிப்பார்த்து அந்த மனநிறைவை அடையுங்கள்.
இயேசுவின் மார்பில் சாய்ந்திருப்பது உங்களுக்கு எப்படி மனநிறைவை கொடுக்கிறது? உங்கள் வாழ்க்கையின் எந்த பிரச்சனையோடு போராடிக்கொண்டிருக்கிறீர்கள்? அதை தேவனிடத்தில் எப்படி ஒப்புக்கொடுக்கப்போகிறீர்கள்?
இரட்சிக்கும் கிறிஸ்துவே, எனக்கு தைரியமும் நம்பிக்கையும் கொடுத்ததற்காய் நன்றி. நான் பெலவீனமாய் உணரும்போது, உம்முடைய பெலத்தை சார்ந்துகொள்ள எனக்கு உதவிசெய்யும்.