சில ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு மாலை நேரத்தில் நானும் எனது மனைவியும், இரண்டு நண்பர்களைக் கூட்டிக்கொண்டு மலைப்பாதையின் வழியாய் நடந்துசென்றோம். அந்த குறுகலான மலைப்பாதையானது ஒருபுறத்தில் செங்குத்தான மலைச்சரிவினாலும், மறுபுறத்தில் ஆறுகளாலும் சூழப்பட்டிருந்தது.

ஒரு திருப்பத்தில், பெரிய கரடி ஒன்றைப் பார்த்தோம். அது இங்கும் அங்குமாய் தன் தலையை திருப்பிப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தது. அந்த கரடி எங்களை கவனிக்கவில்லை. ஆனால் அது சீக்கிரம் கவனிக்க நேரிடும்.

எங்கள் நண்பர்களில் ஒருத்தி, தன் கேமராவை எடுத்து, “ஓ! நான் அதை படம் பிடித்தாக வேண்டும்” என்று சொன்னாள். அந்த சூழ்நிலை சாதகமானது இல்லை என்று உணர்ந்த நான், “இல்லை, நாம் இங்கிருந்து புறப்பட்டாக வேண்டும்” என்று கூறினேன். அந்த கரடி எங்கள் பார்வையிலிருந்து முற்றிலும் மறையும்வரை மெல்ல நகர்ந்து, ஓட்டம்பிடிக்க ஆரம்பித்தோம்.

பணக்காரனாக விரும்பும் ஆசைக்கு முன்பதாகவும் அப்படித்தான் ஓடவேண்டும். பணம் வைத்திருப்பது தவறல்ல அது கொடுக்கல் வாங்கலுக்கு நமக்கு அவசியப்படுகிறது. ஆனால் பண ஆசை கொண்டவர்கள், “சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள் என்று பவுல் எச்சரிக்கிறார். பண ஆசை பலவிதமான பாவங்களுக்கு வழிவகுக்கிறது (1 தீமோ. 6:9).

அதற்கு பதிலாக, “நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும்” அடையும்படிக்கு நாம் பிரயாசப்படவேண்டும் (வச. 11). இந்த நற்குணங்களை விரும்பி, அதை தேவனிடத்தில் கேட்கும்போது அவைகள் நம்மில் கிரியை செய்ய ஆரம்பிக்கிறது. நாம் தேவனிடத்தில் சுதந்தரிக்கவிரும்பும் மன திருப்தியை இந்த வழியில்தான் அடையமுடியும்.