ஊசி, பால், காளான், லிஃப்ட், பிறப்பு, தேனீ, போன்று எதை கண்டாலும் பயப்படும் ஆட்ரியன் மாங்க், “மாங்க்” என்று அவரின் பெயரிடப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றின் முக்கியக் கதாப்பாத்திரம். அதில் அவரைப் போன்றே பயப்படும் துணை கதாப்பாத்திரமான ஹெரால்ட் க்ரென்ஷாவுடன் ஒரு காரின் பின்பெட்டியில் அடைத்துவைக்கப்படுகிறார். தன்னுடைய பயங்கள் வரிசையில், கிளாஸ்ட்ரோஃபோபியா என்னும் சிறிய இடத்தில் சிக்கிக்கொண்டதினால் ஏற்படும் பயத்திலிருந்து மாங்க் அன்று விடுவிக்கப்படுகிறார்.

மாங்க் மற்றும் ஹெரால்ட் ஆகிய இருவரும் அந்த காரின் பின்பெட்டியில் பயந்து நடுங்கிக்கொண்டிருக்கும்போது, மாங்கிற்கு ஓர் தீடீர் எண்ணம் உதிக்கிறது. “நாம் இதை தவறான பார்வையில் பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்று நினைக்கிறேன்” என்று மாங்க் கூறுகிறார். “நம்மை அடைத்து வைத்திருக்கிற இந்த பெட்டி, நம்மை மூடவில்லை, உண்மையில் அது நம்மை பாதுகாக்கிறது; வெளியிலிருக்கும் கிருமிகள், பாம்புகள், சத்தங்கள் ஆகியவற்றிலிருந்து இது நிஜமாகவே நம்மை பாதுகாக்கிறது” என்று மாங்க் கூற, ஆச்சரியத்தில் ஹெரால்ட் தன் கண்களை அகல விரித்து, “அப்படியென்றால், இந்த பெட்டி நமது நண்பன்” என்று மெல்லமாக கூறுவதாக கதை அமைக்கப்படுகிறது.

சங்கீதம் 63இல் தாவீதுக்கும் இதேபோன்ற ஒரு வெளிப்பாடு கிடைக்கிறது. “வறண்டதும் விடாய்த்ததுமான நிலத்திலே” இருந்தபோதும், தாவீது கர்த்தருடைய வல்லமையையும் மகிமையையும், கிருபையையும் பார்க்கிறான் (சங். 63:1-3). அந்த வறண்ட பாலைவனத்தையும் தேவன் தனக்கு ஏற்படுத்திய பாதுகாப்பான இடமாய் உணருகிறான். ஒரு பறவைக்குஞ்சு தன் தாயின் சிறகுகளின் கீழ் அடைக்கலம் புகுவதுபோல, தாவீது தேவனிடத்தில் அடைக்கலம் புகுகிறான். வனாந்திரமான அந்த இடத்திலும், “நிணத்தையும் கொழுப்பையும் உண்டதுபோல” (வச. 5) தன் ஆத்துமா திருப்தியாகிறது என்றும் “ஜீவனைப்பார்க்கிலும்” (வச. 3) மேலான கிருபையினால் பெலமும் உற்சாகமும் அடைகிறான்.