பிரபலமான வீடு புதுப்பிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் தொகுப்பாளினி அடிக்கடி “கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்” என்று கூறுவது வழக்கம். அதற்கு பின்பு, தாங்கள் வர்ணம் பூசி, புதுப்பித்த வீட்டைக் காண்பிப்பாள். அப்படி ஒருநாளின் நிகழ்ச்சியில், தங்களுடைய புதுப்பிக்கப்பட்ட வீட்டின் பிரமிக்கத்தக்க அழகைப் பார்வையிட்ட அதின் உரிமையாளர், ஆச்சரியத்தில், “ஓ! அழகாயிருக்கிறது” என்று மூன்று முறை உணர்ச்சிப்பொங்க கூறினாள்.

வேதாகமத்தில் “கொஞ்சம் கற்பனை செய்துபாருங்கள்” என்று சொல்லத்தூண்டும் வேதப்பகுதிகளில் ஒன்றுதான், ஏசாயா 65:17-25. என்ன ஆச்சரியமான காட்சி! புதிய வானமும் புதிய பூமியும் மீண்டும் உண்டாக்கப்படபோகிறது (வச. 17). அது மிகவும் நிஜமான ஒரு உலகம்; வாழ்க்கையை மாற்றும், பாதுகாப்புள்ள உலகம். அங்கே “வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருப்பார்கள், திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனியைப் புசிப்பார்கள்” (வச. 21). வன்முறைகள் எல்லாம் கடந்த காலமாய் மாறிவிடும்: “என் பரிசுத்த பர்வதமெங்கும் அவைகள் தீங்குசெய்வதுமில்லை, கேடுண்டாக்குவதுமில்லை” (வச. 25).

ஏசாயா 65இல் பதிவாகியுள்ள இந்த பிரமிக்கத்தக்க படைப்புகள் எதிர்காலத்தில்தான் நடக்கப்போகிறது. அதை நடப்பிக்கும் தேவன் தற்போது வாழ்க்கை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். பவுல் அப்போஸ்தலர், “ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின” (2 கொரி. 5:17) என்று உறுதியளிக்கிறார். சீரமைக்கப்படவேண்டிய தேவை உனக்கு இருக்கிறதா? சந்தேகம், கீழ்ப்படியாமை, வேதனை போன்றவற்றால் உன் வாழ்க்கை சிதைக்கப்பட்டிருக்கிறதா? இயேசு, வாழ்க்கையை சீரமைத்து அழகாய் மாற்றுவது நிஜம். அவரை நம்பி, அவரையே சார்ந்துகொள்ளுகிறவர்களுக்கு அது சாத்தியமாகிறது.