டைனோசர்கள் வாழ்ந்த நாட்களில் அது எப்படி இருந்திருக்கும்? பெரிய பற்கள்? செதில் தோல்கள்? நீண்ட வால்? ஒரு ஓவியர் இந்த பெரிய உயிரினத்தை பெரிய ஓவியமாகத் தீட்டினார். 20அடி உயரமும் 60அடி அகலமும் கொண்ட அந்த சுவரோவியம், கைதேர்ந்த நபர்களால் சாம் நோபுள் ஒக்லஹோமா உயிரியல் பூங்காவில் கவனத்துடன் பொருத்தப்பட்டது.
அந்த பெரிய உருவத்திற்கு முன் நிற்கும் எவருக்கும் தாங்கள் வெகு சிறியவர்கள் என்ற உணர்வு ஏற்படும். “பிகெமோத்” என்னும் பெரிய மிருகத்தைக் குறித்து வேதாகமத்தில் வாசிக்கும்போது எனக்கும் அதே உணர்வுதான் ஏற்படுகிறது (யோபு 40:15). இந்த பெரிய மிருகம் மாட்டைப்போல் புல்லைத் தின்கிறது. அதின் எலும்புகள் இரும்பு கம்பிகள் போலிருக்கிறது. அதின் வாலை கேதுரு மரத்தைப் போல் நீட்டுகிறது. அது மலைகளில் மேய்ந்து, சதுப்பு நிலங்களில் படுத்துக்கொள்கிறது. நதிகளின் வெள்ளம் புரண்டுவந்தாலும் அது பயப்படாது.
இந்த வியக்கத்தக்க உயிரினத்தை அதை உண்டாக்கியவரைத் தவிர்த்து யாராலும் கட்டுப்படுத்த முடியாது (வச. 19). இதை, கடினமான உபத்திரவத்தின் பாதையில் யோபு நடக்கும்போது தேவன் அவனுக்கு நினைப்பூட்டுகிறார். யோபு தேவனிடத்தில் கேள்வி கேட்பதற்கு முன்பு, வேதனை, குழப்பம், விரக்தி, என்று பல கடினமான பாதைகளின் ஊடாய் கடந்து வருகிறான். ஆனால் அவைகளின் உண்மையான உருவத்தை தேவனுடைய பதில் யோபுக்கு காண்பித்தது. யோபின் பிரச்சனைகளைக் காட்டிலும் தேவன் பெரியவர்; யோபைக் காட்டிலும் அந்த பிரச்சனைகளை அவரால் நேர்த்தியாய் கையாள முடியும் என்பதை யோபுக்கு உணர்த்தப்படுகிறது. கடைசியில், “தேவரீர் சகலத்தையும் செய்யவல்லவர்” (42:2) என்பதை யோபு ஒப்புக்கொண்டான்.
எது பெரியது? உன்னுடைய கடினமான பிரச்சனைகளா? அல்லது அனைத்தையும் உண்டாக்கிய ஆண்டவரா? தேவனைக் குறித்த உன்னுடைய பார்வை எந்த அளவிற்கு பிரச்சனைகளை எதிர்கொள்ள உனக்கு உதவுகிறது?
அன்பான தேவனே, இன்று நான் சந்திக்கிற பிரச்சனைகளில் உம்மால் எனக்கு உதவமுடியும் என்று நம்புகிறேன். போராட்டங்கள் என்னை சூழும்போது, உம்முடைய வல்லமையையும் நன்மையையும் சார்ந்துகொள்ள எனக்கு உதவிசெய்யும்.