விடுமுறை நாட்களை கழிக்கச் சென்ற இடத்தில் எங்களுக்கு உதவிபுரிய ரொஜிலியோ என்பவர் நியமிக்கப்பட்டிருந்தார். அவரோடு பேசிக்கொண்டிருந்தபோது, தேவன் அவருக்கு கலி என்னும் பேர்கொண்ட இரக்ககுணமுள்ள, விசுவாசத்தில் உறுதியான மனைவியை கொடுத்ததற்காய் தேவனுக்கு நன்றி சொன்னார். அவர்களுக்கு முதல் குழந்தை பிறந்தபின்பு, மனநலிவு நோயினால் பாதிக்கப்பட்ட அவர்களுடைய சகோதரியின் குழந்தையையும் சேர்த்து பராமரிக்கவேண்டிய வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது. அதற்கு பின்பு, வயது முதிர்ந்த ரொஜிலியோவின் மாமியாரையும் வீட்டில் வைத்து பராமரிக்க வேண்டிய அவசியமும் நேரிட்டது.
தேவன் பராமரிக்கும்படி அவர்களுடைய பொறுப்பில் கொடுத்த உறவுகளை அவருடைய மனைவியின் பொறுப்பில் நம்பிக்கையுடன் ஒப்படைத்துவிட்டு, ரொஜிலியோ அதிகமான நேரம் வேலை பார்க்க முடிந்தது. கணவன் மனைவியாய் அவர்களுக்குள் இருக்கும் பாசப் பிணைப்பும், உறவுகளை பராமரிக்கும் அவர்களின் கரிசணை குணமும் என்னை ஈர்த்ததைக் குறித்து அவரிடம் தெரிவித்தபோது, “அவர்களுக்கு மட்டுமல்ல, உங்களுக்கு சேவை செய்வதும் என்னுடைய மகிழ்ச்சி” என்று ரொஜிலியோ புன்சிரிப்புடன் தெரிவித்தார்.
ரொஜிலியோவின் வாழ்க்கை, பரந்த மனப்பான்மையோடு வாழ்தலின் மேன்மையையும் சுயநலமில்லாமல் உதவுவதின் மூலம் தேவனை சார்ந்திருத்தலையும் உறுதியளிக்கிறது. பவுல் அப்போஸ்தலர், “சகோதரசிநேகத்திலே ஒருவர்மேலொருவர் பட்சமாயிருங்கள்… நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்; ஜெபத்திலே உறுதியாய்த்தரித்திருங்கள்; பரிசுத்தவான்களுடைய குறைவில் அவர்களுக்கு உதவிசெய்யுங்கள்; அந்நியரை உபசரிக்க நாடுங்கள்” (ரோமர் 12:10-13) என்று தேவஜனத்தை ஊக்கப்படுத்துகிறார்.
நம்மால் அல்லது நாம் நேசிக்கிறவர்களால் மேற்கொள்ள முடியாத பிரச்சனைகளுக்குள் இந்த வாழ்க்கை நம்மை நடத்தலாம். ஆனால் தேவனுக்காய் காத்திருக்கும் இந்த நாட்களில் தேவன் நமக்கு கொடுத்துள்ள அனைத்தையும் மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளும்போது, நாம் தேவனுடைய தெய்வீக அன்போடு இணைந்துகொள்கிறோம்.
தேவையோடிருக்கும் ஒருவரின் தேவையை இன்று ஜெபத்தின் மூலமாகவும் கொடுப்பதின் மூலமாகவும் எப்படி சந்திக்கப் போகிறீர்கள்? தேவனை நம்பி காத்திருந்தபோது இன்னொரு நபரைக் கொண்டு உங்களுடைய தேவையை தேவன் எப்படி சந்தித்தார்?
தேவனே, உம்முடைய கிரியைக்காய் காத்திருக்கும் இந்த நாட்களில், மற்றவர்களை நேசிக்க எனக்கு உதவும்.