ஆப்பிரிக்க நாட்டின் காங்கோ பகுதியில் ஆங்கில மிஷனரி மருத்துவரான ஹெலன் ரோஸ்வேர் 1964இல் ஏற்பட்ட சிம்பா கிளர்ச்சியின்போது கிளர்ச்சியாளர்களால் சிறைபிடிக்கப்பட்டார். அவர் அவர்களால் தாக்கப்பட்டு, தவறாய் கையாளப்பட்டதால், அவர் மிகவும் பாதிக்கப்பட்டார். தொடர்ந்த நாட்களில், “இது எனக்கு தகுதியானதா?” என்று தனக்குள்ளேயே கேட்டுக்கொண்டார்.

இயேசுவைப் பின்தொடர்வதற்கான கிரயத்தை அவள் சிந்திக்கத் தொடங்கினபோது, தேவன் அதைப் பற்றி அவளிடம் பேசுவதை உணர்ந்தாள். பல வருடங்கள் கழித்து அவள் ஒரு நேர்காணலுக்கு பேட்டியளிக்கும்போது, “கிளர்ச்சியின் மிகவும் மோசமான தருணங்களில், கர்த்தர் என்னிடம், “இது எனக்கு தகுதியானதா?” என்னும் கேள்வியை மாற்றி “நான் இதற்கு தகுதியானவளா?” என்று கேட்கும்படி எனக்கு உணர்த்தினார். அவளுடைய வலி மிகுந்த வேதனைக்கு மத்தியிலும் “ஆம்! அவர் தகுதியானவர்” என்னும் முடிவுக்கு தான் வந்ததாக அறிவித்தார். 

தனது துன்பகரமான சோதனையின்போது அவளுக்குள் இருந்த தேவ கிருபையின் மூலம், ஹெலன் ரோஸ்வேர், அவருக்காக மரணத்தை கூட அனுபவித்த மீட்பருக்காக எதையும் சகிக்கலாம் என்ற முடிவுக்கு வந்தார். “அவர் தகுதியானவர்” என்ற அவரது வார்த்தைகள் வெளிப்படுத்துதல் புத்தகத்தில் இயேசுவின் சிங்காசனத்தைச் சுற்றியுள்ளவர்களின் அழுகையை எதிரொலிக்கின்றன: “அவர்களும் மகா சத்தமிட்டு: அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் வல்லமையையும் ஐசுவரியத்தையும் ஞானத்தையும் பலத்தையும் கனத்தையும் மகிமையையும் ஸ்தோத்திரத்தையும் பெற்றுக்கொள்ளப் பாத்திரராயிருக்கிறார் என்று சொன்னார்கள்!” (5:12).

நம்முடைய இரட்சகர் நமக்காக துன்பப்பட்டு, இரத்தம் சிந்தி மரித்தார்; நித்திய ஜீவனையும் நம்பிக்கையையும் இலவசமாக நாம் பெறுவதற்காக, தன்னை முழுவதுமாக ஒப்புக்கொடுத்தார். அவருடைய அனைத்துமே நம் அனைவருக்கும் தகுதியானவை. அவர் தகுதியானவர்!