ஒவ்வொரு நாளின் விடியலையும் அவள் வரவேற்பதை நான் காண்கிறேன். அவள் எங்கள் உள்ளூர் பவர் வாக்கர். நான் என் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லும்போது, அவள் சாலையின் முனையில் இருப்பாள். பெரிய ஹெட்ஃபோன்களை மாட்டிக்கொண்டு, முழங்கால் உயரமான, வண்ணமயமான சாக்ஸ் போட்டுக்கொண்டு, அவளது கைகள் மற்றும் கால்களை மாறி மாறி இயக்கி நடந்து கொண்டு, எப்போதுமே ஒரு காலை தரையில் வைத்தவளாய் இருப்பாள். இந்த விளையாட்டு சாதாரணமான ஓடுகிற பயிற்சி விளையாட்டல்ல; இது வேறுபட்டது. பவர் வாக்கிங் என்பது ஒரு அவசியமான கட்டுப்பாட்டை உள்ளடக்கியது, ஓடுவதற்கான உடலின் இயற்கையான விருப்பத்தின் மறுசீரமைப்பு. இது ஓடுவது போல் தெரியவில்லை என்றாலும், ஓடுவதற்கு அல்லது ஜாகிங் செய்வதற்கு எவ்வளவு ஆற்றல், கவனம் மற்றும் சக்தி தேவையோ, இதை செய்வதற்கு அதைவிட அதிகம் தேவை. ஆனால் இது கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பயிற்சி.

கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சக்தி – அதுதான் முக்கியம். பவர் வாக்கிங் போன்ற வேதாகம மனத்தாழ்மை பெரும்பாலும் பலவீனமாகக் கருதப்படுகிறது. ஆனால் உண்மை, அது இல்லை. தாழ்மை என்பது நம் பலங்களையும் திறன்களையும் குறைக்கவில்லை; மாறாக, ஒரு அதிகாலை பவர் வாக்கிங் செய்பவரை அவருடைய மனது எப்படி கைகள், கால்கள் மற்றும் பாதங்கள் என்று அனைத்தையும் கட்டுப்படுத்துகிறதோ, அதைப் போலவே மனத்தாழ்மை நம்மை கட்டுப்படுத்துகிறது.

“மனத்தாழ்மையாய் நட” என்ற மீகாவின் வார்த்தைகள் தேவனை மீறிப்போகும் நம்முடைய விருப்பத்தை கட்டுப்படுத்துகிறது. அவர் “நியாயஞ்செய்து இரக்கத்தை சிநேகி” என்று கூறுகிறார் (6:8). அத்தோடு ஏதாவது செய்ய வேண்டும், அதையும் விரைவாகச் செய்ய வேண்டும் என்ற விருப்பத்தையும் கொண்டுவரக்கூடும். நம் உலகில் அன்றாட அநீதிகள் மிக அதிகமாக இருப்பதால் அது நியாயமானது. ஆனால் நாம் தேவனால் கட்டுப்படுத்தப்பட்டு இயக்கப்பட வேண்டும். பூமியில் அவருடைய ராஜ்யத்தின் விடியலில் அவருடைய விருப்பத்தையும் நோக்கங்களையும் நிறைவேற்றுவதே நம்முடைய குறிக்கோள்.