1960 களின் நடுப்பகுதியில், மனித ஆன்மாவில் இருளின் விளைவுகள் குறித்த ஆராய்ச்சியில் இரண்டு பேர் பங்கேற்றனர். அவர்கள் தனித்தனி குகைகளுக்குள் நுழைந்தனர், அதே நேரத்தில் ஆராய்ச்சியாளர்கள் அவர்களின் உணவு மற்றும் தூக்க பழக்கத்தை கண்காணித்தனர். ஒருவர் முழு இருளில் 88 நாட்களும், மற்றொருவர் 126 நாட்களும் இருந்தனர். ஒவ்வொருவரும் எவ்வளவு காலம் முழு இருளில் இருக்கமுடியும் என்று தீர்மானித்திருந்த மாதங்களுக்குள்ளாகவே சோர்ந்து போனார்கள். ஒருவர் குறுகிய நேரம் தான் தூங்கினதாக நினைத்தார். ஆனால் உண்மையாக அவர் 30 மணிநேரம் தூங்கியுள்ளதைக் கண்டுபிடித்தார். இருள் நம்மை திசைதிருப்பும்.

தேவனின் மக்கள் தனித்துவிடப்பட்ட இருளில் தங்களைக் கண்டார்கள். என்ன நடக்கும் என்று தெரியாமல் அவர்கள் காத்திருந்தனர். ஏசாயா தீர்க்கதரிசி இருளை அவர்களின் திசைதிருப்பலுக்கான ஓர் உருவகமாகவும், தேவனின் தீர்ப்பைப் பற்றி பேசுவதற்கான ஒரு வழியாகவும் பயன்படுத்தினார் (ஏசாயா 8:22). முன்னதாக, எகிப்தியர்களை இருள் வாதையாக சந்தித்தது (யாத்திராகமம் 10:21-29). இப்போது இஸ்ரவேல் இருளில் மூழ்கியது.

ஆனால் ஒரு ஒளி வரும். “இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள். மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின் மேல் வெளிச்சம் பிரகாசித்தது” (ஏசாயா 9:2). அடக்குமுறை உடைக்கப்படும்; திசைதிருப்பல் முடிவுக்கு வரும். எல்லாவற்றையும் மாற்றி ஒரு புதிய நாளைக் கொண்டுவரவும் – மன்னிப்பு மற்றும் சுதந்திரத்தின் நாளைக் கொண்டுவரவும் ஒரு பாலகன் பிறப்பார் (வச.6).

இயேசு வந்தார்! உலகின் இருள் திசைதிருப்பக்கூடியதாக இருந்தாலும், கிறிஸ்துவில் காணப்படும் மன்னிப்பு, சுதந்திரம் மற்றும் ஒளியின் ஆறுதலை நாம் பூரணமாக அனுபவிக்கலாம்.