நானும் என் நண்பரும் எனக்கு பிடித்த நடைபயிற்சி இடத்தை சமீபத்தில் பார்வையிட்டோம். காற்று வீசும் மலையில் ஏறி, காட்டுப்பூக்களின் தோட்டத்தை கடந்து, உயரமான பைன் மரக் காடுகளுக்குள் சென்று, பின்னர் ஒரு பள்ளத்தாக்கில் இறங்கி, அங்கே ஒரு கணம் நின்றோம். மேகங்கள் எங்களுக்கு மேலே மென்மையாக மிதந்தன. அருகில் ஒரு சிறு ஊற்று ஓடியது. பறவைகள் பாடும் ஒலி மட்டுமே அங்கு ஒலித்தது. அதையெல்லாம் உள்ளார அனுபவித்துக்கொண்டு, நானும் என் நண்பனும் பதினைந்து நிமிடங்கள் அமைதியாக அங்கே நின்றோம்.

அன்றைய நாளின் இந்த அனுபவம் எங்களுக்கு ஆழ்ந்த சிகிச்சையை போல் இருந்தது. ஒரு அமெரிக்க பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியின் படி, இயற்கையைப் பற்றி நிதானித்து சிந்திப்பவர்கள் அதிக அளவு மகிழ்ச்சியையும், குறைந்த அளவிலான பதட்டத்தையும், பூமியைப் பாதுகாப்பதற்கான அதிக விருப்பத்தையும் தெரிவிக்கிறார்கள். காட்டின் வழியாக நடந்து செல்வது மட்டும் போதாது; நீங்கள் மேகங்களைப் பார்க்க வேண்டும்; பறவைகளின் ஓசையைக் கேட்கவேண்டும். இயற்கையில் வசிப்பது மட்டுமல்ல; அதை உற்று கவனிப்பதும் மிகவும் அவசியம்.

இயற்கையின் நன்மைகளுக்கு ஆன்மீக காரணம் இருக்க முடியுமா? படைப்பு தேவனின் வல்லமையும் அவரது தன்மையையும் வெளிப்படுத்துகிறது என்று பவுல் கூறுகிறார் (ரோமர் 1:20). தேவன் யோபுவிடம் அவரது பிரசன்னத்தை உணர சமுத்திரத்தையும், வானத்தையும், நட்சத்திரங்களையும் பார்க்கும்படி சொன்னார் (யோபு 38-39). “ஆகாயத்து பட்சிகளை” மற்றும் “காட்டுப் புஷ்பங்களை” பற்றி சிந்தித்துப் பார்ப்பது தேவனின் பாதுகாப்பை வெளிப்படுத்துவதோடு பதட்டத்தையும் குறைக்கும் என்று இயேசு கூறுகிறார் (மத்தேயு 6:25-30). வேதத்தில், இயற்கையை உற்று நோக்குவது ஒரு ஆவிக்குரிய நடைமுறையாய் காண்பிக்கப்பட்டுள்ளது.

இயற்கையானது நம்மை ஏன் மிகவும் நேர்மறையாக பாதிக்கிறது என்று விஞ்ஞானிகள் ஆச்சரியப்படுகிறார்கள். ஒரு காரணம் என்னவென்றால், இயற்கையை கவனிப்பதன் மூலம், அதைப் படைத்த தேவனை பற்றியும் அவர் நம்மை கண்ணோக்குகிறார் என்பது ஒரு காரணமாய் இருக்கலாம்.