பல தசாப்தங்களுக்கு முன்னர் டாக்டர் ஜெர்ரி மோட்டோ அக்கறையான கடிதங்களின் வல்லமையைக் கண்டறிந்தார். முன்னர் தற்கொலைக்கு முயன்று மீண்ட நோயாளிகளுக்கு அக்கறையை வெளிப்படுத்தும் கடிதத்தை அனுப்புவது மீண்டும் அவர்கள் தற்கொலையில் ஈடுபடும் வீதத்தை பாதியாகக் குறைத்துள்ளது என்று அவரது ஆராய்ச்சி கண்டறிந்தது. சமீபத்தில், கடுமையான மனஅழுத்தத்திற்கு உள்ளானவர்களுக்கு, தொடர் சிகிச்சையாக “அக்கறையுள்ள” உரைகள், அஞ்சல் அட்டைகள் மற்றும் சமூகஊடக மீம்களை, மருத்துவ சேவை அளிப்போர் அனுப்பும்போது, இந்த வல்லமையை மீண்டும் கண்டறிந்தனர்.

வேதத்தில் இருபத்தொரு “புத்தகங்கள்” உண்மையில் கடிதங்கள்-நிருபங்கள்-பல்வேறு காரணங்களால் பாடநுபவித்த முதல் நூற்றாண்டு விசுவாசிகளுக்கு அக்கறையுடன் எழுதப்பட்டவை. பவுல், யாக்கோபு மற்றும் யோவான் விசுவாசம் மற்றும் ஆராதனையின் அடிப்படைகளை விளக்கவும், எவ்வாறு பேதங்களைக் களைவது மற்றும் ஒற்றுமையைக் கட்டமைப்பது என்பதையும் விளக்கவும் கடிதங்களை எழுதினர்.

ஆயினும், அப்போஸ்தலனாகிய பேதுரு இவைகளை குறிப்பாக ரோமானிய பேரரசரான நீரோவால் துன்புறுத்தப்பட்ட விசுவாசிகளுக்கு எழுதினார். தேவன் அவர்கள் மேல்கொண்டிருந்த உள்ளான மதிப்பை அவர்களுக்கு பேதுரு நினைப்பூட்டினார். 1 பேதுரு 2: 9-ல் அவர்களை இவ்விதமாய் விவரிக்கிறார், “நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.”

நம்முடைய பெரிய தேவன் தாமே நமக்கு அக்கறையுள்ள கடிதங்கள் நிறைந்த ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார் – ஏவப்பட்ட வேதாகமம் – தன்னுடைய சொந்தமாக அவர் நம்மை தெரிந்துகொண்டதை பற்றிய பதிவு நம்மிடம் எப்போதும் இருக்க வேண்டும். அவருடைய கடிதங்களை நாம் தினமும் படித்து, இயேசு அளிக்கும் நம்பிக்கையை தேவைப்படும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வோமாக.