ஒரு நாள் காலையில் என் வீட்டின் அருகிலுள்ள குளத்தைப் பார்வையிட்டேன். நான் ஒரு தலைகீழான படகிண்மேல் உட்கார்ந்து, ஒரு மென்மையான மேற்கு காற்று நீரின் மேற்பரப்பு முழுவதிலும் காணப்பட்ட மூடுபனியை துரத்துவதைப் பார்த்து யோசித்துக்கொண்டிருந்தேன். மூடுபனி வட்டமிட்டுச் சுழன்றது. சிறிய சூறாவளிகள் எழுந்து அடங்கின. அதற்குப் பின்னர் சூரிய ஓளி மேகங்களின் வழியாக சென்றதினால் மூடுபனி மறைந்தது.
இந்தக் காட்சி எனக்கு ஆறுதல் அளித்தது, ஏனென்றால் நான் சற்று முன் வாசித்த ‘உன் மீறுதல்களை மேகத்தைப் போலவும், உன் பாவங்களை கார்மேகத்தைப் போலவும் அகற்றிவிட்டேன்” (ஏசா. 44:22) என்ற வசனத்துடன் இணைத்துப் பார்த்தேன். தொடர்ச்சியான பாவ எண்ணங்களிலிருந்து என்னை திசைதிருப்ப வேண்டி, நான் அந்த இடத்திற்கு சென்றேன். அந்த பாவங்களை நான் அறிக்கை செய்தாலும், நான் மீண்டும் அந்தப் பாவத்தை செய்யும்போது தேவன் என்னை மன்னிப்பாரா என்று யோசிக்க ஆரம்பித்தேன்.
அன்று காலையில், ஆம் என்ற பதில் எனக்குத் தெரிந்தது. இஸ்ரவேலர் விக்கிரக ஆராதனை பிரச்சனையுடன் போராடிக்கொண்டிருக்கும்போது, தேவன் தம்முடைய தீர்க்கதரிசியான ஏசாயாவின் மூலம் அவர்களுக்கு கிருபை பாராட்டினார். பொய்யான தெய்வங்களை பின்பற்றி போவதை நிறுத்தும்படி கூறினபோதும், ‘நான் உன்னை உருவாக்கினேன். நீ என் தாசன்… நீ என்னால் மறக்கப்படுவதில்லை” (வச. 21) என்று சொல்லி தேவன் அவர்களை மீண்டும் தம்மிடம் அழைத்தார்.
நான் அப்படி முழுமையாக மன்னிப்பை புரிந்துக்கொள்ளவில்லை, ஆனால் தேவனின் கிருபை மட்டுமே நம் பாவத்தை முழுவதுமாக நீக்கி, அதிலிருந்து நம்மை குணமாக்கும் என்பதை புரிந்துக்கொண்டேன். அவருடைய கிருபை முடிவில்லாதது, அவரைப்போல தெய்வீகமானதும், நமக்கு தேவையான போதெல்லாம் அது கிடைக்கிறது. இதற்காக அவருக்கு நன்றியுள்ள வனாயிருக்கிறேன்.
தேவனின் கிருபையை எவ்வாறு துஷ்;பிரயோகம் செய்ய முடியும்? பாவமான பழக்கவழக்கங்களிலிருந்து விடுபட்டு அவருடைய மன்னிப்பை அனுபவிக்க நீங்கள் என்ன முயற்சிகளை எடுப்பீர்கள்?
அன்புள்ள தேவனே, என்னுடைய வாழ்க்கையில் நீர் கிருபையாய் கொடுக்கிற உம்முடைய பிரசன்னத்திற்காக நன்றி. நான் பழக்கமான பாவத்தில் வாழ விரும்பவில்லை. நான் என் பாவத்தை அறிக்கசெய்தபின், நீர் அதை முழுவதுமாக அழிக்கும்போது கிடைக்கும் விடுதலையை அனுபவிக்க உதவி செய்யும்.