2019-ல் பருவமழையின் தோல்வி காரணமாக சென்னை நகரில் ஒரு மிகப்பெரிய தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது. தண்ணீர் வண்டிகளில் இருந்து நீர் பிடிப்பதற்காக தெருவெல்லாம் பிளாஸ்டிக் குடங்கள். பசுமையாய் இருக்கவேண்டிய புறநகர் பகுதிகளில் கூட புல்களும் செடிகளும் காய்ந்து கிடந்தன.
இவ்விதமான உலர்ந்த செடிகளும், களைகளும், “கர்த்தரை விட்டு விலகுகிற இருதயமுள்ள மனுஷன்” (எரே. 17:5) என்னும் எரேமியாவின் விவரிப்பை மனதிற்கு கொண்டு வருகின்றன. அவர் சொல்வதென்னவென்றால், “மாம்சமானதைத் தன் புயபலமாக்கிக்கொள்கிறவன், அந்தரவெளியில் கறளையாய்ப்போன செடியைப்போலிருந்து, நன்மைவருகிறதைக் காணமாட்டான்” (வச. 5-6). மாறாக தேவன் மேல் நம்பிக்கை வைத்து தங்களுடைய பலத்த, நீண்ட வேர்களால் அவரிடமிருந்து சக்தியைப் பெருகிறவர்கள் பஞ்ச காலத்திலும் கூட செழித்து ஒங்குவார்கள்.
செடிகளுக்கும் மரங்களுக்கும் – இரண்டிற்குமே – வேர் இருந்தால்கூட செடிகள் தங்கள் வாழ்க்கை ஆதாரங்களோடு இணைந்திராவிட்டால் அவை உலர்ந்து அழியும். மரங்களோ தங்களுடைய வேர்களை நன்றாக ஊன்றி கடினமான நாட்களில் கூட தங்களை பராமரிக்கும் ஆதாரத்தில் நங்கூரம் பாய்ச்சி செழிக்கின்றன. தேவனைப் பற்றிக் கொண்டு அவருடைய பலத்தையும், சத்துவத்தையும், வேதாகமத்திலிருந்து ஞானத்தையும், அவரோடு ஜெபத்தின் மூலம் உறவு கொள்ளுகிறதினால் பெற்றுக் கொள்ளும்போது நாமும் கூட அவர் தரும் வாழ்வாதாரத்தில் தழைக்கலாம்.
பஞ்சகாலத்தில் ஆண்டவர் உன்னை எப்படி வழி நடத்தி இருக்கிறார்? உன்னுடைய வேரை அவருக்குள் ஊன்றச்செய்து அவரோடு கொள்ளும் உறவை எப்படி நன்றாக வளர்த்துக்கொள்ளலாம்?
வாழ்வு தரும் தேவனே, நீர் தான் என்னை பராமரிக்கிறீர். நான் வாழ்க்கையின் போராட்டங்களின் ஊடாகச் செல்லும்போது எனக்கு தேவையானவைகளைத் தருகிறதற்காக உமக்கு நன்றி.