அமெரிக்காவைச் சேர்ந்த டோன்லான் என்ற ஆசிரியர், மிகச் சிறந்த வாசகர். ஒரு நாள், அது அவளுக்கு எதிர்பாராத ஒரு பரிசைக் கொண்டு வந்தது. அவள் தன்னுடைய காப்பீட்டுப் பத்திரத்தில் இருந்த நீண்ட பக்கங்களை வாசித்துக் கொண்டிருந்தாள். அதன் ஏழாவது பக்கத்தில் ஓர் அற்புதமான வெகுமதியைக் கண்டுபிடித்தாள். “வாசிப்பதற்கு வருமானம்” என்ற போட்டியின் ஒரு பகுதியாக அவள் 10,000 டாலர்களை (ஏறத்தாள 72 லட்சம் ரூபாய்), அங்கு சிறியதாக எழுதப் பட்டிருந்த பகுதியை முதலாவது வாசித்த பெண் என்பதற்காகப் பெற்றுக் கொண்டாள். மேலும் அவர்கள் ஆயிரக்கணக்கான டாலர்களை அப்பகுதியிலுள்ள பள்ளிகளுக்கு வழங்கி, அப்பகுதியிலுள்ள குழந்தைகளின் படிப்புக்கு உதவினர். “நான் எப்பொழுதுமே சிறியதாக எழுதப்பட்டிருப்பதை வாசிப்பவள். நான் மிகவும் ஆச்சரியப்படத் தக்கவர்களில் ஒருத்தி!” என்றாள்.
தேவனைப் பற்றிய “அதிசயங்களைப் பார்க்கும்படி” அவனுடைய கண்களைத் திறக்குமாறு சங்கீதக்காரன் விரும்புகின்றான் (சங்.119:18). தேவன் தன்னை வெளிப்படுத்த விரும்புகின்றவர் என்பதை தாவீது அறிந்திருக்க வேண்டும், எனவே தான் அவன் தேவனோடு நெருங்கி வாழ ஏங்குகின்றான். தேவன் யார் என்பதை அறிந்து கொள்வதும், அவர் நமக்குத் தந்துள்ளவற்றையும், அவரை எப்படி நெருங்கி பின்பற்ற வேண்டும் என்பதும் அவனுடைய ஆசை (வ.24,98). “உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்! நாள் முழுவதும் அது என் தியானம்” (வ.97) என்கின்றான்.
நாமும், தேவனைக் குறித்தும், அவருடைய குணாதிசயங்களைக் குறித்தும், அவர் தருகின்றவற்றைக் குறித்தும் ஆழ்ந்து சிந்தித்து, அவரைக் குறித்துக் கற்றுக் கொண்டு, இன்னும் அவரை நெருங்கி வருவோம். நமக்கு ஆலோசனை வழங்கவும், நம்மை வழி நடத்தவும் அவரை அறிந்து கொள்ள நம்முடைய இருதயத்தை திறக்கவும் தேவன் ஆவலாய் இருக்கின்றார். நாம் அவரைத் தேடினால், அவர் யார் என்பதை காட்டி, அவருடைய பிரசன்னத்தின் மகிழ்ச்சியினால் நம்மை நிரப்பி, நமக்கு அதிசயங்களைக் காண்பித்து வெகுமதியளிக்கின்றார்.
நீ வேதாகமத்தைத் திறந்து வாசிக்கும் போது, தேவனுக்கும், அவருடைய வழிகளுக்கும் உன்னுடைய இருதயமும் மனதும் திறந்துள்ளதா? அதனைக் குறித்து இன்னும் அதிகமாக என்ன அறிந்து கொள்ள விரும்புகின்றாய்?
தேவனே, உம்முடைய வார்த்தைகளை நான் எவ்வளவு நேசிக்கின்றேன். அது என் வாய்க்கு இனிமையாயும், என் நாவிற்கு தேனிலும் இனிமையாகவும் இருக்கின்றது.