ஒவ்வொரு ஆண்டும், 10 லட்சத்துக்கும் அதிகமான இளைஞர்கள், அகில உலக கடிதம் எழுதும் போட்டியில் கலந்து கொள்கின்றனர். 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியின் கருப்பொருள், “நீ உன்னை, காலா காலங்களாகப் பயணிக்கும் ஒரு கடிதமாக கற்பனை செய்து கொள். உன்னுடைய வாசகர்களுக்கு என்ன செய்தியைக் கொடுக்க விரும்புகின்றாய்?” என்பது.

வேதாகமத்தில் அநேக கடிதங்களை நாம் காண்கின்றோம். பரிசுத்த ஆவியானவரின் அகத்தூண்டுதலாலும், வழி நடத்தலாலும் எழுதப் பட்ட இக்கடிதங்கள், பல காலங்களின் வழியாக பயணம் செய்து நம்மை வந்தடைந்துள்ளன. கிறிஸ்தவ சபைகள் பெருகின போது, இயேசுவின் சீஷர்கள், ஐரோப்பாவிலும், ஆசியா மைனரிலும் உள்ள சபையின் மக்கள், கிறிஸ்துவில் பெற்றுக்கொண்ட புதிய வாழ்வை புரிந்துகொள்ள உதவியாக இருக்கும்படி, கடிதங்கள் எழுதினர். இந்த கடிதங்களின் தொகுப்புகளை இன்று நாம் வேதாகமத்தில் வாசிக்கின்றோம்.

இக்கடிதங்களை எழுதிய ஆசிரியர்கள், வாசகர்களுக்கு என்ன செய்தியைக் கொடுக்க விரும்பினார்கள்? யோவான் தன்னுடைய முதல் கடிதத்தில், “ஆதிமுதல் இருந்ததும், நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப் பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டதுமாயிருக்கிற ஜீவ வார்த்தையைக் குறித்து” எழுதுகின்றார் (1 யோவா.1:1). அவர், தான் நேரடியாகச்     சந்தித்த, ஜீவனுள்ள கிறிஸ்துவைக் குறித்து எழுதுகின்றார். தன்னுடைய வாசகர்கள், “ஒருவரோடொருவர் ஐக்கியம் உள்ளவர்களாகவும்”, “பிதாவோடும், அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவோடும்” ஐக்கியமுள்ளவர்களாக இருக்கும்படி இவற்றை எழுதுகின்றார் (வ.3). நாம் ஒருவரோடு ஒருவர் ஐக்கியம் உள்ளவர்களாக இருக்கும் போது நம்முடைய சந்தோஷம் நிறைவாய் இருக்கும் என்று எழுதுகின்றார் (வ.4). வேதாகமத்திலுள்ள இந்த கடிதங்கள், காலங்களை கடந்து வந்து நம்மை ஐக்கியத்திற்குள் இழுக்கின்றது, நித்திய தேவனோடு ஐக்கியமாக இருக்க அழைக்கின்றது.