ஓர் இளைஞன் பள்ளியில் சில பிரச்சனைகளைச் சந்தித்தபோது, அவனுடைய தந்தை அவனுக்கு ஓர் உறுதி மொழியைக் கற்றுக் கொடுத்தார், அதனை அவன் ஒவ்வொரு நாள் காலையிலும் பள்ளிக்குச் செல்வதற்கு முன்பு சொல்லுவான், “தேவனே, இன்று காலை, என்னை எழுப்பினதற்காக உமக்கு நன்றி கூறுகின்றேன். நான் கற்றுக் கொள்வதற்காகவும் பிறரை வழி நடத்துவதற்காகவும் பள்ளிக்குச் செல்கிறேன்………………. அதற்காகவே, .தேவன் என்னைத் படைத்தார்” என்று சொல்லுவான். இந்த உறுதி மொழியின் மூலம் அந்த தந்தை, அந்த இளைஞனுக்கு நம்பிக்கையைக் கொடுத்ததோடு, வாழ்க்கையில் வரும் தவிர்க்கமுடியாத சவால்களைச் சந்திக்க தைரியத்தையும் கொடுத்தார்.
இந்த உறுதிமொழியை தன்னுடைய மகன், மனதில் வைத்துக் கொள்ள உதவிய தந்தை, வனாந்தரத்தில் பயணம் செய்த இஸ்ரவேலருக்கு தேவன் கற்பித்த கட்டளையை, ஒரு வகையில் நிறைவேற்றுபவராக காணப்படுகின்றார். “இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருக்கக் கடவது, நீ அவைகளை உன் பிள்ளைகளுக்கும் கருத்தாய் போதி” (உபா.6:6-7).
இஸ்ரவேலர், நாற்பது ஆண்டுகள் வனாந்தரத்தில் பயணம் செய்தனர், அவர்களின் அடுத்த தலைமுறையினர் தான், வாக்குத்தத்தம் செய்யப்பட்ட தேசத்தைச் சுதந்தரிக்கப் போகின்றனர், அந்த இளைய தலைமுறையினரின் கண்களும் தேவனை நோக்கி இருந்தாலன்றி, அவர்களாலும் வெற்றியடைய முடியாது என்பதை தேவன் அறிவார். எனவே, மோசேயின் மூலமாக தேவன் அவர்களுக்கு நினைவு படுத்துகின்றார். தேவனுக்கு கீழ்ப்படியவும், தேவனை நேசிக்கவும், தேவனுடைய வார்த்தைகளை அவர்களின் பிள்ளைகளும் அறிந்து கொள்ளும்படி செய்யவும், “நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிற போதும், படுத்துக் கொள்ளுகிறபோதும் அவைகளைக் குறித்துப் பேசு” (வ.7) என்கின்றார்.
ஒவ்வொரு புதிய நாளிலும், தேவனுக்கு நன்றியுள்ளவர்களாய் நாம் வாழும்படி நம்மை அர்ப்பணித்து, வேத வார்த்தைகள் நம்முடைய இருதயத்தையும், மனதையும் வழி நடத்தும்படி அவரிடம் நம்மைக் கொடுப்போமாக.
வேத வசனங்களை உன்னுடைய இருதயத்தில் வைத்துக் கொள்ள என்ன முயற்சி எடுக்கப் போகின்றாய்? நாம் நேசிக்கின்றவர்களோடு வேத வார்த்தைகளைப் பேசுவதும் வாசிப்பதும் ஏன் முக்கியமானது?
அன்புள்ள தேவனே, எங்களுக்கு ஒவ்வொரு புதிய நாளையும் தருவதற்காக உமக்கு நன்றி கூறுகின்றேன். உம்முடைய ஞானத்தை என்னுடைய இருதயத்திலும் மனதிலும் வைத்துக் கொள்ள எனக்கு உதவியருளும்.