“நாங்கள் நூலகத்தில் அமர்ந்திருக்கின்றோம், வெளியில் தீப்பற்றியெரிவதைக் காணமுடிகின்றது!” என்ற அவள் குரலில் பயம் தெரிந்தது. எங்களுடைய மகளின் குரல், எங்களுக்கு நன்றாகத் தெரியும். அவளுடைய கல்லூரி வளாகத்தினுள் இருப்பதே அவளுக்கும், அவளோடுள்ள ஏறத்தாள 3000 மாணவர்களுக்கும் பாதுகாப்பானது என்பதை நாங்கள் அறிவோம். 2018 ஆம் ஆண்டு, ஒரு காட்டுத் தீ, தீயணைப்பு துறையினரின் முயற்சியையும் தாண்டி, கல்லூரி வளாகத்தினுள், எதிர்பார்த்ததையும் விட வேகமாகப் பரவியது. அமெரிக்காவின் இப்பகுதியில், வழக்கத்திற்கு மாறாக இருந்த அதிக வெப்ப நிலையும், அவ்விடத்திலிருந்த வறட்சியும், ஒரேயொரு தீப்பொறியினால் ஏற்பட்ட நெருப்பின் மூலம் 97000 ஏக்கர் பரப்பளவு நிலத்தையும் 1600 க்கும் மேற்பட்ட கட்டடங்களையும் அழித்து, மூன்று உயிர்களையும் கொல்ல வல்லதாயிருந்தது. அந்தத் தீயை அணைத்த பின்பு, அவ்விடத்தைப் படம் எடுத்துப் பார்க்கும் போது, பசுமையாக இருந்த அந்த கடற்கரைப் பகுதி, தற்போது எந்த தாவரமும் இல்லாத நிலாவின் தரையைப்போல காட்சியளிக்கின்றது.
யாக்கோபு புத்தகத்தில், அதை எழுதியவர் சிறிய, ஆனால் வலிமையான சில பொருட்களைக் குறித்து எழுதுகின்றார். குதிரையின் கடிவாளம், கப்பலைத் திசைதிருப்பும் சுக்கான் (3:3-4) ஆகியவற்றைக் குறித்து எழுதுகின்றார். இவை நமக்குத் தெரிந்தவையாக இருப்பினும், இவை இப்பொழுது பயனில் இல்லை. இவற்றின் மூலம் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கின்ற சிறிய உறுப்பாகிய நாவைக் குறித்து எழுதுகின்றார். இந்த அதிகாரத்தின் ஆரம்பம், போதிக்கின்றவர்களுக்கு என்று ஆரம்பித்த போதிலும் (வ.1), அதன் பயன்பாடு நம் அனைவருக்கும் குறிப்பிடப் படுகின்றது. நாவு சிறியதாக இருந்த போதிலும், அது மிகப் பெரிய விளைவுகளை ஏற்படுத்தும்.
நம்முடைய சிறிய நாவு வலிமையானது, ஆனால் நமது மிகப் பெரிய தேவன் அதையும் விட பெரியவர். அவர் நமது நாவைக் கட்டுபடுத்தவும் நல்ல வார்த்தைகளை நம்முடைய நாவில் தரவும், அனுதினமும் நமக்கு உதவி செய்ய வல்லவராய் இருக்கின்றார்.
கடைசியாக எப்பொழுது உன்னுடைய நாவை கட்டுப்படுத்த முடியாமல் போனது? தேவ பெலத்தோடு, எவ்வகையில் உன்னுடைய வார்த்தைகளை கட்டுப் படுத்த முடியும்?
இயேசுவே, நான் பிறரைக் காயப்படுத்தும் வார்த்தைகளைப் பேசுகின்றவளாய் காணப்படுகின்றேன். பிறருக்கு வலியையும் வேதனையையும் தருகின்ற வார்த்தைகளை நான் எத்தனையோ முறை பேசியுள்ளேன். என்னுடைய வார்த்தைகளைக் கட்டுப்படுத்த எனக்கு உதவியருளும்.