முயற்சியைக் கை விடாதே. பிறர் வாழ்வில் புன்னகை மலர நீ காரணமாயிரு. நீ அற்புதமானவள். நீ எங்கேயிருந்து வந்தாய் என்பதல்ல, நீ எங்கே போய் கொண்டிருக்கின்றாய் என்பதே முக்கியம். இவையெல்லாம் அமெரிக்காவிலுள்ள ஒரு பள்ளியில் மதிய உணவின் போது வழங்கப்படும் வாழைப்பழங்களில் எழுதப்பட்டிருந்த வாசகங்கள். சிற்றுண்டிச் சாலையின் மேலாளர் ஸ்டேசி, இந்த உற்சாகமளிக்கும் வார்த்தைகளை வாழைப் பழங்களில் எழுதுவதற்கு தனது நேரத்தைச் செலவிட்டார். அவற்றைப் பள்ளிக் குழந்தைகள் “பேசும் வாழைப்பழங்கள்” என்று பெயரிட்டு அழைத்தனர்.
இத்தகைய ஓர் அன்புச்செயல், அந்தியோகியாப் பட்டணத்திலுள்ள “ஆவிக்குரிய இளைஞர்களைக்” குறித்து கேள்விப்பட்ட பர்னபாவின் இருதயத்தை நமக்கு நினைவுப் படுத்துகின்றது (அப். 11:22-24). பர்னபா, மக்களைக் கவர்ந்து இழுக்கக் கூடிய ஆற்றல் பெற்றவன். அவன் நற்பெயர் பெற்றவன், விசுவாசத்தாலும் பரிசுத்த ஆவியாலும் நிரம்பப் பெற்றவன், அவன் புதிய விசுவாசிகளை “கர்த்தரிடத்தில் மன நிர்ணயமாய் நிலைத்திருக்கும் படி” புத்தி சொன்னான் (வ.23). அவன், தான் உதவி செய்ய விரும்பிய அந்த ஜனங்களிடம்: தொடர்ந்து ஜெபம் பண்ணுங்கள். தேவனிடம் விசுவாசமாயிருங்கள். வாழ்வு கடினமாகும் போது, தேவனுக்கு மிக அருகில் இருங்கள். என்பதாக ஆலோசனைக் கொடுத்திருக்கலாம் என நான் நினைக்கின்றேன்.
குழந்தைகளைப் போன்று, புதிய விசுவாசிகளுக்கும் அதிகப் படியான ஊக்கப்படுத்துதல் அவசியம். அவர்கள் ஆற்றல் நிரம்பப் பெற்றவர்கள். அவர்கள் தங்களிடமுள்ள திறமைகளைக் கண்டுபிடிக்கின்றனர். ஆனால், தேவன் அவர்களை என்ன செய்ய வேண்டுமென விரும்புகின்றார், அவர்கள் மூலம் தேவன் எவற்றைச் செய்ய விரும்புகின்றார் என்பதையெல்லாம், முழுவதும் அறிந்திருக்க மாட்டார்கள், மேலும், எதிரியானவன் அவர்கள் விசுவாசத்தில் வளர்ந்துவிடாமல் தடுப்பதற்கான வேலைகளைச் செய்துகொண்டிருப்பான்.
இயேசுவோடு வாழ்ந்து கொண்டிருக்கும் நாம், இயேசுவுக்காக வாழ்வது எத்தனை கடினமானது என்பதை அறிவோம். பரிசுத்த ஆவியானவர் நம்மோடிருந்து, நம்மை வழி நடத்தி, ஆவியின் உண்மைகளை நமக்கு நினைவுபடுத்தி, நம்மை ஊற்சாகப் படுத்தி, பிறரையும் உற்சாகப் படுத்த உதவுவாராக.
கடந்த நாட்களில் தேவன் உன்னை எவ்வாறு உற்சாகப்படுத்தினார்? வேறொருவரை உற்சாகப் படுத்தும்படி தேவன் உன்மூலம் எவ்வாறு கிரியை செய்கின்றார்?
பரலோகத் தந்தையே, நான் உற்சாகப்படுத்தும் படி, இன்று யாரையாகிலும் என்னிடம் அனுப்பும். உம்முடைய நாமம் மகிமைப் படும் படி, அவருக்கு என்ன சொல்ல வேண்டும், அவருடைய தேவைகளை எப்படி சந்திக்க வேண்டும் என்பதை எனக்குக் காட்டியருளும்.