அவர்கள் அந்த மங்கலான புகைப்படத்தை பார்த்தனர், பின்னர் என்னைப் பார்த்தனர், பின்னர் என்னுடைய தந்தையைப் பார்த்தனர், மீண்டும் என்னைப் பார்த்தனர், மீண்டும் என்னுடைய தந்தையைப் பார்த்தனர். அவர்களின் கண்கள் ஆச்சரியத்தால் விரிந்தன. “தாத்தா சிறுவனாக இருந்தபோது, எவ்வாறு இருந்தாரோ அப்படியே நீங்கள் இருக்கின்றீர்கள் அப்பா!” நானும் என்னுடைய தந்தையும் வெகுவாக சிரித்தோம், ஏனெனில் இதனை நாங்கள் ஏற்கனவே அறிவோம், ஆனால் என்னுடைய குழந்தைகள் இதனை சமீபத்தில் தான் கண்டுபிடித்துள்ளனர். நானும் என்னுடைய தந்தையும் வெவ்வேறு நபர்களாக இருந்த போதிலும், ஒரு வகையில், என்னைப் பார்ப்பவர்கள் என்னுடைய தந்தையை இளவயதில் பார்த்ததைப் போலவே உணர்வர்: மிகவும் மெலிந்த உயரமான உருவம், தலை நிறைய கருமை நிற முடி, பெரிய மூக்கு, பெரிய காதுகள். ஆனால், நான் தந்தை அல்ல, நான் என்னுடைய தந்தையின் மகன்.
இயேசுவின் சீஷனான பிலிப்பு ஒரு முறை அவரிடம், “ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும்” (யோவா.14:8) என்று கேட்டான். இயேசு அநேக முறை பிதாவைக் குறித்து தெரிவித்திருந்தும், இம்முறையும் அவருடைய பதில் அவர்களை சிந்திக்க வைக்கின்றது. “என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்” (வ.9) என்று கூறினார். என்னுடைய தந்தைக்கும் எனக்கும் இடையே காணப்படும் வெளித்தோற்ற ஒற்றுமையைப் போலல்லாமல், இயேசு இங்கு ஒரு புரட்சிகரமான கருத்தைத் தெரிவிக்கின்றார், “நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா?” (வ.10) என்று கேட்கின்றார். அவருடைய முழு பண்பும் குணமும் அப்படியே பிதாவினுடையதாக இருக்கிறது.
இயேசு கிறிஸ்து நேரடியாக தன்னுடைய அன்பு சீஷர்களுக்கும் நமக்கும் தெரிவிக்கின்றார். தேவன் எப்படிப்பட்டவர் என்று தெரிந்து கொள்ளவேண்டுமானால் என்னைப் பார் என்கின்றார்.
இயேசுவின் (பிதாவின்) என்னென்ன குணாதிசயங்கள் உன்னில் உறுதியாகக் காணப்படுகின்றன? ஏன்? அவர் உன்னுடைய குணத்தை எப்படி மாற்றுகின்றார்?
இயேசுவே, காரியங்கள் என்னை மேற்கொள்ளுமாற்போல் காணப்படும் போது, நான் உம்மையும், உம்மில் பிதாவையும் காண எனக்கு உதவியருளும். என்னுடைய கண்கள் உம்மையே நோக்கியிருக்க எனக்கு உதவியருளும்.