1999 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 23 ஆம் நாள், கிரகாம் ஸ்டேன்ஸ் மற்றும் அவருடைய இரண்டு மகன்களாகிய பிலிப், தீமோத்தி ஆகியோர் தங்களுடைய சொந்த ஜீப்பில் உறங்கிக் கொண்டிருந்த போது, தீயிட்டு கொழுத்தப்பட்டனர். இந்தியாவிலுள்ள ஒடிசா மாநிலத்தில், ஏழை குஷ்டரோகிகளுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்த தன்னலமற்ற சேவையைக் குறித்து, அதுவரை வெளி உலகிற்கு சிறிதளவே தெரிந்திருந்தது. இந்த விபரீதத்தின் மத்தியில், அவருடைய மனைவி கிளாடிஸ் மற்றும் மகள் எஸ்தர் ஆகியோர் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்கள். அவர்கள் வெறுப்போடு அல்ல, மன்னிப்போடு செயல்படுவதைத் தெரிந்து கொண்டார்கள்.
12 ஆண்டுகள் கழித்து, அந்த வழக்கு முடிவுக்கு வந்த போது, கிளாடிஸ் அம்மையார் ஒரு செய்தியை வெளியிட்டார்கள். “நான் அந்தக் கொலையாளிகளை மன்னித்து விட்டேன், அவர்கள் மீது எனக்கு எந்த கசப்பும் கிடையாது…………..தேவன், கிறிஸ்துவின் மூலம் என்னை மன்னித்தார். அவர் தன்னுடைய சீடர்களும் அதனையே செய்யும்படி விரும்புகின்றார்” என்றார். மற்றவர்கள் நமக்கு என்ன செய்தார்கள் என்பதில் கவனம் செலுத்துவதைவிட, இயேசு நமக்கு என்ன செய்தார் என்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதே மன்னித்தலின் முக்கிய கருத்து என்பதை தேவன் கிளாடிஸ்ஸுக்குக் காட்டினார். தன்னை துன்பப் படுத்தியவர்களுக்கு கிறிஸ்து சிலுவையில், “பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே” (லூக்.23:34) என்று கூறிய வார்த்தைகள், இயேசு கிறிஸ்துவின் மன்னிப்பைக் குறித்து, சகரியா ஆசாரியன் கூறிய தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றியது (லூக். 1:77).
ஒடிசாவில் நடைபெற்ற, நினைத்து கூட பார்க்க முடியாத இத்தகைய சோகத்தை நாம் அனுபவிக்காவிட்டாலும், ஒவ்வொருவரும் ஏதாகிலும் ஒரு வகையில் கஷ்டங்களை சகித்துக் கொண்டுதான் இருக்கின்றோம். ஒரு கணவன் துரோகம் இழைக்கின்றான், ஒரு பிள்ளை எதிர்த்து நிற்கின்றது, வேலை செய்யும் இடத்தில் எஜமானனின் கொடுமை என பல நிந்தனைகளின் மத்தியில் நாம் எப்படி வாழ்வது? நாம் நமது இரட்சகரைப் பார்ப்போம். யாவராலும் தள்ளப்பட்டவராய், கொடுமை படுத்தப் பட்டபோதும், அவர் மன்னித்தார். இயேசுவிடம் நம் பாவங்களுக்கு மன்னிப்பை பெற்றுக் கொள்ளும் போது, நாம் இரட்சிப்பை பெற்றுக் கொள்வதோடு, பிறரை மன்னிக்கக் கூடிய பெலனையும் பெற்றுக் கொள்கின்றோம். கிளாடிஸ் ஸ்டேன்ஸைப் போன்று, நாம் நம்முடைய இருதயத்திலுள்ள கசப்பை நீக்கி விட்டு, மன்னிக்கும் படி தெரிந்து கொள்வோம்.
உன்னுடைய இருதயம் மன்னிப்பதற்கு திறந்திருக்கின்றதா? இயேசு கிறிஸ்து மரித்ததின் மூலம், நாம் பெற்றுக் கொண்ட இரட்சிப்பை, உனக்கு தீங்கு இழைத்தவர்களை மன்னிப்பதின் மூலம், இன்னும் புதிப்பித்துக் கொள்ள முடியுமா?
அன்புள்ள பிதாவே, நான் இன்று யாரை மன்னிக்க வேண்டும் என்பதை எனக்கு காட்டியருளும். நீர் மரித்ததின் மூலம் எனக்குத் தந்த மன்னிப்பை பிறருக்கு கொடுக்க என்னை பெலப்படுத்தியருளும்.