அமைதியற்ற விசுவாசம் (Restless Faith) என்ற புத்தகத்தில், வேத அறிஞர் ரிச்சர்ட் மாவ் என்பவர் கடந்த காலத்தில் கற்றுக் கொண்டவற்றை நினைவில் வைத்திருப்பதின் முக்கியத்துவத்தைப் பற்றி கூறுகின்றார். சமூகவியலாளர் ராபர்ட் பெல்லா கூறிய, “சுகாதாரமான தேசங்கள் என்று கூறப்படுபவை, சமுதாய நினைவுகளைக் கொண்டுள்ளவை” என்ற கூற்றைக் குறிப்பிட்டார். இந்தக் கொள்கை மற்ற சமுதாய உறவுகளான குடும்பங்களுக்கும் பொருந்தும் என்கின்றார், பெல்லா. நினைவுகூருதல் என்பது சமுதாய உறவுகளில் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றது.
வேதாகமம் சமுதாய நினைவுகளைப் பற்றி கற்றுத் தருகின்றது. எகிப்தில் அடிமைகளாக இருந்த இஸ்ரவேலரை மீட்பதற்கு தேவன் செய்த செயல்களை இஸ்ரவேலர் நினைவு கூருவதற்காக பஸ்கா விருந்து ஆசரிக்கும் படி அவர்களுக்கு கற்பிக்கப்பட்டது (யாத். 12:1-30). இன்றுவரை, உலகெங்கிலும் உள்ள இஸ்ரவேலர், ஒவ்வொரு வசந்த காலத்திலும் இந்த முக்கியமான சமுதாய நினைவைக் கொண்டாடி வருகின்றனர்.
கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களுக்கு பஸ்கா மிகப் பெரிய அர்த்தத்தைக் கொடுக்கின்றது, ஏனெனில் பஸ்கா, மேசியா சிலுவையில் நிறைவேற்றின வேலையைக் சுட்டிக் காட்டுகின்றது. பஸ்கா ஆசரிப்பின் நாட்களில், இயேசு சிலுவையில் மரிப்பதற்கு முந்தின நாள் இரவில், அவர் தன்னுடைய நினைவாகக் கைக்கொள்ள வேண்டிய இராப்போஜனத்தை நிர்ணயித்தார். “அவர் அப்பத்தை எடுத்து, ஸ்தோத்திரம் பண்ணி, அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து; இது உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது; என்னை நினைவு கூரும்படி இதைச் செய்யுங்கள்” என்றார் என லூக்கா 22:19ல் காண்கின்றோம்.
ஒவ்வொரு முறையும் நாம் தேவனுடைய ராப்போஜனப் பந்தியைக் கொண்டாடும்படி சேரும் போது, தேவன் நம்மை பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து இரட்சித்தார், நமக்கு நித்திய வாழ்வையும் கொடுத்தார் என்பதை நினைவு கூருகின்றோம். நாம் அனைவரும் சேர்ந்து நினைவுகூரத் தகுந்தது அவருடைய சிலுவை என்பதை இயேசுவின் மீட்கும் அன்பு நமக்கு நினைவுபடுத்துவாராக.
பிதாவே, உம்முடைய குமாரனையே எங்களுக்கு ஈவாகத் தந்தமைக்காகவும், உம்முடைய பந்தியில் கலந்துகொள்ளும் போதெல்லாம் இயேசுவின் தியாகத்தை நினைவு கூரச் செய்வதற்காகவும் உமக்கு நன்றி கூறுகின்றேன்.
இயேசுவை விசுவாசிப்பவர்களோடு சேர்ந்து திருவிருந்தில் கலந்து கொள்வது மிகவும் விலையேறப்பெற்றது. ஏன்? இந்த நிகழ்வில் கலந்து கொள்வது இயேசுவின் தியாகம் நிறைந்த அன்பினை உனக்கு எப்படி நினைவுபடுத்துகின்றது?